சேலம் மாவட்டம் இரும்பாலையில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு கொரானா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த மையம் முழுமையாக பயன்பாட்டு வரும்போது, சேலம் மாவட்டத்தில் கொரோனோவால் பாதிக்கப்படும் புதிய தொற்றாளர்களுக்கு அங்கு அனைத்து விதமான மருத்துவச் சிகிச்சையும் கிடைக்கும்.
அதனால், அதன் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்கும் வகையில், அங்குள்ள பணியாளர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். சேலம் மாவட்டத்தில் கொரோனோ தடுப்பு பணிகளை கண்காணிக்கும் வகையில் அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளதால், இரும்பாலை சிறப்பு சிகிச்சை மையத்தை அடிக்கடி பார்வையிட்டு பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார்.
கிட்டதட்ட 70 சதவிகித பணிகள் முடிந்துள்ள நிலையில், 100 சதவிகிதமும் பணிகள் முடிக்கப்பட்டு, விரைவில் அந்த மையம் செயல்படுவதற்கு தொடங்கி வைக்கப்படவுள்ளது. இதனிடையே, முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சேலத்தில் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவக் கட்டமைப்பு ஆகியவற்றை ஆய்வு செய்யவுள்ளார்.
இரும்பாலையில் உள்ள சிறப்பு சிகிச்சை மையத்தயும் முதல்வர் நாளை பார்வையிட்டு ஆய்வு செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளதால், இன்று காலையும் அமைச்சர் செந்தில்பாலாஜி, கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தினார். அவருடன் ஆட்சியர் கார்மேகம், திமுக எம்.பி. பார்த்திபன், எம்.எல்.ஏ ராஜேந்திரன் ஆகியோரும் அங்கு இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ரெம்டெசிவிர் மருந்தினை நோயாளிகளின் குடும்பத்தாரை வாங்கி கொடுக்க நிர்பந்திக்கும் மருத்துவமனைகள் மீது உச்சபட்ச நடவடிக்கை எடுக்கப்படும்.
நாளை சேலம் வரும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரும்பாலை கொரோனா சிறப்பு மையத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொரோனா மையத்திற்கு வர சிறப்பு ஆம்புலன்ஸ் ஏற்பாடுகள் செய்யப்படும்.
முதலமைச்சர் ஆய்வின் போது பொதுமக்கள் கட்சி தொண்டர்கள் வர வேண்டாம்.
கொரோனா பரவல் அபாயம் காரணமாக தொண்டர்கள் வருகையை தவிர்க்கவும் –
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.