Fri. Nov 22nd, 2024

1993 ம் ஆண்டில் நிறுவப்பட்ட சன் தொலைக்காட்சி, 28 ஆண்டு கால தமிழக சட்டமன்றத் தேர்தலோடு பின்னி பினைந்திருக்கிறது..கடந்து போன தேர்தல்களில், ஊடக அறத்தோடு தேர்தலை அணுகியதா என்றால் இல்லவே இல்லை என்று அழுத்தம் திருத்தமாக சொல்லும் நிகழ்வுகள் தான் ஏராளமாக இருக்கின்றன..

செய்திப் பிரிவு தொடங்கப்பட்ட சிறிது காலத்திலேயே, 1996 சட்டமன்றத் தேர்தலில், செல்வி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியை அகற்ற தொகுதி பங்கீடு செய்து கொள்ளாத கூட்டணி கட்சியாக மாறியது சன் டிவி. திமுக -தமாகா கூட்டணி வெற்றிக்காக கடுமையாக பிரசாரம் மேற்கொண்டது..

வளர்ப்பு மகன் திருமணம்-வீரப்பன் விவகாரம் என பல விஷயங்கள் சன் டிவிக்கு கைகொடுத்தன..அடுத்த 5 ஆண்டுகள் திமுக ஆட்சி என்பதால் சன் டிவி தன்னை வலுவாக நிலை நிறுத்திக் கொண்டது.. 2001 தேர்தலில் திமுக ஆட்சிக்கு முட்டு கொடுத்த போதும் அதையெல்லாம் மீறி செல்வி ஜெயலலிதா ஆட்சியை கைப்பற்றினார்..

1996 சட்டமன்றத் தேர்தலின் போது சன் டிவி பயன்படுத்திய அதே ஆயுதத்தை கையில் எடுத்த செல்வி ஜெயலலிதா, ஜெயா டிவி மூலம் 1996 – 2001 கால திமுக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்னெடுத்து, திமுக.வுக்கு நெருக்கடி கொடுத்தார்.

அந்த ஐந்தாண்டுகளில் திமுக.வோடு கூட்டணி வைத்திருந்த ஜி.கே.மூப்பானர், 2001 நிறைவில், திமுக ஆட்சியை மக்கள் விரோத ஆட்சி என்று சொன்னதை வலுவான பிரசாரமாக முன்னெடுத்தது ஜெயா டிவி. அதைவிட ராஜதந்திரமாக, மூப்பனார், காங்கிரஸோடு கூட்டணி அமைத்து, ஆட்சியைப் பிடித்தார் ஜெயலலிதா.

கலைஞர் மு கருணாநிதி கைதில் ஆரம்பித்த அதிமுக அரசுக்கு எதிரான போராட்டம், 2001- 2006 என ஐந்து ஆண்டு காலமும் நீடித்தது.. தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக ஊடகங்களின் முற்றுகை போராட்டத்தின் பின்னணியாக இருந்தது சன் டிவி என்ற குற்றச்சாட்டும் உண்டு..

அதிமுக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி போராட்டங்களை விட ஊடகம் என்ற ஆயுதம் மூலம் சன் டிவி முன்னெடுத்த பிரசாரம் அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய தலைவலியாக அமைந்தது..

அதற்கு பரிசாக 2004 ல் சன் டிவி உரிமையாளர்களில் ஒருவரான தயாநிதி மாறனுக்கு எம். பி. பதவி வழங்கப்பட்டு மத்திய அமைச்சர் பதவியும் அதுவும் அவர் சார்ந்த தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பத் துறை வழங்கப்படுகிறது.. செல்வம் கொழிக்கும் துறையுடன் இந்தியாவையே ஆட்டி படைக்கும் அதிகாரமும் கிடைத்த போது அதிகார தள்ளாட்டம் அதிகமாகி டாடா உள்ளிட்ட பாரம்பரிய பழுத்த தொழிலதிபர்களையே கோபாலபுரம் வீட்டு வாசலை மிதிக்க வைத்தது. அதே அதிகாரம், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகிய இருவரையும் கோபாலபுரம் வீட்டு வாசலையையே மிதிக்க விடாமலும் செய்ததுதான் விதி.

