Sat. Nov 23rd, 2024

சிறப்புச் செய்தியாளர்…

2015 – 16 ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான பணி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விறுவிறுப்புடன் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நான் ஜெயா டிவியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஊடகவியலாளர் ஒருவரின் மகளுக்கு, பொறியியல் கல்லூரியில் அனுமதி பெறுவதற்கான முயற்சியில் இருவரும் இணைந்து ஈடுபட்டு வந்தோம். வாரத்தில் ஓரிரு நாள் தலைமைச் செயலகம் செல்லும் போதெல்லாம் அப்போது பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அலுவலக அறைக்கு சென்று சந்திப்பது வழக்கம்.

அந்த வகையில், அந்த கல்வியாண்டில், அமைச்சர் அலுவலகத்திற்குச் சென்றிருந்த போது, கத்தை, கத்தையாக அதிமுக நிர்வாகிகளின் விண்ணப்பங்கள் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கொண்டிருந்தது. விசாரித்ததில், அதிமுக பிரமுகர்களின் வாரிசுகளுக்கு தனியார் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கு பரிந்துரைக்குமாறு வேண்டிக் கொள்ளும் விண்ணப்பங்கள் என தெரியவந்தது.

ஒரு சோதனைக்காக நானும், எனது நண்பரின் மகளுக்கு பி.டெக் படிப்புக்காக ஷிவ் நாடார் பொறியியல் கல்லூரியில் சேர்க்கைக்கு பரிந்துரைக்குமாறு, பொதுப்பணித்துறை அமைச்சரிடம் கேட்டேன். அதற்கென்ன, ஒரு விண்ணப்பம் கொடு.. அம்மா அவர்களுக்கு அனுப்பி வைத்து கல்லூரியில் சேர்த்து விடலாம் என்று என்னிடம் கூறினார். எனக்கு அப்போதும் சந்தேகமாகதான் இருந்தது.

ஏனெனில், நான் விசாரித்து அறிந்தவரை, பழைய மகாபலிபுரம் செல்லும் சாலையில் உள்ள காலபாக்கம் ஷிவ் நாடார் கல்லூரியில் அரசியல் பரிந்துரைக்கு இடமளிப்பதில்லை என்பதுதான். அமைச்சரின் அறிவுரைக்கு ஏற்ப ஒரு விண்ணப்பத்தினை எழுதி கொடுத்து விட்டு வந்துவிட்டேன். .

ஒரு சில நாட்கள் கழித்து, கல்லூரி சேர்க்கை தொடர்பாக விவரம்தெரிந்து கொள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். என்னிடம், அம்மா பரிந்துரை செய்கிற கல்லூரி பட்டியலிலேயே ஷிவ் நாடார் கல்லூரி பெயரே இல்லையே.. அப்படியிருக்கும் போது நான் எப்படி பரிந்துரை செய்வது.. அம்மாவிடம் அனுமதி பெறாமல் நான் பரிந்துரை செய்தால், ஏதாவது பிரச்னையாகிவிடும். அந்த கல்லூரி நிறுவனர் ஷிவ் நாடார், அம்மாவிடம் நேரடியாக பேசக் கூடியவர். வேறு ஏதாவது தனியார் கல்லூரியில் சேர்ப்பதாக இருந்தால் முயற்சி செய்து பார்க்கலாம். அம்மா பரிந்துரை செய்கிற கல்லூரி பட்டியல், சிறப்பு உதவியாளரிடம் இருக்கிறது. அதைப் பார்த்து தேர்வு செய்யுங்கள் என்று கூறினார் பொதுப்பணித்துறை அமைச்சர்.

அமைச்சர் மூலமாக கல்லூரியில் சேரும் வாய்ப்பு கை கூடவில்லை.

நான் விசாரித்து அறிந்தவரை, ஷிவ் நாடார் பொறியியல் கல்லூரியில் அரசியல் சிபாரிசுக்கே இடம் இல்லை என்பதுதான், ஆச்சரியமான விஷயம். அந்த கல்லூரியைத் தவிர, சென்னையில் உள்ள மற்ற அனைத்து தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் கூட அரசியல் சிபாரிசுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

ஆனால், ஷிவ் நாடார் கல்லூரி வளாகத்திற்குள் அரசியல்வாதிகள் நுழைவதற்கு அந்த கல்லூரி நிர்வாகிகள் அனுமதி வழங்குவதே இல்லை. போயஸ் கார்டனில் இருந்தும் அந்த கல்லூரியில் அனுமதி கேட்டு பரிந்துரை சென்றதாக எனக்கு தகவல் இல்லை. தலைமைச் செயலகத்தில் உள்ள உயரதிகாரிகள், ஐ.பி.எஸ். உயரதிகாரிகள் யாராவது வேண்டுமானால், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி கல்லூரி சேர்க்கை பெற்றிருக்கலாம். அதையும் உறுதியாக சொல்ல முடியாது.

இத்தனைக்கும், 2015 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஷிவ் நாடாரும் கலந்துகொண்டார். அப்போது தொழில் துறை அமைச்சராக இருந்தவர் பி.தங்கமணி. இருந்தபோதும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் ஷிவ் நாடார் கல்லூரிக்கு பரிந்துரை கடிதம் கொடுக்க அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயந்தார்.

காலத்தின் கோலம், அவரே முதல்வராகி, அவரது தலைமையில் நடைபெற்ற இரண்டு மாநாடுகளிலும் ஷிவ் நாடார் கலந்துகொள்ளும் அற்புதம் நடந்தது. தற்போது கூட அவரது பல்லைக்கழகத்திற்குள் அரசியல் சிபாரிசோடு வருவதை அவர் விரும்புவதே இல்லை என்பது மட்டும் நிஜம்.

ஷிவ் நாடாரின் புதல்வி ரோஷினி நாடார், ஹெச்.சி.எல். தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை பொறுப்பை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்றார். இந்தியாவில் பிரபலமான தகவல் தொழில் நுட்ப நிறுவனத்திற்கு தலைமை ஏற்ற முதல் பெண் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. இந்திய பணக்காரர் பட்டியலில் 3 வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். அவருக்கு கிடைத்திருக்கும் பெருமையை நேற்றைய தினமே அறிந்திருந்த போதும், பாஜக பிரபலம் காயத்ரி ரகுராம், அவரது டிவிட்டர் பக்கத்தில் ஷிவ் நாடார் பற்றி பதிவு வெளியிட்டிருந்ததால், அவரது பெயரை கேட்டவுடனே பயந்து போன முதல்வர் பழனிசாமி நினைவுகளையும் பதிவு செய்ய வேண்டும் என தோன்றியது.