நாடு முழுவதும் கொரோனோ தொற்று தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முக்கிய சாதனையை தொடும் நிலைக்கு இந்தியா வந்துள்ளது. இதுவரை 9 கோடியே 80 லட்சம் பயனாளிகள் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 34 லட்சத்திற்கு அதிகமாக மக்கள் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஏறக்குறைய ஒரு லட்சத்து 45 ஆயிரம் பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 32 லட்சத்திற்கு மேல் உயர்ந்து இருக்கிறது. ஒரு நாளில் சிகிச்சைப் பலனின்றி 794 பேர் இறந்துள்ளனர்.
கொரோனோ தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிகை நடவடிக்கைகள் எடுத்து வரும் அதேநேரத்தில், தடுப்பூசி போடும் பணியும் நாளை முதல் நாடு முழுவதும் முக்கிய பணியாக மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் மூலம், கொரோனோ தொற்று மேலும் பரவாமல் கட்டுப்படுத்துவதுடன், நோயின் தாக்கத்தையும் குறைக்க மத்திய அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.