Sat. Nov 23rd, 2024

சென்னை: தமிழகத்தில் தற்போது சென்னையில் மட்டும் 1,060 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாகவும், மற்ற 36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் இல்லை எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவிட் பேரிடர் காலங்களில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தரக்கூடிய உணவுகள், அவர்கள் தங்கும் வசதிகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முறைகேடுகள் நடைபெறுவதாக தகவல் வந்துள்ளது. இதனையடுத்து பிரசித்தி பெற்ற உணவகங்கள் மூலம் தரமான உணவு வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், கோவிட் முதல் அலையின் போது செலவிடப்பட்ட தொகையை விட தற்போது ஒரு நாளைக்கு ரூ.30 லட்சம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளின் கையிருப்பை சொல்லக்கூடாது என மத்திய அரசு கூறுகிறது. கையிருப்பு சொல்லவில்லை எனில் மக்கள் காத்திருந்து ஏமாற்றம் அடைவர். உண்மை நிலையை சொல்வது தான் உகந்தது. தமிழகத்திற்கு இதுவரை ஒரு கோடியே ஒரு லட்சத்து 63 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில், 97,62,957 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தற்போதைக்கு சென்னையில் மட்டும் 1,060 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பு உள்ளது. மற்ற 36 மாவட்டங்களில் தடுப்பூசி இல்லை.
இந்த ஜூன் மாதத்தில் 37 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு தருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அதில், 6.5 லட்சம் தடுப்பூசிகள் 13-ம் தேதிக்குள் அனுப்புவதாக தெரிவித்துள்ளனர். தடுப்பூசிகள் வந்ததும் அதனை மற்ற மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும். கோவிட் பாதிப்பை பொறுத்தவரையில் தமிழகத்தில் பல மடங்கு குறைந்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் எந்த மருத்துவமனையிலும் காலி படுக்கைகள் இல்லை என்று இருந்த நிலையில், நேற்றுவரை 45,484 படுக்கைகள் காலியாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.