எண்ணெய் உற்பத்தியில் கொடி கட்டி பறக்கும் குவைத் நாட்டில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், அரசு முறையிலான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்தியா மற்றும் குவைத் ஆகிய இருநாடுகளுக்கு இடையே நல்லுறவு மேம்படுத்துவது, தொழில், வர்த்தகம், உலக பாதுகாப்பு, கொரோனோவுக்கு எதிரான போர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது உள்ளிட்டவை குறித்து குவைத் அரசுடன் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், விரிவான ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள கொரோனோ தொற்று தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு தேவையான மருந்துப் பொருட்கள், ஆக்சிஜன் ஆகியவற்றை குவைத் அரசு, இந்தியாவுக்கு தாராளமாக வழங்கி உதவி வருகிறது.
இந்தநேரத்தில், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் குவைத் பயணம், இந்தியாவுக்கு மேலும் பல்வேறு மருத்துவ உதவிகளைப் பெற்று தரும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் வெளியுறவுத்துறை அதிகாரிகள்.
இதனிடையே, ஒன்றிய வெளியுறவுத்துறையில் பணியாற்றும் ஆர்வத்துடன் இளம் பெண் பட்டதாரிகள் ஏராளமானோர் ஐஃஎப்எஸ் எனும் இந்திய வெளியுறவுத்துறை சேவைப் பணியை தேர்வு செய்து, வெற்றிக்கு உரிய சாதனையாளராக திகழ்வதாக, அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஐஃஎப்எஸ் அதிகாரிகளுடன் சந்தித்து உரையாடிய ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர், பெண் அதிகாரிகளின் மூலம் இந்தியாவின் புகழ், உலகம் முழுவதும் பரவி வருவதாகவும், இளம் பெண் ஐஃஎப்எஸ் அதிகாரிகளின் ஆர்வமிக்க பணிகளால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறையில் மட்டும் 12 செயலாளர்கள், கூடுதல் செயலாளர்கள், 17 தூதுவர்கள் மற்றும் 5 கவுன்சில் ஜெனரல் என ஏராளமான பெண் ஐஃஎப்எஸ் அதிகாரிகள் சேவையாற்றி வருவதாக புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், அண்மையில் ஐஃஎப்எஸ். தேர்வில் வெற்றிப் பெற்றவர்களில் 40 சதவீதம் பெண் பட்டதாரிகள் என்றும் அவர்கள் மூலம் இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலம் அமையும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
இளம் பெண் அதிகாரிகள் உள்பட ஐஃஎப்எஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற அனைத்து அதிகாரிகளும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கரை சந்தித்து வாழ்த்துப் பெற்ற புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இளம் அதிகாரிகளை கௌரவப்படுத்தியுள்ளார் ஒன்றிய அமைச்சர்.