சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் காவல் ஆணையர் கொரோனா சிகிச்சை பெற்று வரும் காவல் அலுவலர்களை கவச உடையுடன் சந்தித்து பூரண நலம் பெற வாழ்த்து தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூருக்கு ஆய்வுக்கு சென்றிருந்தபோது, அங்குள்ள ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கொரோனோ நோயாளிகளை கவச உடை அணிந்து சென்று பார்த்து சிகிச்சை குறித்து விசாரித்தார். மேலும், விரைவாக உடல்நலம் பெற்று வீடு திரும்பவும் முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.
அதேபோல, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ்.ஸும், உயிருக்குப் பயப்படாமல் துணிந்து கொரோனோ சிகிச்சை மையத்தில் சிகிச்சைப் பெற்று வரும் காவல்துறை அலுவலர்களை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் கொரோனோவால் பாதிக்கப்படும் காவல்துறையினருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க பிரத்யேக மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் குறைந்த அளவில் பாதிப்படைந்து தனிமைப்படுத்தப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படும் நபர்களுக்கும் அங்கு வசதி செய்து தரப்பட்டுள்ளது.
கோவிட் கேர் சென்டர் எனும் பெயரில் இயங்கி வரும் அந்த மையத்தில் 360 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையத்தில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த மாதம் 27 ஆம் தேதி இயங்கி வரும் அந்த மையத்தில் 1055 காவல்துறையினர் அனுமதிக்கப்பட்டு பயன் பெற்றுள்ளனர் . இதுவரை 925 காவல்துறையினரும், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் தொற்று குறைந்து சிகிச்சை முடித்து நல்ல நிலையில் வீடு திரும்பியுள்ளனர் .
அந்த மையத்திற்கு நேற்று சென்ற பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், கொரோனோ கவச உடை அணிந்து, உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து, விரைவாக உடல் நலம் பெற்று பணிக்கு திரும்ப வாழ்த்துக் கூறினார்.
இரண்டாவது நாளாக இன்றும் அந்த மையத்திற்கு நேரில் சென்ற காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,
கோவிட் கேர் சென்டரில் பணிபுரிந்து வரும் மருத்துவ குழுவினர், பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோரை சந்தித்து, தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து பழங்கள் வழங்கினார் அவருடன் உயர்நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையர்.E T சாம்சன்.(பொறுப்பு மைலாப்பூர் மாவட்டம்)மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் V.பாலசுப்பிரமணியம் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.