Sun. Apr 20th, 2025

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 8 ஆவது தவணை நிதியை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று வழங்கினார்.

பிரதமரின் விவசாயிகள் நிதிஉதவி திட்டப்படி, நாடு முழுவதும் தகுதியுள்ள விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாயை 3 தவணைகளாக மத்திய அரசு வழங்கி வருகிறது. விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக இப்பணம் செலுத்தப்படுகிறது. இதுவரை ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயிகளுக்கான 8 ஆவது தவணைக்கான நிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக விடுவித்துள்ளார். இதன்படி 9.5 கோடிக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்களுக்கு சுமார் ரூ. 19,000 கோடி வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதில் முதல் முறையாக, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்தத் திட்டத்தால் பயனடைவார்கள்.

காணொலி காட்சி மூலம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், சில பயனாளிகளும் மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர், உ.பி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.