Sat. Nov 23rd, 2024

சிறப்புச் செய்தியாளர் …

கொரோனோ தொற்றின் 2 வது அலை, தமிழக மக்களை நிம்மதியிழக்கச் செய்துள்ளது. இந்த நேரத்தில் சித்த மருத்துவர் வீரபாகு சிகிச்சை அளிக்காமல் ஒதுங்கி நிற்கிறார். கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ஓடி, ஓடி வைத்தியம் பார்த்த அவர், இப்போது ஏன் ஒதுங்கி நிற்கிறார். கடந்தாண்டைப் போலவே, இந்தாண்டும் பாதிப்பு எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சித்த மருத்துவர் வீரபாகுவின் ஒதுங்குதலுக்குப் பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மிரட்டல் உள்ளதாக சித்த மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்களை தெரிவிக்கின்றனர். வீரபாகுவுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டால், அதிர்ச்சிக்கரமான பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று வலியுறுத்துகிறார்கள் சித்த மருத்துவர்கள்.

விசாரணையில் ஆர்வம் காட்டியபோது, அதிர்ச்சியான தகவல்கள் கொத்து கொத்தாக கிடைத்தன.

கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் தமிழகத்திற்கு கொரோனோ அறிமுகமான போது, படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை கலக்கத்தில் ஆழ்ந்தனர். என்னசெய்வது என்றே தெரியாமல் திகைப்பில் நடமாடிக் கொண்டிருந்தனர். முக கவசம், கைகளை சோப்பு போட்டு அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும் என்பதெல்லாம் தமிழக மக்களுக்கு மிகவும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அதற்கடுத்து அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு, மக்களை ஒட்டுமொத்தமாக முடுக்கிப் போட்டது.

கொரோனோ தொற்று பாதிக்கப்பட்டால் நேரடியாக மரணம்தான், அதனை குணப்படுத்த மருந்தே கிடையாது என்று கிராம அளவில் தகவல் பரவியதும் தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டதும், குடும்ப மருத்துவர்கள் எல்லோரும் தங்களை சிறைப்படுத்திக் கொண்டதும், பொதுமக்களிடம் ஏற்பட்ட அச்சவுணர்வை மேலும், மேலும் அதிகப்படுத்தியது. இந்தநேரத்தில், சித்த மருத்துவர் வீரபாபு என்பவர், ஆபத்பாந்தவனாக தோன்றினார்.

சித்த மருந்துகள் மூலம் கொரோனோவை விரட்டியடிக்கலாம் என்று கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பொதுமக்களுக்கு நம்பிக்கையளித்தார். செயல்முறையும் மூலம் விளக்கம் அளித்தார். அவரின் செயல்பாட்டை ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்., வீரபாபு மீது நம்பிக்கை வைத்து, கொரோனோ தொற்றின் ஆரம்ப கால அறிகுறி கண்டறியப்பட்டவர்களுக்கு மட்டும் முதற்கட்ட சிகிச்சை அளிக்க அனுமதி பெற்று தந்தார்.

சென்னை வடபழனியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் 200 படுக்கைகளுடன் கொரோனோ சித்த வைத்திய சிகிச்சை மையம் தொடங்கியது. அங்கே சிகிச்சைக்கு சென்றவர்கள் அனைவரும் எந்தவித பயமும் இன்றி இயல்பான நிலையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்ற செய்தியால், படுக்கைகள் மேலும் 250 சேர்க்கப்பட்டு, 450 பேர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அங்கு சிகிச்சைப் பெற்றவர்கள் ஒருவர் கூட மரணம் அடையவில்லை என்ற செய்திதான், பெரும்பான்மையான மக்களுக்கு நம்பிக்கை பெற்று தந்தது. வெற்றிகரமாக சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜுன் மாதம் திடீரென்று சிகிச்சை வழங்குவதில் இருந்து விலகிக் கொண்டார் வீரபாபு.

அப்போது, அரசு அனுமதியின்றி சிகிச்சைப் பெற வந்தவர்களிடம் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. அப்போதே அந்த புகாரை கடுமையாக மறுத்தார் வீரபாபு.

கடந்த ஆண்டைப் போலவே இப்போதும் கொரோனோ 2 வது அலை வேகமெடுத்து, தமிழகத்தில் நாள்தோறும் 20 ஆயிரம் பேர் பாதிப்பிற்குள்ளாகும் நிலையை எட்டியிருக்கிறது. தினசரி உயிர்ப்பலியும் நாள்தோறும் 100 க்கு மேல் என்று உயர்ந்துவிட்டது.

