Mon. Nov 25th, 2024

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ஞாயிற்றுக் கிழமையை எப்படி கொண்டாடுவது என்று பெருங்கூட்டம் திட்டம் போட தொடங்கிவிட்டது போல… அசைவப் பிரியர்கள் எல்லாம் கடற்கரையோரங்களில் மீன் வாங்க அலைமோதியபோது, வெறும் அசைவம் மட்டும் சாப்பிட்டா கொண்டாட்டம் சுமாரா தானே இருக்கும் என்று யோசித்த மற்றொரு கூட்டம், டாஸ்மாக் கடைகளை நோக்கி படையெடுத்துள்ளது.

ஊரடங்கை முன்னிட்டு விற்பனை நேரம் குறைக்கப்பட்டபோதும், நேற்று மாநிலம் முழுவதும் டாஸ்மாக் விற்பனை தாறுமாறாக இருந்திருக்கிறது. நேற்று மட்டும் 258 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன.

மாவட்டந்தோறும் விற்பனை அமோகமாக இருந்தாலும், தலைநகர் சென்னையோட போட்டி போட முடியுமா என்ன? சும்ம சொல்லக் கூடாது, அரசாங்கம் காசு இல்லாமல் திண்டாடுகிறதே என்ற வருத்தத்தில் சென்னை மக்கள் மட்டும் ரூ.58 கோடியே 37 லட்சத்திற்கு மேல் சரக்குகளை வாங்கி டாஸ்மாக் அதிகாரிகளை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார்.

258 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கில் சரக்கு விற்பனை ஆகியிருக்கிறது என்றால், ஒவ்வொரு பாட்டில் சரக்கிற்கும் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் அதிக விலை (கூடுதல் விலை) வைத்து விற்பனை செய்திருக்கும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஒட்டுமொத்தமாக பல கோடி ரூபாய் கழிவுத்தொகை கிடைத்திருக்கும். அதில், மாவட்ட மேலாளர், மண்டல மேலாளர், நிர்வாக இயக்குனர், வருவாய் துறை அதிகாரிகள் என் ஆயிரக்கணக்கானோருக்கும் கமிஷன் தொகை நான்கு இலக்கம், ஐந்து இலக்கம், ஆறு இலக்கம் என்ற விகிதத்தில் கமிஷன் தொகை கிடைத்திருக்குமே..

ஊரடங்களால், சாதாரண மனிதன் வயிற்றில் ஈரத்துணியை போட்டுக் கொண்டு அவதியுற்று வரும் நிலையில், அரசாங்க அதிகாரிகள், குறிப்பாக டாஸ்மாக் அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் வீடுகளில் மட்டும் இன்றைக்கு கிடா விருந்துதான் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும்…

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்….