Sat. Nov 23rd, 2024

இந்தியாவை கடந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நித்தியானந்தாவின் ஒவ்வொரு செயலுமே சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. கொரோனோ தாக்குதல், சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றால், அவரைப் பற்றிய நினைவே இல்லாமல் மக்கள் இருந்து வந்து வந்தனர். இந்நிலையில், சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தைப் போல, திருப்பதி திருமலை ஏழுமலையான் அவதாரத் தோற்றம் போல, அலங்காரம் செய்து நித்தியானந்தா வெளியிட்ட புகைப்படங்கள், பக்தர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பவர் நித்தியானந்தா. மத்திய அரசின் சட்டநடவடிக்கைகளுக்கு பயந்து, சட்டத்திற்கு விரோதமாக இந்தியாவில் இருந்து வெளியேறி, தென் அமெரிக்காவில் உள்ள ஒரு தீவில், கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாகவும், தனது நாட்டுக்கான நாணயங்களை வெளியிட்டு அலப்பறை கொடுத்து வந்தார் நித்தியானந்தா.

தமிழர்கள் உள்பட பல்வேறு நாட்டில் உள்ள தொழில் அதிபர்களை, கைலாசா நாட்டில் தொழில் தொடங்கவும் அழைப்பு விடுத்தார். அதற்கு விருப்பம் தெரிவித்தவர்களை காவல்துறை சுற்றி வளைத்தது. புதுப்புது வீடியோக்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகும் நித்தியானந்தா தற்போது ஒரு புகைப்படம் மூலம் வைரலாகி வருகிறார்.

நித்தியானந்தாவின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் திருப்பதி ஏழுமலையான் அவதாரம் போன்ற தோற்றத்தில் அலங்காரமாக காட்சியளிக்கிறார்.

பகவான் வெங்கடேஸ்வரரின் மங்களகரமான ஆசீர்வாதங்களையும் அருளையும் பெற்று உங்கள் நிதி நெருக்கடிகளிலிருந்து வெளிவாருங்கள், செல்வம் ஏராளமாக பெருகும் என்று அவர் பதிவிட்டுள்ளார். சிவனாக, கால பைரவராக காட்சி அளித்த நித்தியானந்தா தற்போது திருப்பதி ஏழுமலையானாகவே மாறி பக்தர்களுக்கு காட்சி அளித்துள்ளது மிகுந்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூக ஊடகங்களில், அவரின் இந்த தோற்றத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து திருப்பதி பக்தர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

விரதம் இருந்து திருப்பதி வந்து மணிக்கணக்கில் காத்திருந்து திருமலை ஏழுமலையானை தரிசிப்பதே தங்கள் வாழ்நாள் பாக்கியம் என்று கருதி வரும் நிலையில், பகவானின் தரிசனத்தை கேவலப்படுத்தும் வகையில் நித்தியானந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்களை, முகநூல் பக்கத்தில் இருந்து உடனடியாக அகற்ற, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ஏழுமலையான் அவதாரத் தோற்றத்தில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களுக்கு நித்யானந்தா பாவ சமாதி தரிசனம் என்று பெயரிட்டுள்ளதும் திருப்பதி திருமலை பக்தர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.