இந்த நேரத்தில், தமிழக சுகாதாரத்துறையும், உள்ளாட்சித்துறையும் கொரோனோ தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர கடுயைமாக போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், சித்த மருத்துவர் வீரபாபு எந்த பரபரப்பும் இன்றி அமைதியாக இருந்து வருகிறார்.

கடந்த ஆண்டில் தமிழர்களின் பாரம்பரிய வைத்தியமான சித்த மருத்துவத்தின் மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரேனோ நோயாளிகளை குணப்படுத்தி சித்த மருத்துவர் வீரபாகு, இன்றைக்கு கொரோனோ தொற்று உச்சம் தொட்டிருக்கும் நிலையிலும் தன்னையே முடக்கி கொண்டிருப்பது எப்படி சாத்தியம் என்பது புரியாமல் முழிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

அதேநேரத்தில், கடந்த பத்து நாட்களாக ஊடகங்களுக்கு மட்டும் தொடர்ந்து பேட்டி கொடுத்து கொண்டிருக்கிறார்

அவரை சந்தித்துவிட்டு வரும் செய்தியாளர்கள், எப்படிபட்ட மனுஷன் இவர். கொரோனோவுக்கு ஒருவரை கூட பலி கொடுக்காமல் எல்லோரையும் காப்பாற்றியவர்.

இன்றைக்கு தமிழகத்தில் நாள்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வெறும் 25 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையில் சித்த வைத்தியம் செய்து கொண்டிருக்கிறாரே வீரபாகு என்று அதிர்ச்சியோடு பேசுகிறார்கள்.

அவரின் அனுபவத்தை தமிழக அரசு ஏன் பயன்படுத்திக் கொள்ள தயங்குகிறது என்று ஆதங்கத்துடன் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், சென்னை ஊடகவியலாளர்கள்.

கொரோனோ 2 வது அலை தமிழகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் (ஏப்ரல் 30) மட்டும் 18 ஆயிரத்து 692 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 473 பேர் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

சிகிச்சைப் பலனின்றி இறந்து போனவர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது. .

இப்படி தொற்று பாதிப்பும், உயிர் இழப்பும் அதிகமாகிக் கொண்டு போகிற இந்த நேரத்தில், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் 20 மணிநேரம் உழைக்கிறார்.  

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் நிரம்பி இருக்கிறது. தனிமைப்படுத்தி வைக்கப்படும் மருத்துவ மையங்களிலும் கூட்டம் அதிமாக இருக்கிறது.

கடந்த ஆண்டு எப்படி டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கஷ்டப்பட்டார்களோ, அதே போல இப்பவும் கஷ்டப்படுகிறார்கள்.

வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு கொரோனோ தொற்றின் 2 வது அலை பற்றி மக்கள் பயத்தோடு பேசி வருகிறார்கள்.

நெருக்கடியான காலக்கட்டத்தில கூட சித்த வைத்தியத்தை தொடங்காமல் வீரபாகு ஏன் அமைதியாக இருக்கிறார் என்று விசாரித்தால், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை நோக்கி எல்லோரும் கையை நீட்டுகிறார்கள்.

கடந்தாண்டு கொரோனோவுக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனைகளை விட, தனியார் மருத்துவமனைகளை விட, அரசாங்கத்தின் செயல்பாடுகளை விட, அதிகமாக பேசப்பட்டது சித்த மருத்துவர் வீரபாகுவின் சித்த மருத்துவ சிகிச்சையைப் பற்றிதான்.

அதுதான் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எரிச்சைல கொடுத்தது என்றும் அதே நேரத்தில் சித்த வைத்தியதால் பாதிக்கப்படுவதாக தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகிகளும் அமைச்சரிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது.

தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுக்கு சாதமாக நடந்துகொள்ள முடிவெடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர், வீரபாபுவை அழைத்து,

உன்னுடைய சிகிச்சையை உடனே நிறுத்து. சித்த மருத்துவ சிகிச்சையை யாருக்கும் கொடுக்க கூடாது. அரசாங்கம் ஏற்பாடு செய்து கொடுத்த மையத்தை மூடிவிட்டு போயிடு என்று மிரட்டியிருக்கிறார் ..

சித்த மருத்துவர் வீரபாகு சாதாரண நபர்தானே. அமைச்சர் மிரட்டலை மீறி என்ன செய்ய முடியும். அமைச்சர் பேச்சை கேட்டு வைத்தியம் செய்வதை நிறுத்திக் கொண்டார் வீரபாகு.

