Sat. Nov 23rd, 2024

சேலத்தில் பணியாற்றி வந்த ஜுனியர் விகடன் இதழ் புகைப்பட கலைஞர் விஜயகுமார், கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி நேற்று அவா உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. சேலம் மாவட்ட ஊடகவியலாளர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இளம் வயதான விஜயகுமார், துடிப்புடன் பணியாற்றி வந்தார். முன்களப் பணியாளரான அவர், கொரோனோவுக்கு பலியான செய்தி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சேலம் மாவட்டத்தில் கொரோனோ தடுப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வரும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டு, திமுக சார்பில் விஜயகுமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதுடன், திமுக சார்பில் 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் கேட்டுக் கொண்டார்.

முதல்வரின் வழிகாட்டுதலின்படி, இன்று அவரது குடும்பத்தினரை அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக எம்.பி. பார்த்திபன், மாநகர மத்திய மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து, விஜயகுமாரின் மனைவியிடம்   2 இலட்சம் ரூபாய் நிதியுதவியையும் அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.

ஊடகவியலாளரின் துயரில் பங்கெடுத்ததுடன் 24 மணிநேரத்திற்குள்ளாகவே அமைச்சர் மூலம் நிதியுதவி வழங்க நடவடிக்கை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனிதநேயத்திற்கு சேலம் மாவட்ட பத்திரிகையாளர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.