Sun. May 19th, 2024

சென்னை அருகே உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 11 சிங்கங்கள் உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்டதை அடுத்து கொரோனோ தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், பெண் சிங்கங்கள் உள்பட 9 சிங்கங்களுக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மே மாத இறுதி வாரத்தில் இருந்து தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து, மாத்திரை மற்றும் சத்து மிகுந்த உணவுகளை வழங்கி வந்தனர்.

இருப்பினும் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்ட நிலா என பெயரிடப்பட்ட 9 வயது பெண் சிங்கம், கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தது. இதனையடுத்து மற்ற சிங்கங்களை தனிமைப்படுத்தி, தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உயிரியல் பூங்காவில் நேற்று வனத்துறை உயர் அதிகாரிகள்ஆய்வு மேற்கொண்டு, சிங்கங்களின் உடல் நிலையை கேட்டறிந்தனர். இதனிடையே, பூங்காவில் உள்ள சிறுத்தைப் புலி உள்ளிட்ட மற்ற விலங்குகளுக்கும் கொரோனோ தொற்று பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்கள், தலைமை வன பாதுகாப்பு அதிகாரி யுவராஜ், பூங்கா கால்நடை மருத்துவர்கள், ஆகியோரும் பரிசோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளும், வைட்டமின் மாத்திரைகளும், சத்தான உணவு வகைகளும் வழங்கப்பட்டன. கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கவிதா, சசி என்று பெயரிடப்பட்டுள்ள இரண்டு பெண் சிங்கங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.


இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மின் மோட்டாரால் இயக்கப்படும் வாகனத்தில் சென்று கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்களின் உடல்நிலை குறித்து கால்நடை மருத்துவர்களிடம் விசாரித்தார்.
தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள சிங்கங்களை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிறப்பு சிகிச்சை அளிக்க வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்தும், ஹைதராபாத் உள்ளிட்ட பிற இடங்களில் உள்ள உயிரியல் பூங்காவில் வன விலங்குகள் கொரோனோ தொற்றுக்கு ஆளானபோது வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்தும் விசாரித்ததுடன், பெண் சிங்கங்கள் உள்பட அனைத்து சிங்கங்களின் உயிர்களையும் காப்பாற்றும் முயற்சியில் முழுக் கவனம் செலுத்துங்கள் என உயிரியல் பூங்கா நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரைகளை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.