Sat. Nov 23rd, 2024

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்தார்

இதுதொடர்பாக டெல்லி முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம் இதோ…

டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

டெல்லியில் வார இறுதி நாட்களில் செயல்பட்டு வந்த காய்கறி உள்ளிட்ட விற்பனைச் சந்தைகள் இனி வார நாட்களில் செயல்படும்

வார இறுதி நாட்களான சனி, ஞாயிறன்று உணவகங்களில் டெலிவரி சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

வார இறுதி நாட்களில் தியேட்டர்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் செயல்படாது.

ஓட்டல்களில் பார்சல் வழங்க அனுமதிக்கப்படும்

இவ்வாறு டெல்லி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

கொரோனோ தொற்று 2 ஆம் அலை பரவத் தொடங்கியதையடுத்து, இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நேற்று மட்டும் 17,282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் இதுதான் அதிக உச்சமாக பார்க்கப்படுகிறது. சிகிச்சை பலனின்றி நேற்று மட்டும் 100 பேர் உயிரிழந்துள்ளது, டெல்லி மக்களை அச்சமடைய வைத்துள்ளது. 
இருப்பினும், முதல்வர் கெஜ்ரிவால், தொற்று பரவலை கண்டு பயப்பட வேண்டாம். சுகாதாரத்துறை அறிவித்துள்ள கொரோனோ நெறிகாட்டு முறைகளை கடைப்பிடிப்பதில் அலட்சியம் வேண்டாம் என்றும் வார இறுதிநாளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதே, டெல்லி குடிமக்களும், அவர்தம் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகதான். ஆகவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் கெஜ்ரிவால். 


வார இறுதிநாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அம்மாநில துணை நிலை ஆளுநர், அமைச்சரவை சகாக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தினார். ஊரடங்கு காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பு நடவடிககைகள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.