மே 2 ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே, கேரளாவிலும் தேர்தல் முடிவுகள் வெளியாகின. ஏற்கெனவே ஆளும்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்து சாதனையைப் பிடித்தது. கேரள தேர்தல் வரலாற்றில் பெரும்பான்மையான ஏற்கெனவே ஆட்சியில் இருந்த அரசை, அந்த மக்கள் மீண்டும் தேர்ந்தெடுப்பது என்பது அத்திப் பூ பூத்ததைப் போல அபூர்வமாகதான் நடைபெறும்.
அந்தவகையில் 2021 தேர்தலில் ஆளும்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியே அங்கு மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. தற்போதைய முதல்வர் பினராயி தலைமையிலேயே மீண்டும் ஆட்சி அமைக்கப்படுமா என்று அவரிடமே செய்தியாளர்கள் கேட்டபோது, தங்கள் கட்சியின் அகில இந்திய தலைமைதான் அதனை முடிவு செய்யும் என்று தெரிவித்தார். அவரது தலைமையிலான ஆட்சிக்குதான் கேரள மக்கள் வாக்காளித்திருந்தாலும், அவரே மீண்டும் முதல்வராக ஆட்சியில் அமர்வது என்பது அவரால் கூட முடிவு செய்ய முடியாத வகையில்தான், கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டமைப்பு உள்ளது.
கிட்டதட்ட 17 நாட்கள் ஆலோசனைக்குப் பிறகு கேரளாவில் அமையவுள்ள புதிய அமைச்சரவைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதைப் பார்த்து, கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமல்ல எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய ஒட்டுமொத்த கேரளமும் அதிர்ச்சியடைந்தது. முதல்வர் பினராயி தவிர, அனைத்து அமைச்சர்களும் புதியவர்கள். கடந்த 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஒரு அமைச்சருக்கு கூட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இத்தனைக்கும் கடந்தாண்டு அறிமுகமான கொரோனோ தொற்று கேரளாவை அதிகமாக அச்சுறுத்திய நேரத்தில், அதனை தனது சமார்த்திய செயல்பாடுகளால் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்த சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதுதான், கேரள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
புதிய அமைச்சரவை பட்டியல் வெளியான நேரம் முதல் இந்த நிமிடம் வரை சைலஜா முதல்வர் பதவிக்கே தகுதியானவர். அவரை மீண்டும் அமைச்சராக அறிவிக்காதது ஏன் என்று கேரள முழுவதும் அனல் பறக்கும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
கம்யூனிஸ்ட் கொள்கைப்படி, ஒருவருக்கு இரண்டு முறை தான் அமைச்சர் பதவி வழங்கப்படும். 3 வது முறை அமைச்சராகும் வாய்ப்பு கிடையாது என்பதில், அகில இந்திய தலைவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அதனால், ஏற்கெனவே இரண்டு முறை அமைச்சராக இருந்த சைலஜா டீச்சருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
சைலஜா டீச்சர் உள்ளிட்ட சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன் என்று கேரள மக்கள் சூடாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்களோ, அதே அளவுக்கு புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்களின் கட்சிப் பணி, அவரவர் திறமை ஆகியவற்றையும் அலசி ஆராய்ந்து இதுபோன்ற ஒரு அமைச்சரவை, நாடு முழுவதிலும் ஒவ்வொரு மாநிலங்களிலும் அமைக்கப்பட்டால், இந்தியாவின் பண்பட்ட அரசியலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டு கிடைக்குமே என்று உண்மையான தேசப்பக்தி உள்ளவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
கேரளாவில் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களின் பட்டியலை இப்போது புரட்டிப் பார்ப்போம்..
கேரளாவில் கடந்த மந்திரி சபையில் இடம்பெற்ற ஒருவருக்கும் தற்போதைய புதிய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
நிதியமைச்சர் தாமஸ் ஐசக் இந்திய அளவில் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர். கேரளாவின் பொருளாதாரத் துறையை மேம்படுத்துவதில் கேரளா அரசுக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்தவர். இரு முறை நிதிஅமைச்சராக இருந்தவர். அவருக்கு கட்சி முடிவின்படி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை..
முதல் முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.ராஜேஷ் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த முறை சிபிஎம் சார்பில் 13 பேர் அமைச்சர்களாக இருந்தனர் அது 12 குறைக்கப்பட்டு கூடுதல் ஒரு அமைச்சர் பொறுப்பை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையில் பி.ராஜீவ் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். நாடாளுமன்ற ஆவண காப்பகத்தில் நாடாளுமன்ற விவாத புத்தகங்கள் அனைத்தும் படித்துக் கற்றறிந்தவர் . நாடாளுமன்ற மரபுகள் சட்டங்களை எந்த நேரத்தில் என்றாலும் பதிலளிப்பவர் நாடாளுமன்ற மேல்-சபையில் இருந்தது பதவி காலம் நிறைவடைந்த போது சபாநாயகர் உள்ளிட்ட ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களால் பெருமைமிகு பாராட்டை பெற்றவர்.
