Wed. Nov 27th, 2024

2009 ஆம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற போரில், விடுதலைப் புலிகளின் தலைவர் மாவீரன் பிரபாகரன், அவரது குடும்பத்தினர், விடுதலைப் புலிகள், லட்சக்கணக்கான மக்கள் சிங்கள இனவெறி அரசால் கொன்றொழிக்கப்பட்டனர்.

அதனை நினைவுக்கூர்ந்து ஆண்டுதோறும் தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் நினைவேந்தல் நிகழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. கொரோனோ காலம் என்பதால் கடந்தாண்டும் நினைவேந்தல் நிகழ்வுகள், பொதுவெளியில் நடத்தப்படவில்லை. இந்தாண்டும் அதே நிலைமைதான் என்பதால், அரசியல் கட்சியினர், தமிழீழ ஆதரவாளர்கள், அவரவர் சார்ந்த அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் கொரோனோ நெறிமுறைகளுக்கு உட்பட்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு, தமிழீழ உறவுகளுக்கு வீர வணக்கம் செலுத்தினர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மே 18 தின உறுதிமொழியை உணர்ச்சிப் பொங்கும் விதமாக எடுத்துரைத்தார்.

அந்தவகையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பிலும் நினைவேந்தல் நிகழ்வு கடைப்பிடிக்கப்பட்டது.

2009 ல் ஈழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில் சிங்கள இனவெறி அரசால் கொன்றொழிக்கப்பட்ட தமிழீழ உறவுகளுக்கு கொரோனா நெருக்கடிநிலை அமலில் உள்ள காரணத்தால் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன், குறைந்த எண்ணிக்கையிலான தோழர்களுடன் பண்ருட்டியில் உள்ள அவரது இல்லத்தில் மாவீரன் பிரபாகரளின் இளம்வயது பாலகன் பாலச்சந்திரன் திருவுருப் படத்திற்கு மலர் தூவியும், சுடரேந்தியும் வீரவணக்கம் செலுத்தினார்.

இதேபோல், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள், குறிப்பாக லண்டன், கனடா, ஆஸ்திரேலியா,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள், மே 18 தின நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு தமிழீழத்திற்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினார்கள்…