தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தனித்து 124 இடங்களிலும் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து 156 தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. தனித்த பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும் சூழல் உறுதியானதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தேசிய அளவில் பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்த நிலையில், பிரதமர் மோடியும் இரவு 7.34 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மு.க.ஸ்டாலினுக்கும் அறிவாலயத்திற்கும் வாழ்த்துகள் என்றும் தேசிய நலன் சார்ந்த அம்சங்களிலும் மாநில தேவைகளை பூர்த்தி செய்வதிலும், விருப்பங்களை நிறைவேற்றுவதிலும் இணைந்து செயலாற்றுவோம் என்று கூறியுள்ளார். மேலும் கொரோனோ தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் இணைந்து பணியாற்றுவோம் என்றும் கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதகாவும், தமிழ்நாட்டின் வளமுர்ச்சிக்கு இணைந்து உழைப்பதாகவும், தமிழக பண்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதேபோல, கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிப் பெற்றதற்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோல், சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்ணாத்தே படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் உள்ள அவர், தொலைபேசி வாயிலாக மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.