Sun. Apr 20th, 2025

நாடு முழுவதும் கொரோனோ பரவல் அதிகரித்து வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, வார விடுமுறை நாட்களில் ஊரடங்கு என அறிவிதது கொரோனோ பரவலை கட்டுக்குள் கொண்டு வர கடுமையாக போராடி வருகின்றன.

திரிபுராவிலும் கொரோனோவை கட்டுக்குள் கொண்டு வர அம்மாநில அரசு 144 தடையுத்தரவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்நிலையில் தலைநகர் அகர்தலாவில் கொரோனோ தடுப்பு நெறிமுறைகளுக்கு மாறாக திருமண விழா நடைபெறுவதாகவும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் மக்கள் கூட்டம் இருப்பதாகவும், அகர்தலா மாவட்ட ஆட்சியர் சாய்லேஷ் யாதவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக திருமண மண்டபத்திற்கு போலீஸ் படையோடு விரைந்து சென்ற அவர், வார்த்தைகளில் கடுமை காட்டாமல் ரவுடி போல, அங்குள்ளவர்களை விரட்டியடிக்கிறார். மணமகன், மணமகளை ஆடுகளை விரட்டுவதைப் போல ஆட்சியர் விரட்டுகிறார். அவரின் அதட்டலான வார்த்தைகளை கேட்ட போலீசும் தன் பங்கிற்கு லத்தியால், திருமண விழாவில் கலந்துகொண்டவர்களை துவம்சம் செய்கிறார்கள். அனுமதிக்கப்பட்ட நேரமான இரவு 10 மணிக்கு பிறகும் திருமண மண்டபத்தில் கூட்டம் இருந்ததுதான் ஆட்சியரின் கோபத்திற்கு காரணம்.

ஆட்சியர் மற்றும் போலீசாரின் அதிரடியால், அங்கிருந்த குழந்தைகள் பயந்த போய் கதறுகின்றன. அப்போதும் ஆட்சியர் மற்றும் போலீசாரின் மனம் இரங்கவில்லை.

ஐஏஎஸ் அதிகாரி போல நடந்து கொள்ளாமல், அடியாள் போல நடந்து கொள்ளும் அவரின் செயலைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஒருவர், கொஞ்சம் பொறுமை காட்டுங்கள் என கூறப் போக, அவரை கைது செய்யுங்கள் என போலீசாருக்கு அதட்டலாக உத்தரவிடுகிறார்.

கைது நடவடிக்கைக்கு பயந்து போய் அங்கிருந்த பெண்கள், ஆட்சியரிடம் கையேந்தி கும்பிட்டு, அவரை விடுதலைச் செய்ய மன்றாடுகிறார்கள். ஆனால், கல் மணம் கொண்ட மனிதராக ஆட்சியர் நடந்து கொள்ளும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி, நாடு முழுவதும் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

மதம் பிடித்த யானை, மக்கள் கூட்டத்திற்குள் புகுந்தால் எவ்வளவு களேபரங்கள் நடக்குமோ, அதுபோல, அகர்தலா ஆட்சியர் திருமணக் கூடத்திற்குள் புகுந்து ரகளை செய்தது ஒத்துப் போவதாக குமறுகிறார்கள், திரிபுரா ஊடகவியலாளர்கள்….

பாதிக்கப்பட்டவர் தரப்பு வாதம்…

இந்த வீடியோவில் இரண்டு திருமண நிகழ்ச்சியில் போலீசார் நுழைந்து அனைவரையும் வெளியேறுமாறு விரட்டுகின்றனர். பெரும்பாலோர் முகக்கவசம் அணிந்திருந்தும் ஊரடங்கு நேரம் இரவு 10 மணிக்கு மேல் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தததால் போலீசார் அனைவரையும் திருமண மண்டபத்திலிருந்து வெளியேற்றுகின்றனர். எவ்வளவோ செலவு செய்து ஏற்பாடு செய்திருந்த திருமணம் தடை பட்ட வலியோடு மக்கள் கலைவதை பார்க்க முடிகிறது. பெருந்தொற்று இரண்டாம் அலை பரவும் இந்த நேரத்தில் போலீசாரின் கடமை உணர்வு புரிந்தாலும், “நல்ல நேரம் இன்னும் ஒரு மணி நேரத்தில். தயவு செய்து கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்” என்று கெஞ்சும் ஒரு மணப்பெண்ணின் மருத்துவம் படித்த சகோதரனை தங்கள் கடமையை செய்ய விடாமல் தடுத்ததாக கூறி கைது செய்யும் அந்த அதிகாரியின் செயல் நியாயம் அல்ல என்று கூறுகின்றனர். மேலும் மணமகனின் கழுத்தில் கை வைத்து வெளியே தள்ளியது மிகவும் வருத்தம் அளிக்கும் செயலாகும்.