சென்னையிலுள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக தமிழ்நாடு முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை நியமனம்செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து, பூவுலக நண்பர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினர் ஆவதற்கு ஐந்து ஆண்டுகள் சுற்றுச்சூழல் தொடர்பான துறைகளில், நிறுவனங்களில் பணியாற்றி இருக்கவேண்டும் என்பது விதி.கிரிஜா வைத்தியநாதனிற்கு அந்த அனுபவம் கிடையாது. அவருடைய நியமனம் சட்டவிரோதமானது. அவர் நிபுணத்துவ உறுப்பினராக பதவியேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
பூவுலகின் நண்பர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. அப்போது அரசு மற்றும் மனுதாரர் ஆகியோரின் வழக்கறிஞர்களின் விவாதத்திற்குப் பிறகு, நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் பதவியேற்பதற்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற கிரிஜா வைத்தியநாதனுக்கு துறை சார்ந்த போதிய தகுதி இல்லை எனவும் சட்டப்பட்டி அந்த பதவிக்கான தகுதியை கிரிஜா வைத்தியநாதன் வளர்த்துக் கொள்ளவில்லை என்றும் இடைக்காலத் தடை உத்தரவில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வரும் 19ஆம் தேதி தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக பதவி ஏற்க கிரிஜா வைத்தியநாதன் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் அவரின் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பூவுலக நண்பர்கள் தாக்கல் செய்திருந்த வழக்கிற்கு கிடைத்த வெற்றி என்று அவர்களின் முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும், தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு கிரிஜா வைத்தியநாதனை நியமித்தது திருப்தியளிக்கவில்லை. நாம் தொடர்ந்த வழக்கி அவர் பதவியேற்க இடைக்கால தடை வழங்கி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.