Sat. May 18th, 2024

கொங்கு மண்டலத்தில் அதிமுக அமோக வெற்றிப் பெற்றுள்ள நிலையில், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், அந்த மண்டலத்தில் பெற்ற வெற்றிகளை விட திமுக இழந்து இருப்பதுதான், கொங்கு மண்டல திமுக நிர்வாகிகளை பேராதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் அதிமுக அதிகமான இடங்களில் வெற்றிப் பெற்றிருந்தாலும் கூட கோவை நீங்கலாக 4 மாவட்டங்களில் திமுக.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றிப் பெற்றுள்ளன.

ஆனால், கோவை மாவட்டத்தில் திமுக.வை சுத்தமாக துடைத்து எறிந்ததைப் போல ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றிப் பெறவில்லை. கடந்த 2016 ம் ஆண்டு சிங்காநல்லூர் தொகுதியில் வெற்றிப் பெற்ற கோவை மாநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் கார்த்திக் எம்.எல்.ஏ, தற்போதைய தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

இந்த தேர்தலில் கார்த்திக் வெற்றிப் பெற்றிருந்தால் திமுக அமைச்சரவையில் இடம் பெறும் வாய்ப்பும் கார்த்திக்குக்கு பிரகாசமாக இருப்பதாக தகவல் வெளியானது. கோவை மாட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக.வே வெற்றி பெற்றுள்ளது.

திமுக.வின் தோல்விக்கு நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதுவும் நாம் தமிழரை விட 5 தொகுதிகளில் திமுக.வின் வெற்றியை மக்கள் நீதி மய்யமே பறித்துள்ளது.

சிங்கநல்லூரில் திமுக வேட்பாளர் கார்த்திக் 10,854 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வியை தழுவியுள்ளார். அந்த தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் மகேந்திரன் 36,855 வாக்குகள் பெற்றுள்ளார். இவரின் போட்டியாலேயே திமுக வெற்றி பறிபோய்வுள்ளது.

இதேபோல, கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ஆகிய நான்கு தொகுதிகளிலும் திமுக பின்னடைவை சந்தித்துள்ளது.

பொள்ளாச்சியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வெறும் ஆயிரத்து 725 வாக்குகளில்தான் வெற்றிப் பெற்றுள்ளார். அந்த தொகுதியில் போட்டியிட்ட ம.நீ.ம. வேட்பாளர் 7,549 வாக்குகள் பெற்றுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் போட்டியால்தான் திமுக தோல்வியை தழுவியது என்று சொல்வதற்கு எந்த அறிவியல் பூர்வமான ஆய்வும் கிடையாது. பேச்சளவில் மட்டுமே இதை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இப்படி மக்கள் நீதி மய்யத்தின் போட்டியால் திமுக.வின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் சிந்தும் கோவை மாநகர திமுக நிர்வாகிகள், கமல்ஹாசனின் மீது கடுமையாக கோபப்படுவதற்கு தோதாக அமைந்துவிட்டது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்த விவகாரம்தான்.

திமுக அமோக வெற்றிப் பெற்றதையடுத்து, தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துச் சொன்ன கமல்ஹாசன், தலைவரை நண்பரே என்று கூட அழைக்கவில்லை. அதையெல்லாம் மறந்து திமுக தலைவர் மு..க.ஸ்டாலின், கமல்ஹாசனை நண்பராகதான் பார்க்கிறார். ஆனால், ஒரே ஒரு தொகுதியில் வெற்றி வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்ட கமல்ஹாசன், பெருந்தன்மையோடு திமுக தலைவருக்கு வாழ்த்துச் சொல்லவில்லை.

அரசியல் பண்பாட்டின்படி வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக, பொத்தாம் பொதுவாக வாழ்த்துச் சொல்லியிருக்கிறார். அதில், எங்கள் தலைவரை நண்பரே என்று கூட விளிக்கவில்லை. ஆனால், தலைவர் மிகுந்த நாகரிகத்தோடு, பெருந்தன்மையோடு, தமிழர் பண்பாட்டுடன் நடிகர் கமல்ஹாசனை அன்பு நண்பர் என்று அழைத்து நன்றி தெரிவித்திருக்கிறார்.

கமல்ஹாசனைப் போல மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் மாற்றி பேசும் குணமில்லாத நடிகர் ரஜினிகாந்த், நட்பின் உரிமையோடு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

மனம் அமைதியில்லாத போது வெளிப்படும் குணம்தான், அந்த மனிதரின் உண்மை முகத்தை தோலூரித்துக் காட்டும் என்பார்கள். அந்த வகையில் கமலின் மனதிற்குள் இருக்கும் விரக்தியும், தோல்வி தந்த குரோதமும், வாழ்த்து மூலம் வெளியாகியிருக்கிறது என்கிறார்கள் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள்..

என்னமா யோசிக்கிறாங்க….