சிறு,குறு நிறுவனங்கள் வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்த அவகாசம் வழங்க ஒன்றிய அரசுக்கும், ரிசர்வ் வங்கிககும் வலியுறுத்த வேண்டும் என்று 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ரூ. 5 கோடி வரை கடன் நிலுவை வைத்துள்ள சிறு கடனாளர்களுக்கு ஆறு மாதம் அவகாசம் தர வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கேரளா, ஓடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 12 மாநில முதல்வர்களுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி உள்ளார் முதல்வர்.
தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்கான மிகச்சரியான ஒற்றைப் பேரமைப்பாக ஒன்றிய அரசே செயல்பட வேண்டும் என்பதை மாநில முதலமைச்சர்கள் சுட்டிக்காட்டினோம். ஒன்றிய அரசே முழு அளவில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்று மாநிலங்கள் வலியுறுத்திய நிலையில், அனைவரின் கூட்டு முயற்சிகளின் காரணமாக, பிரதமர் தனது முந்தைய கொள்கையை நேற்று மாற்றியமைத்துள்ளார்.
இன்றைய சூழ்நிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சிறு கடனாளர்களை, கொரோனா பெருந்தொற்றின் முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளின்போது, வெவ்வேறு தன்மைகளில் நடத்தும் பிரச்சினை தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் மீண்டும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்.
2021 ஏப்ரல்-ஜூன் மாதங்களில் உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில், அந்தந்த மாநில அரசுகளால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையின்போது கடனாளர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம் போன்ற நிவாரணம் தற்போது அளிக்கப்படவில்லை.
இதனால், கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைத் தள்ளிவைத்து, கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுளேன்.
எனவே, ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, ரூ.5 கோடி வரையில் நிலுவைகளைக் கொண்டுள்ள அனைத்துச் சிறு கடனாளர்களுக்கும், குறைந்த அளவு 2021-2022 ஆண்டின் முதல் இரு காலாண்டுகளுக்கு, கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும்.
இதுதொடர்பாக தமிழக அரசின் கருத்தினை ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆகிய இருவரின் கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும் என முதலமைச்சர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இக்காலக்கட்டத்தில் நமது கூட்டு வலிமையை நாம் மீண்டும் வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் 12 மாநில முதல்வர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.