மதுரை தினகரன் நாளிதழ் எரிப்பு விவகாரத்தில், கலைஞர் மு.கருணாநிதியையே சகோதரர்கள் இருவரும் சீண்ட, மத்திய அமைச்சர் பதவி பறிபோனது. கோபாலபுரம் கதவு அடைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து 2008 நவம்பர் மாதம் வரை சன் டிவி, திமுக.வுக்கு வேப்பங்காயாக மாறியது.

இந்த காலத்திற்கு இடைப்பட்ட 2007 செப்டம்பர் மாதம் கலைஞர் தொலைக்காட்சி உதயமானது. திமுக.வின் ஊதுகுழல் என்ற அடையாளத்தை சன் தொலைக்காட்சி இழந்தது. கண்கள் பனித்தது, இதயம் இனித்தது என்ற புகழ் பெற்ற வசனத்தோடு, கலைஞர் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்தினருக்கு இடையேயான பசலை நீங்கியது.

அதற்கடுத்து, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் தயாநிதி மாறனுக்கு வாய்ப்பு. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் என்ற போதும், கோபாலபுரத்திலும், அண்ணா அறிவாலயத்திலும் சன் டிவி.க்கு 1996 – 2006 வரை கிடைத்து வந்த அபரிதமான செல்வாக்கு, கிடைக்காமல் போனது. 2006 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அமைத்த கூட்டணி வியூகத்தில் அணில் போல சன் டிவி.யின் பங்களிப்பும் இருந்ததாக பேச்சு எழுந்தது.

2009 க்கு முன்பு வரை காட்சி ஊடக தளத்தில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த சன் டிவியின் செல்வாக்கு, கலைஞர் டிவி, புதிய தலைமுறை தொலைக்காட்சி போன்ற போட்டி ஊடகங்களால், மங்கத் தொடங்கியது.

1996 முதல் 2011 வரையிலான இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலும் அதிமுக.வுக்கு எதிரான வியூகங்களை வகுத்து திமுக.வின் வெற்றிக்கு பக்கலமாகவே இருந்தது சன் டிவி. 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக.வின் ஆட்சியே மலர வேண்டும் என்ற ஆசையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்து விடாமல் இருக்க, அதன் தலைவர் விஜயகாந்தின் பேச்சுகளையே அதிமுக.வுக்கு எதிராக பயன்படுத்தியது. ஆனாலும், அப்போதைய தேர்தலில் சன் டிவி.யின் வியூகம் வெற்றி பெறவில்லை.

2016 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக.வுக்கு எதிராக கடும் கோபத்தில் இருந்த நடிகர் விஜயகாந்த்தை திமுக.வுடன் கூட்டணிக்கு இழுக்க நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சன் டிவி.யின் பங்கும் கணிசமாக இருந்தது. அந்த நேரத்தில் பெரும் பங்காற்றியவர், தற்போதைய திமுக எம்.பி. கனிமொழிதான் என்றும் பேச்சிருந்தது.

பழம் கனிந்துவிட்டது பாலில் விழ வேண்டியதுதான் பாக்கி என்ற புகழ்பெற்ற வசனமும் அப்போதுதான் பிறந்தது. அந்த தேர்தலிலும் சிறியளவில் பங்களிப்பு செய்திருந்தாலும் சன் டிவியின் முயற்சிக்கு வெற்றிக் கிடைக்கவில்லை.

கடந்த பத்தாண்டு கால அதிமுக. ஆட்சிக்கு எதிராக சன் டிவி முன்னெடுத்த பிரசாரத்தையெல்லாம், புற்றீசல் போல உருவாகிவிட்ட பிற ஊடகங்களின் பாராட்டு மழை, கபளீகரம் செய்துவிட்டன.

கடுகு சிறுத்தாலும் கரம் குறையாது என்ற கதையாக, 2021 தேர்தலிலும் அரசியல் வியூகங்களை வகுத்து திமுக.வின் வெற்றிக்கு கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது சன் டிவி என்பதுதான் சுவாரஸ்யம்.

கடந்த தேர்தல்களில் எல்லாம் அரசியல் ரீதியாக காய் நகர்த்தி வந்த சன் டிவி நிர்வாகம், இந்த முறை திரையுலக பிரபலங்கள் மூலம் அதிமுக வெற்றிக்கு செக் வைக்க முயற்சிக்கின்றன என்ற தகவல்கள்தான், இன்றைய தேர்தலில் டிவிஸ்ட்.

