நாடுமுழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர் அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இதுதொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையின் போது மத்திய அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளை நீதிபதிகள் கூறினார்கள். மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனம் மூலம் இரண்டு வகையான கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன, இந்தியாவில் 18- வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் டிசம்பருக்குள் தடுப்பூசி செலுத்த இதுவே போதுமானது என்று தெரிவித்தார்.
இதுமட்டுமின்றி மற்ற நாடுகளில் இருந்தும் கொரோனா தடுப்பூசி வாங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும், எனவே தடுப்பூசி தட்டுப்பாடு ஏதுமில்லை என்றும் துஷார் மேத்தா கூறினார்.
அப்போது குறுக்கிட்டு நீதிபதிகள், ஒரு தேசிய நெருக்கடியில், மத்திய அரசு முழு நாட்டிற்கும் தடுப்பூசிகளை வாங்க வேண்டும். இந்த விஷயத்தில் மாநிலங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. சர்வதேச அளவில் பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அசு, மாநிலங்களுக்கான தடுப்பூசிகளை கொள்முதல் செய்து தருகிறோம் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும். இதனால் ஒரு தெளிவு கிடைக்கும். மொத்தமாக வாங்குவதால் குறைந்த விலையில் தடுப்பூசிகள் கிடைக்கிறது என்று கூறும் போது, மாநிலங்கள் ஏன் அதிக விலை தர வேண்டும். நாடு முழுவதும் தடுப்பூசிகளுக்கு ஒரே விலை இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. கொரோனோ போன்ற பேரிடர் காலங்களில் ஒன்றிய அரசுதான், தடுப்பூசி மருந்துகளை ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு முறையாக பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்காக அனைவரும் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள், தடுப்பூசி க்கான பதிவை எப்படி செய்ய முடியும்..டிஜிட்டல் இந்தியா என்று பெயரளவுக்கு மட்டுமே மத்திய அரசு சொல்லிக் கொண்டிருக்கிறதே தவிர, அந்த திட்டம் கிராமங்கள் தோறும் இன்னும் சென்றடையவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.