உச்சநீதிமன்றத்தின் அண்மை கால செயல்பாடுகள் கபடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டு வருகின்றன. முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ஓய்வு பெறுவதற்கு முன்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிரான வழக்குகளில் எல்லாம் அவசர அவசரமாக தீர்ப்பு வழங்கினார். அவரின் நடவடிக்கைகள் அனைத்தும் பாஜக அரசுக்கு ஆதரவாகவே இருக்கின்றன என்று உச்சநீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞர் தஸ்யந்த் தேவ் தெரிவித்துள்ளார்.
அதே விதமான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கியுள்ளார் கடந்த 23 ஆம் தேதி ஓய்வுப் பெற்ற மற்றொரு தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தற்போது இவர் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் கொரோனோ தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடும் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உள்பட மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன
இந்த வழக்குகளின் மீது உரிய விசாரணையை அந்தந்த மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்கள் தொடங்கியபோது, அந்த விசாரணைக்கு தடை ஏற்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதுவும் எஸ்.ஏ.பாப்டே ஓய்வு பெறுவதற்கு முதல்நாள் இந்த முடிவை எடுத்தார். அவரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசுக்கு ஆதரவாக எஸ்.ஏ.பாப்டே செயல்படுவதாகவும், நீதித்துறையின் மீதான நம்பிக்கையே தகர்ந்து போய்விட்டதாகவும், உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிரபல முதன்மை வழக்கறிஞருமான .தஸ்யந்த் தேவ் மிகுந்த வேதனையுடன் கூறுகிறார்.