Mon. May 13th, 2024

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அ.ம.மு.க.வில் இருந்து விலகி திமுக.வில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. கரூர் மாவட்டத்தில் தனக்கு எதிராக அரசியல் செய்த ஜென்ம பகையாளி எதிர்முகாமில் தஞ்சமடைந்ததால், அன்றைய தினம் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார் அப்போதைய அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களை எல்லாம் சரிகட்டி, அதிமுக.வில் இணைத்துக் கொண்டார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

அதற்கான விழா சென்னையில் நடைபெற்றது. செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்ட அந்தக் கூட்டத்தில் பேசிய அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செந்தில் பாலாஜியை அரசியல் வியாபாரி என்றும் ஐந்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சென்றவர் என்றும் கொள்கைப் பிடிப்பு இல்லாதவர், நன்றியுணர்வு இல்லாதவர் என்றெல்லாம் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார் எடப்பாடி பழனிசாமி.

இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றைய நிலைமையோ தலைகீழாகிவிட்டது. முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்துவிட்டு எதிர்க்கட்சித்தலைவர் என்ற அந்தஸ்தோடு சேலத்திலேயே முடங்கி கிடக்கிறார். அதே மாவட்டத்திற்கு பொறுப்பாளராக முதல்வர் மு.க.ஸ்டாலினால் நியமிக்கப்பட்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பழைய வன்மத்தை தீர்த்துக் கொள்ள, அரசியல் ஆட்டத்தை தொடங்கிவிட்டார்.

எதிர்க்கட்சித்தலைவர் என்ற அந்தஸ்தை வைத்துக் கொண்டு சேலம் மாவட்டத்தில் , முதல் அமைச்சராக இருந்தபோது செலுத்திய அதிகாரத்தையே இப்போதும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் காட்ட முயலும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆரம்பத்திலேயே செக் வைத்து அவரை அவமானப்படுத்தி விட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்.

தனது சம்மதம் இல்லாமல், சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியரோ, காவல் கண்காணிப்பாளரோ, அரசு மருத்துவமனை முதல்வர்களோ எடப்பாடி பழனிசாமியை சந்திக்க கூடாது. அவரின் எந்த உத்தரவுக்கும் செவி சாய்க்கக் கூடாது. ஆலோசனை கூறுகிறேன் என்று அலுவலகம் தேடி வந்தாலும் கூட உடனடியாக சந்திக்க கூடாது. பல மணிநேரம் காக்க வைத்துதான் சந்திக்க வேண்டும். முடிந்தவரை அவரை சந்திக்காமல் தவிர்க்கவும் வேண்டும் என்று கறாராக கூறி விட்டாராம் அமைச்சர் செந்தில் பாலாஜி.

முதல் அமைச்சர் பதவியில் அமர்ந்து கொண்டு சேலம் மாவட்டத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு இன்றைய காலகட்டம் சந்திராஷ்டமம் போலதான்..அமைச்சர் செந்தில் பாலாஜியை மீறி சேலம் மாவட்டத்தில் அலுவலக உதவியாளருக்கு கூட எடப்பாடி பழனிசாமி உத்தரவு போட்டுவிட முடியாது. கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக தன்னை பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த எடப்பாடி பழனிசாமியை அவமானப்படுத்தி, சேலம் மாவட்டத்திலேயே முடங்கி போகச் செய்யும் அளவுக்கான திட்டங்களோடுதான் சேலத்தில் முகாமிட்டிருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

கடந்த நான்காண்டுகளாக எந்தெந்த அரசு அதிகாரிகள் எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு ராஜ மரியாதை கொடுத்தார்களோ, அப்படியே அத்தனை அரசு அதிகாரிகளும் இன்றைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சல்யூட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  

எம்.எல்.ஏ., என்ற முறையிலோ, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலோ எந்தவொரு அரசாங்க அலுவலகத்திற்கும் செல்ல வேண்டும் என்றாலும் கூட அமைச்சர் செந்தில் பாலாஜியின் சம்மதம் கிடைத்தால்தான், அந்தந்த அலுவலகங்களின் கதவுகள் எடப்பாடி பழனிசாமிக்கு திறக்கும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த நான்காண்டுகளில் பலமுறை ஆய்வுக் கூட்டத்தை நடத்திய எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு அந்த ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே காலை வைக்க வேண்டும் என்றாலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அனுமதி வேண்டும் என்பதுதான் இன்றைய யதார்த்தம்.

எடப்பாடி பழனிசாமி அமர்ந்த ஆசனத்தில் இன்றைக்கு அமர்ந்து ஆட்சிப் புரிந்து கொண்டிருக்கிறார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி..அமைச்சரின் கார் சென்ற பிறகுதான் எதிர்க்கட்சித்தலைவரான எடப்பாடி பழனிசாமிக்கே வழியை விடுகிறார்கள் சேலம் மாநகர காவல்துறையினர்.. இனி வரும் நாட்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு அவமான நிகழ்வுகள்தான் அதிகமாக அரங்கேறும் என்கிறார்கள் இ.பி.எஸ்.ஸின் ஆதரவு அதிமுக நிர்வாகிகள்..

அரசியலில் மட்டுமல்ல, மனித வாழ்க்கையிலும்  எதுவுமே நிரந்தரம் இல்லை என்பது இப்போதாவது எடப்பாடி பழனிசாமிக்கு புரிந்தால் சரி…