சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 8 தொகுதிகளில் திமுக மிகவும் பலவீனமாக இருப்பதாக மார்ச் மாதத்திலேயே நல்லரசு தமிழ் செய்திகள் எச்சரித்தது. அதனையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகனும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோர் ஸ்பெஷல் கவனம் செலுத்திய போதும் சேலம் மாவட்டத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் திமுக வெற்றிப் பெற்றிருக்கிறது
அதுவும் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற சேலம் வடக்கு தொகுதி வேட்பாளரும், சேலம் மத்திய மாநகர மாவட்டச் செயலாளருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மட்டும் தனது தொகுதியில் மீண்டும் வெற்றிப் பெற்றிருக்கிறார்.
மிகவும் நம்பிக்கையோடு இருந்த வீரபாண்டி, சங்ககிரி, கெங்கவள்ளி ஆகிய தொகுதிகளிலும் கூட திமுக.வுக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பது என்ற தகவல், திமுக தலைமைக்கு மட்டுமல்ல, இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து முதற்கட்ட விசாரணையில், சேலம் மாவட்டத்தில் நிலவும் கோஷ்டிப் பூசல்களதான் முக்கிய காரணம் என்றும், மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள், தற்போதைய தேர்தலில் உற்சாகமாக தேர்தல் பணியாற்றவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
முதல்வராக பதவியேற்ற பிறகு, சிறிது இளைப்பாற நேரம் கிடைக்கும் போது சேலம் மாவட்ட திமுக.வின் தலையெழுத்தையே மாற்றி எழுத திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக அண்ணா அறிவாலய நிர்வாகிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.