Fri. May 17th, 2024

2018 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதியன்று தூத்துக்குடியில் நச்சு ஆலையான ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட மக்களே ஒன்று திரண்டு பெரும் போராட்டததை நடத்தினர். அதற்கு முன்பாக 99 நாட்கள் அமைதியாக போராடிய மக்களோடு பேச்சுவார்த்தை நடத்த அன்றைக்கு ஆளும்கட்சியாக இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனால், 100 வது நாள் போராட்டத்தை வீரியமிக்கதாக மாற்ற, முன்னறிவிப்பு செய்துவிட்டு, தூத்துக்குடியில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக திரண்ட மக்களால், தூத்துக்குடி நகரமே உணர்ச்சிவசப்பட்டிருந்தது.

ஊர்வலத்தில் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க, வீர முழக்கங்களால் உந்தப்பட்ட ஒரு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி படையெடுத்தது. அவர்களை தடுத்து நிறுத்த காவல்துறையினர் எடுத்த எந்த முயற்சிகளும் பலனிக்காத காரணத்தால், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நோக்கி கற்களை வீசி காவல்துறையினர் வன்முறைக்கு வித்திட்டனர்.

மக்களிடம் தன்னெழுச்சியாக எழுந்த ஆவேசத்தால், தூத்துக்குடி நகரமே போர்க்களம் போல மாறியது. அந்த நேரத்தில், மக்களை எச்சரிக்காமல், குருவியை சுடுவதுப்போல, போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். மஞ்சள் டீ சர்ட் அணிந்திருந்த போலீஸ்காரர் சுட்டத்தில் 11 பேர் நிகழ்விடத்திலேயே சுருண்டு விழுந்து மாண்டனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றவர்களில் மேலும் 2 பேர் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தனர்.

அந்த நிகழ்வு குறித்து சென்னையில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, துப்பாக்கிச் சூட்டையே தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று எந்தவொரு சலனமும் இன்றி கூறினார்.

படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 4 பேர், உடல் பலவீனமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்த அப்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துப்பாக்கிச் சூட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு நிவாரண நிதியும், அரசு வேலையையும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அப்போதைய அதிமுக அரசு, அப்பாவி மக்களின் குடும்பத்தை பற்றி துளியும் கவலைப்படவில்லை.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 குடும்பங்களின் வாரிசுகள் உள்பட 17 குடும்பங்களுக்கு இன்றைக்கு விடியல் கிடைத்திருக்கிறது. மதுரையில் கொரோனோ தடுப்பு பணிகளை ஆய்வு சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17 குடும்பங்களின் வாரிசுகளுக்கும் அரசு வேலைக்கான பணி ஆணைகளை வழங்கியுள்ளார்.