மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலையொட்டி, ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இரண்டு கட்சித் தலைவர்களின் தீவிரப் பிரசாரத்தால், மேற்கு வங்க மாநிலத்தில் அனல் வீசிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே 4 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 5 ஆம் கட்டத் தேர்தல் வரும் 17 ஆம் தேதி நடைபெறுகிறது.
மேலும் மூன்றுக் கட்டத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மத உணர்வுகளைக் தூண்டிவிடுவதாக பிரசாரம் மேற்கொண்டதாக பாஜக புகார் தெரிவித்தது. இதனையடுத்து, விளக்கம் கேட்டு, மம்தாவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. அதன்பேரில் மம்தா அனுப்பிய பதிலில் திருப்தியில்லை எனக் கூறி, மம்தா பிரசாரம் மேற்கொள்வதற்காக 24 மணிநேர தடை விதித்தது. ஒருநாள் தடை உத்தரவு இன்று இரவு 8 மணியோடு முடிவடைந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் தடை உத்தரவு ஒரு சார்பானது எனக் கூறி இன்று காலை மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், பாஜகவுக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.