தமிழ் திரையுலகில் நகைச்சுவை சக்கரவர்த்தியாக உயர்ந்த நடிகர் விவேக்கின் எதிர்பாராத மரணம், திரையுலகை கண்ணீர் கடலில் மூழ்கடித்துவிட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்திய திரையுலக பிரபலங்கள் முதல் ரசிகர்கள், பொதுமக்கள் என ஒவ்வொருவருக்கும் நடிகர் விவேக்கின் புகழைப் பற்றி பேச ஏராளமான விஷயங்கள் இருந்து இருக்கின்றன. அவரவர் நினைவுகளை பகிர்ந்து கொண்ட போது, கேட்பவர்கள் எல்லோரும் கலங்கிப் போனார்கள்.
அதையெல்லாம் மிஞ்சம் வகையில், மங்களகரமான விழா ஒன்றைக் கூட பார்க்காமல் கண்மூடிப் போன விவேக்கின் துர்ப்பாக்கியத்தை அவரது உறவினர்கள் கதறல்களோடு கூறியபோது, ஒட்டுமொத்த கூட்டமும் அழுகையை அடக்க முடியாமல் தவித்துப் போனார்கள்.
நடிகர் விவேக் கடைசியாக அளித்த நேர்காணலில் கூறியதை நினைவுக் கூர்ந்தனர்.
, ‛‛திரைப்படத்தை, குடும்பத்தையும் எப்போதும் நான் ஒன்றாக இணைக்க மாட்டேன். புதல்விகள் பற்றி பெருமிதத்துடன் கூறியதுடன் மூத்த மகள் அமிர்தநந்தினி ஆர்கிடெக்ட்டாக உள்ளார். அவருக்கு திருமணம் செய்ய தீர்மானித்தோம். மாப்பிள்ளையும் பார்த்து வருகிறோம். இளையமகள் தேஜஸ்வினி சிட்டி வங்கியில் வேலை பார்க்கிறார். இருவருக்கும் திரைப்படத்துறையில் நாட்டமில்லை. அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையில் என தெளிந்த மனநிலையில் கூறியுள்ளார்.
5 ஆண்டுகளுக்கு முன்பு அவரது ஒரே மகன் இறந்த துக்கத்திலேயே அவர் நீண்ட காலமாக இருந்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளில்தான் அவர் மகனின் பிரிவில் இருந்து மீண்டு வந்து மகளின் திருமண ஏற்பாடுகளில் இருந்தார். மங்களகரமான விழா, குடும்பத்தில் கூடி வந்த தருணத்தில் விவேக்கை காலன் அழைத்துக் கொண்டதுதான் பெரும்துயரம். பெண் குழந்தைகளுக்கு தந்தையின் பாசம், அரவணைப்ப இல்லாமல் போவது, அதுவும் திருமண விழாக்கள் போன்ற நிகழ்வின் போது தந்தையின் அருகாமை இல்லாமல் இருந்தால் எவ்வளவு மனவலியை ஏற்படுத்தும் என்பதை பெண் பிள்ளைகளின் மனதோடு ஒத்து நின்று பார்த்தால் அனைவராலும் உணர முடியும் என்று கண்ணீரோடு கூறினார்கள் விவேக்கின் உறவினர்கள்.
திரைத்தொழிலை கடந்து சுற்றுச்சூழலையும், மரம் நடுதலையும் உயிர்மூச்சாக கொண்டதுடன், சமூகம் சார்ந்த விழிப்புணர்வை முன்னெடுத்த அவரின் மனிதநேயத்திற்கு மரியாதை அளிக்கும் வகையில், அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றுதான் ஆறுதல் அளிக்கிறது என்று நெகிழ்ச்சியோடு கூறினார்கள் விவேக்கின் நெருங்கிய நண்பர்கள்…