மேலும் புதிய அமைச்சராக பொறுப்பேற்கும் தோழர் சிந்து கொச்சின் மேயராக திறம்பட பணியாற்றியவர் மக்களால் பாராட்டு பெற்றவர்
தோழர். வீணா ஜார்ஜ் பத்திரிகையாளர், எழுத்தாளர், தொலைக்காட்சி நெறியாளர் என பன்முக திறமை கொண்டவர்
தோழர். பாலகோபால் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அகில இந்திய தலைவர் ஆவார்
தோழர். முகமது ரியாஸ் அகில இந்திய தலைவர்
தோழர். ராதாகிருஷ்ணன் அச்சுதானந்தன் மந்திரிசபையில் அமைச்சராக பொறுப்பு வகித்தவர் இவ்வாறு புதிய மந்திரி சபை கேரளாவில் அமைய உள்ளது.
தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் வார்டு கவுன்சிலர் பதவியை கூட பரம்பரையாக வைத்துக்கொள்ளும் கட்சிகளுக்கு மத்தியில், எவ்வளவு செல்வாக்கு மிக்கவர், திறமையாளர் என்றாலும் கூட மூன்றாவது முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இந்த ஒழுங்குமுறை வேறு எந்த அரசியல் கட்சிகளிலும் சாத்தியம் இல்லை என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
சிபிஐஎம் கட்சியின் அகில இந்திய மாநாடு எடுத்த முடிவின்படி ஒருவருக்கு இரு முறை மட்டுமே சட்ட,நாடாளுமன்ற,அமைச்சர், முதலமைச்சர், பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற கட்சி முடிவு தீர்மானகரமான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருவதாக கேரளாவில் உள்ள இளம்தலைமுறை அரசியல்வாதிகள் கூறுகிறார்கள்.
கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலைமையில் அமையவுள்ள அமைச்சரவை பற்றி சர்ச்சையே கிடையாதா என்ற கேள்வியும் எழலாம்.
சர்ச்சையில்லாமல் அமைச்சரவை இருந்தால் எப்படி? பினராயி தலைமையிலான கேரள அரசில் அவரது மருமகனுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது, எதிர்க்கட்சியினரால் சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது. கம்யூனிஸ்டிலும் வாரிசு அரசியல் தலைதூக்கிவிட்டது என்று காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளிடம் இருந்து கண்டனக்குரல் எழுகின்றன.
ஆனால், அதற்கு கேரள கம்யூனிஸ்ட் கட்சியினர் தரும் விளக்கமோ, வித்தியாசமாக இருக்கிறது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) அகில இந்திய தலைவரும் கேரள அமைச்சருமான முகமது ரியாஸ் கடந்து வந்த பாதை இதோ…
கோழிக்கோடு St.joseph பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே அப்பள்ளியின் SFI செயலாளர்
பரூக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் போது கல்லூரியின் SFI தலைவர், இரண்டாம் ஆண்டு SFI செயலாளர், மூன்றாம் ஆண்டு கோழிக்கோடு யுனிவர்வர்சிட்டி மாணவர் கவுன்சிலராக வெற்றி பெற்றவர்
கல்லூரி படிப்பு,சட்டப்படிப்பு முடிக்கும் வரை மாணவர் சங்கத்தின் பல பொறுப்புகளில் இருந்துள்ளார்
கல்லூரி படிப்பிற்கு பின் வாலிபர் (DYFI) சங்கத்தின் மாநில பொறுப்பு தொடங்கி தற்போது அகில இந்திய தலைவராக பொறுப்பு வகிக்கிறார்
2009 ஆம் ஆண்டு தேர்தலில் பொதுத் தேர்தலில் கோழிக்கோட்டில் நின்று வெரும் 838 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றவர் தற்போது அதே மாவட்டத்தின் பைபூர் தொகுதியில் போட்டியிட்டு 28,747 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் 2020 ஆம் ஆண்டுதான் முகமது ரியாஸ் பினராயி விஜயனின் மருமகன், அதற்கு முப்பதாண்டிற்கு முன்பாகவே அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னனி தோழன்,தலைவன்
இவை அனைத்தையும் மறைத்துவிட்டு பினராயி விஜயனின் மருமகனுக்கு மந்திரி பதவி என தமிழக ஊடகங்கள் காட்டு கத்து கத்துகின்றது
தகவல் உதவி காஞ்சிபுரம் சூர்யா