நடிகர் ரஜினி அரசியலில் இருந்து பின்வாங்கிய விவகாரத்திலும் சன் டிவி.யின் பங்களிப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. அதைவிட, இளம் தலைமுறையினரிடம் அதீத செல்வாக்குப் பெற்ற தல அஜித், தளபதி விஜய் ஆகியோரையும் அதிமுக.வுக்கு எதிராக திருப்பியதில்தான் மாறன் சகோதர்களின் ராஜதந்திரம் மறைந்து இருப்பதாக கூறுகிறார், திமுக முன்னணி தலைவர் ஒருவர்.

பெரும்பாலும் தன்னை சுற்றி எந்தவொரு சச்சரவும் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர் தல அஜித். அப்படிபட்டவரே, மாறன் சகோதர்களின் ஆலோசனையை ஏற்றுதான் வாக்குப்பதிவின் போது கருப்பு கலரில் முக கவசமும் அதன் கயிறு சிகப்பும் இருக்கும் வகையில் அமைத்துக் கொண்டார் என்று கொளுத்திப் போடுகிற கூட்டமும் திமுக.வில் இருக்கிறது.

ஆனால், திரைப்படம் ரீலிஸ் ஆகும் சமயமாக இருந்தாலும் சரி, படம் திரைக்கு வந்தப் பிறகு சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருந்தாலும் சரி,இரண்டு தருணங்களையும் சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுகிற மாதிரி நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்பவர் தளபதி விஜய்.

ஆனால், அவருக்கு அதிமுக என்றாலே அலர்ச்சிதான். கொட நாட்டிலும், கிரீன்வேஸ் சாலையிலும் காக்க வைக்கப்பட்ட அவமானத்தை அவர் மறந்து விட தயாராக இருக்க மாட்டார். அடிபட்ட புலியாக இருக்கும் தளபதி விஜயையும், அவரது கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளத்தையும் திமுக.வுக்கு ஆதரவாக மாற்ற வேண்டும் என்ற யுக்தியில், கருப்பு சிகப்பு கலரை அடையாளமாக கொண்ட மிதிவண்டியில் வாக்குச்சாவடிக்கு வர வைத்ததும் மாறன் சகோதர்கள் என்று அடித்துக் சொல்கிறார்கள், திமுக.வில் உள்ள அவர்களது நலம் விரும்பிகள்.

இவ்வளவு நுண்ணியமான வேலைகள் கூட திமுக.வின் வெற்றிக்கு கைகொடுக்கும் என்ற சிந்தனையில் மாறன் சகோதர்கள் வியூகங்கள் வகுத்ததை கூட ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இப்படிபட்ட செயல்கள் மூலம் திமுக.வுக்கு வெற்றியை தேடி தர மாறன் சகோதரர்களும், சன் டிவி.யும் உழைக்கிறது என்று தொடர்புபடுத்தி முன்னெடுக்கிற பிரசாரத்தை என்னவென்று சொல்வது?

சாம்ராஜ்யமாக இருந்தாலும் வயிறு இருக்கிறது. சாமானியனாக இருந்தாலும் வயிறு இருக்கிறது, கூடவே வாரிசுகளும் இருக்கின்றன.

இல்லையென்றால், மறைந்த கலைஞர் மு கருணாநிதிக்கு புகழ் சேர்க்கும் வகையில் திருச்சியில் ஊடகவியலாளர்கள் பங்கேற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், இந்து ராம் உள்ளிட்ட பிரபல ஊடகவியலாளர்கள், சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, நெகிழச் செய்யும் வகையில் பேசியபோதுகூட, அவரைப் பற்றி ஒற்றை வார்த்தைக் கூட பேசாமல், கலைஞரின் புகழை மட்டுமே பாடிய மூத்த ஊடகவியலாளர் குணசேகரனனை, சன் டிவி செய்தி ஆசிரியராக உயர்ந்த இடத்தில் வைத்ததிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்பு பணிவு காட்ட வைத்ததிலும் இருக்கிறது மாறன் சகோதர்களின் தேர்தல் நேர ராஜதந்திரம்…..