ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை கரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது கூறியதாவது:
ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பூசி டோஸ் 6-ம் தேதி தான் வரும் என்பதால் மேற்கண்ட தேதிகளில் தடுப்பூசி செலுத்தப்படாது.
கடந்த மாதம் தமிழகத்திற்கு 2 மடங்கிற்கு மேல் தடுப்பூசி டோஸ் ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜூன் மாதம் 42.58 லட்சம் தடுப்பூசி டோஸ் ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
மத்திய அரசிடம் இருந்து இந்த மாதத்திற்கான 1.74 லட்சம் தடுப்பூசி டோஸ் வரவேண்டியுள்ளது.
இவ்வாறு டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழகத்தில் கொரோனோ தொற்று பரவல் கட்டுக்குள் வராத நிலையில், இளம்தலைமுறையினர் முதல் வயோதிகர்கள் வரை அனைத்து வயதினரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அண்மையில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
புதிதாக தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருபவர்கள் உள்பட ஏற்கெனவே முதல் தவணையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கூட இரண்டாவதுதவணையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயாராக இருந்த போதும் கூட, அவர்களுக்கு தேவையான அளவுக்கு தடுப்பூசி இல்லாமல் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசி முழுமையாக கிடைத்தால்தான், அனைத்து தரப்பினருக்கும் முறையாக தடுப்பபூசி செலுத்த முடியும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
தமிழகம் போல நாடு முழுவதும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.