கொரோனோ தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி முனைப்புடன் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, பிரதமர் மோடி, நான்கு முக்கிய அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒவ்வொரு தனி மனிதரும் கொரோனோவை எதிர்த்து போராட வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு சிகிச்சையளிக்க வேண்டும். ஒருவரை காப்பாற்ற வேண்டும் என்ற நான்கு அம்சங்களை கடைப்பிடித்தால், கொரோனோ தொற்று அச்சுறுத்தலில் இருந்து எளிதாக விடுதலைப் பெற்று விட முடியும் என்று நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதயும் பிரதமர் மோடி சுட்டிக் காட்டியுள்ளார். இந்தியாவில் கொரோனோவுக்கு எதிரான முதல் அலையை வெற்றிக்கரமாக எதிர்கொண்டதாக கூறிய பிரதமர், தற்போது நாடு முழுவதும் அச்சுறுத்தும் விதமாக பரவி வரும் இரண்டாவது அலையையும் வெற்றிக் கொள்ள பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசியை செலுத்திக் கொண்டால், உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதையும் உணர முடியும் என்றும் மோடி கூறியுள்ளார். இரண்டாவது அலையை எதிர்த்து போராடி இந்தியா விரைவாக வெற்றிப் பெறும் என்று கூறிய பிரதமர், தேவையற்ற பயணத்தை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.