தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அவரை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
வரும் 19ம் தேதி அவர் பதவியேற்க இருந்த நிலையில், அவரின் நியமனத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. சுற்றுச் சூழல் துறையில் போதிய அனுபவம் இல்லாதவர் கிரிஜா வைத்தியநாதன் என்றும் எனவே அவரது நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியிருந்தனர்.
அந்த மனு மீதான விசாரணை கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு சட்டப்படி தேவைப்படும் தகுதியை கிரிஜா வைத்தியநாதன் பெற்றிருக்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்து, அவரின் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்தனர். வழக்கு விசாரணை 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தனர். அதனை ஆய்வு செய்த நீதிபதிகள், பசுமை தீர்ப்பாயத்தில் நிபுணத்துவம் இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவது தொடர்பாக தங்களது அதிருப்தியை மீண்டும் வெளிப்படுத்தினர். மேலும், இடைக்கால தடை நீக்கப்படுவது தொடர்பான உத்தரவு இன்று (17 ஆம்தேதி) வழங்கப்படும் என்றும் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
இன்று இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதில், தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டது செல்லும் என்று உத்தரவிட்டதுடன், பூவுலக நண்பர்கள் அமைப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யும் உத்தரவிட்டனர்.