Sat. Nov 23rd, 2024

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நேற்று காலையில் இருந்தே, தனது எடப்பாடி தொகுதியில் உள்ள சிலுவம்பாளையம் இல்லத்தில் இருந்து தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சி மூலம் பார்த்து வந்தார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

நண்பகலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பது உறுதியானவுடன் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி, தனக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரை கைபேசியில் தொடர்பு கொண்டு தோல்விக்கான காரணங்கள் குறித்தும், வெளிப்படுத்த முடியாத பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசியதாக தகவல் கசிகிறது.

நேற்றிரவு, சேலம் மாவட்டத்தில் வெற்றிப் பெற்ற அதிமுக மற்றும் பாமக வேட்பாளர்கள், சிலுவம்பாளையத்திற்கு வந்து நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக சிலுவம்பாளையத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் உள்ள உதவியாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், யாரையும் தனது வீட்டிற்கு வர வேண்டாம் என்று கூறிவிட்ட எடப்பாடி பழனிசாமி, விடியற்காலை வரை தேர்தல் முடிவுகளால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் துவண்டதாகவும். நள்ளிரவிலும் கூட தனது நலம் விரும்பிகள் பலரை கைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாவும் தகவல் தெரிவிக்கிறார்கள் சிலுவம்பாளையத்தில் உள்ள அதிமுக முன்னணி நிர்வாகிகள்.

இன்று காலையிலும் கூட, தேர்தல் அதிர்ச்சியில் இருந்து விடுபடாமல் தான் இருந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அவரை நேரில் சந்தித்து ஆசி பெறுவதற்காக ஏற்காடு எம்.எல்.ஏ., சித்ரா, ஏற்காடு மலையில் இருந்து சேலம் வந்து, 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிலுவம்பாளையத்திற்கு சென்றுள்ளார்.

ஆனால் அவரை சந்திக்க மறுத்துவிட்ட எடப்பாடி பழனிசாமி, தான் சொல்கிற வரை யாரும் தன்னை வந்து சந்திக்க வேண்டாம் என்று கோபமாக கூறிவிட்டதாக, சித்ரா எம்.எல்.ஏ.,வுடன் சென்ற அதிமுக நிர்வாகிகள் நம்மிடம் தகவல் தெரிவித்தனர்.

எவ்வளவு கடுமையாக உழைத்த போதும், அதிமுக முன்னணி தலைவர்களிடம் காணப்பட்ட பொறாமை குணம், கோஷ்டிப் பூசல் ஆகிவற்றால், தமிழக மக்கள் அதிமுக.வுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தர தயாராக இருந்த போதும் தவற விட்டுவிட்டோமோ என்று மனம் நொந்து பேசுவதாக, அவருக்கு மிக நெருக்கமான எடப்பாடி அதிமுக விசுவாசிகள் தகவல் தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு 100 சதவிகிதம் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை இருந்தது. அதனால்தான், நேற்றிரவு கோவையில் இருந்து சென்னை செல்வதற்காக விமானப் பயணத்திற்காக முன்பதிவும் செய்து வைத்திருந்தார். ஆனால், பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவிக்க தொடங்கியதை அடுத்து தனது சென்னை பயணத்தை ரத்து செய்துவிட்டார்.

சேலத்தில் உள்ள வீட்டிற்கு வந்து தங்கினால், அதிமுக நிர்வாகிகள் மட்டுமல்ல, அவருக்கு மிக மிக நெருக்கமான தொழில் அதிபர்களும் கூட வந்து சந்திப்பார்கள். அவர்களை எல்லாம் சந்திக்கிற மனநிலையிலேயே இ.பி.எஸ். ஸுக்கு இல்லை.

இ.பி.எஸ்.ஸை பொறுத்தவரை தேர்தல் முடிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் இருந்து அவர் எளிதாக மீண்டு வருவார் என்று எங்களுக்கு தோன்றவில்லை.. மிகமிக நெருக்கடியான காலத்தில் எல்லாம், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவனை அழைத்து பேசுவார். அவரையும் கூட வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்றால், தேர்தல் முடிவுகள் இ.பி.எஸ்.ஸுக்கு எவ்வளவு பெரிய வலியை ஏற்படுத்தியிருக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள் என்றார் அந்த விசுவாசி…

எல்லாவிதமான காயங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் கடந்த போகும் காலமே மருந்து…