கொரோனாவின் உச்சகட்ட தாக்குதலில் சிக்கி தவிக்கிறது தமிழகம். இந்த கொடூர தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு மக்கள் உதவ வேண்டுமென்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அரசுத் துறையினர் தங்களது ஒரு நாள் சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர். திருநெல்வேலி காவல்துறையில் இரண்டு பேர் தங்களது ஒரு மாத சம்பளத்தை முதல்வர் கொரோனா பொது நிவாரண நிதிக்கு அனுப்பி தமிழகத்தில் முன்மாதிரி அரசு ஊழியர்களாக திகழ்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாநகர காவல்துறை உளவுப் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றும் சொர்ண மகாராஜன் என்பவர் தனது ஒரு மாத ஊதியத்தை தமிழக முதல்வர் கொரோனா பொது நிவாரண நிதிக்கு அனுப்பினார். பல்வேறு தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
இது குறித்து சொர்ண மகாராஜனிடம் பேசினோம்…
” ஒரு குடும்பத்தலைவர் கொரோனாவினால் இறந்தால் அந்த குடும்பம் சந்திக்கும் அவலத்தை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். உலகமெங்கும் பல குடும்பங்கள் மிகுந்த அவலத்தில் சிக்கியிருக்கின்றன.இந்த இக்கட்டான நிலையில் நாமும் நம்மால் ஆன உதவிகளை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் என்னுடைய ஒரு மாத சம்பளத்தை தமிழக முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பினேன். இதற்கு என் மனைவி மற்றும் என் பெற்றோர் ஒத்துழைத்தது ஒரு முக்கியமான காரணம்”என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
காக்கிச் சீருடையில் மறைந்திருக்கும் கனிவு, இதுபோன்ற துயர் மிகுந்த நேரங்களில்தான் வெளியுலகிற்கு தெரியவருகிறது..
நெல்லை மாவட்ட காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சங்கர் என்பவரும் தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை முதல்வர் கொரோனா பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார் என்ற தகவல் கிடைத்தவுடன் அவரிடமும் பேசினோம்..
நானும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவன் தான். அதன் பாதிப்புகளை முழுமையாக உணர்ந்தவன். இப்போது நிறைய பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களுக்கு நம்மால் ஆன உதவியை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் எனது ஒரு மாத சம்பளத்தை முதல்வர் கொரோனா பொது நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளேன்.
அதற்கு முன்பாக என்னுடைய மனைவியிடமும் கலந்து பேசியபோது அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்து, தாராளமாக அனுப்பி வையுங்கள் என்று என்னை உற்சாகப்படுத்தினார். இனி வரும் நாட்களிலும் கொரோனா நோயாளிகளுக்கு என்னாலான உதவிகளை தொடர்ந்து செய்வேன்”என்றார்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில்
ஒவ்வொருவரும் நம்மால் ஆன உதவியை செய்யவேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கும் வகையில் தங்களது ஒரு மாத சம்பளத்தை கொரானா பொது நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ள கனிவு மிகுந்த காவல்துறை அலுவலர்களை மனதார பாராட்டுவோம்……..