Sun. Apr 20th, 2025

ஆக்சிஜன் கையிருப்பு விவகாரத்தில் தமிழகம் மற்றும் கேரளம் ஆகிய இரண்டு மாநிலங்களும் சிறப்பாக கையாள்வதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா 2வது அலையில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆக்சிஜன் பிரச்னை போன்றவை பற்றி உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததபோது, உச்சநீதிமன்ற அமர்வு பல்வேறு கருத்துகளை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு :

ஆக்சிஜன் உள்ளிட்ட விவகாரங்களை உயர்நீதிமன்றங்கள் விசாரிப்பதையே விரும்புகிறோம்.

உயர்நீதிமன்றங்கள் விசாரித்தாலும் நாங்களும் மௌனமாக இருப்பதை விரும்பவில்லை.

ஆக்சிஜன் என்பது நாடு சார்ந்த பிரச்னை அதை அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது.

உயர்நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்கு வராத விவகாரங்களை நாங்கள் விசாரிக்கிறோம்.

தேசிய அளவிலான பிரச்சினைகளை முன்னின்று விசாரிக்க வேண்டியது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பு என நீதிபதிகள் கூறினர்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, தமிழகம், கேரளா போன்ற மாநிலங்கள் ஆக்சிஜன் கையிருப்பை வெற்றிகரமாக கையாளுவதாக தெரிவித்தார்.

இதைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், கொரனோ இரண்டாம் நிலையில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள், ஆக்சிஜன் விநியோகம், ரெம்டெசிவர் கையிருப்பு, படுக்கை வசதி உள்ளிட்டவை பற்றி அறிக்கை தர மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.