அவரை தேடி போனவர்கள் எல்லோரும் சிகிச்சை கிடைக்காத போது புலம்ப தொடங்கினார்கள். அப்போதுதான், வீரபாகுக்கு எதிராக ஒரு புரளி கிளப்பி விட்டார்கள். .. சித்த வைத்திய சிகிச்சைக்காக வரும் பொதுமக்களிடம் அரசு அனுமதியின்றி பணம் வசூலிக்கிறார் சித்த மருத்துவர் வீரபாகு என்று புகார் வாசிக்கப்பட்டது. .

இதை எதற்கு சொன்னார்கள் என்றால், அமைச்சர் விஜயபாஸ்கர் வீரபாகுவை மிரட்டியதை திசை திருப்புவதற்காக என்கிறார்கள் அவரது நண்பர்கள். .

இன்றைக்கு அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அதிகாரம் இல்லை. ஆனாலும், சித்த மருத்துவர் வீரபாகுவை சிகிச்சை அளிக்க வருமாறு அரசாங்க தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்படவில்லை. .

இந்த நேரத்திலதான் டெல்லியில நடக்கிற சம்பவங்களை நாம ஒப்பிட்டு பார்க்க வேண்டியிருக்கிறது. ..

டெல்லியே சுடுகாடு மாதிரி இருக்கிறது என்று சர்வதேச ஊடகங்கள் படம் பிடிச்சு காட்டுகிறார்கள்.

அதை பார்த்து மனம் வெறுத்துப் போன டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், பொறுமையிழந்து, உயிர் காக்கும் காற்றை தடுப்பவர்களை தூக்கில் போட கூட தயங்க மாட்டோம் என்று ஆவேசமாக கருத்து தெரிவித்தார்.

டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வந்த கோபம் போல, சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் கோபம் வந்தது. எந்த விஷயத்தில் என்றால், தமிழகத்தில் கொரோனோ 2 வது அலை வேகம் எடுத்ததற்கு காரணமே தேர்தல் ஆணையம்தான் என்று நெற்றிக்கண்ணை திறந்தனர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்.

டெல்லி உயர்நீதிமன்றம் சொன்ன அதே எச்சரிக்கையை நமது நீதியரசர்களும் சொல்லியிருக்கிறார்கள்..

சாந்த சொரூபிகளாக காட்சியளிக்கிற நீதிமன்றங்களே இன்றைக்கு ஆவேசப்படுகின்றன.

ஆனால், கடந்த ஆண்டு சித்த வைத்தியம் அளித்த வீரபாபுவை ஏன் கொரோனோவுக்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பாதது தங்களுக்கு வருத்தம் அளிப்பதாக கூறுகிறார்கள் சித்த மருத்துவர்கள் சிலர்.

அண்மையில் சித்த மருத்துவத்தின் சாதனையை கண்ணீர் மல்க கடிதம் வாயிலாக எடுத்துக் கூறினார், புகழ்மிக்க காந்தியவாதி தமிழருவி மணியன். அரசு கைவிட்ட நிலையில்தான் அவர் வீரபாபுவை நாடியிருக்கிறார்.

இப்படிபட்ட நேரத்திலும் கூட, வீரபாபுவை சிகிச்சை வழங்க அழைத்தால் அமைச்சர் விஜயபாஸ்கர் கோபித்துக் கொள்வார் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் பயப்படுவதாகதான் தெரிய வருகிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர் இன்றைக்கு அமைச்சராக இருக்கிறார், நாளைக்கு அமைச்சராக இருப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

வீரபாபுவை சிகிச்சை வழங்க தமிழக அரசு அழைக்க வில்லை என்றால், இதுதொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பு, கோரிக்கை கூட என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

அப்போதுதான், அமைச்சர் விஜயபாஸ்கர், கடந்த 7 ஆண்டுகளாக அரசு மருத்துவர்கள், சித்த மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எவ்வாறு எல்லாம் மிரட்டல் விடுத்தார், யாரை யாரையெல்லாம் பழிவாங்கினார், தமிழக சுகாதாரத்துறையின் வலுவான கட்டமைப்பை எப்படி சீரழித்தார் என்பது வெட்ட வெளிச்சமாகும் என்று ஆவேசம் அடங்காமல் பேசுகிறார்கள் சித்த மருத்துவர்கள் பலர்.