காவிரி உள்ளிட்ட ஆறுகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் வல்லுநர் குழு அமைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு பி,ஆ.ர் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர்
பிஆர் பாண்டியன் தஞ்சாவூர் மாநகரத்தில் கரந்தை, கரம்பை பகுதிகளில் வடவாறு ஆற்றில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதை நேரிடையாக பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..
வடவாறு தஞ்சை மாநகரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தூரம் மூவர்கோட்டை வரையிலும் வடவாறு என்ற பெயரிலும்,மூவர் கோட்டையில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தூரம் பூமி மட்டத்திற்கு மேல் புதுஆறு வடிவமைக்கப்பட்டு வடவாறு விரிவாக்க கால்வாயாக முத்துப்பேட்டை அருகே திருமேணி ஆறு மூலம் கண்ணணாற்றில் கலக்கிறது.
தஞ்சாவூர், அம்மாப்பேட்டை, நீடாமங்கலம், மன்னார்குடி, மதுக்கூர் ,கோட்டூர் ஒன்றியப்பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகள் வழியாக சென்று 72,000 ஏக்கர் நிலப்பரப்பிற்கு பாசன ஆறாகவும் விளங்குகிறது.
இந்த ஆற்றில் தஞ்சை மாநகரத்தில் கழிவுநீர் முழுமையும் கலக்கப்படுவதால் ஒட்டுமொத்தமாக வரக்கூடிய தண்ணீர் மாசடைந்து மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆட்படுகிறார்கள். தொற்றுநோய் பரவும் பேராபத்து ஏற்படுகிறது.
நிலத்தடி நீர்,காற்று மாசடைந்து சுவாசிக்கும் மக்களுக்கு மருந்தில்லா நோய் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.இதனை தடுத்து நிறுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் காவிரி வைகை தாமிரபரணி தென்பெண்ணை பாலாறு உள்ளிட்ட பெரும்பாலான பாசன ஆறுகள் கழிவு நீர் கால்வாய்களாக மாறி விட்டது. வழியோர மாநகரங்களின் கழிவுநீரை ஆங்காங்கு ஆறுகளில் கலக்க செய்கிறார்கள். மேலும் காவிரியில் சாயக்கழிவுகள், ஆலைகளில் வெளியேற்றப்படும் அமிலக் கழிவுகள் வரை வெளியேற்றப்படுகிறது.
இதனால் ஆறுகள் மாசடைந்து ஆற்றுக் கரைகளில் குடியிருக்கும் மக்கள் தொற்று நோய்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். நிலத்தடி நீர் மாசடைந்து பெரும் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது.
விளைநிலங்கள் மலடாக மாறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆறுகளின் பாசனம் பெறும் விளைநிலங்களில் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள் நஞ்சாகி,மருந்தில்லா நோய் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே இதனை கருத்தில் கொண்டு விரைந்து நீதிபதி தலைமையில் ஒரு உயர்மட்ட வல்லுநர் குழுவை அமைத்து ஆய்வு செய்து நிரந்தர தடை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
பேட்டியின் போது தஞ்சை மாநகர பொறுப்பாளர் பழனியப்பன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.