Sat. Nov 23rd, 2024

ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ.வும் வணிக வரித்துறை அமைச்சருமான கே.சி.வீரமணி, இதே தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர். ஹாட்ரி சாதனை நிகழ்த்தும் வகையில், 3வது முறையாகவும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். அமைச்சர் தொகுதி என்பதால், இந்த தொகுதியின் தேர்தல் செலவினப் பார்வையாளர் விஜய் பஹதூர் வர்மா, தொகுதி முழுவதும் சுற்றி சுற்றி வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த மாதம் தாமலேரிமுத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே அவர் வந்து கொண்டிருந்தபோது, சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த கார் மீது சந்தேகப்பட்டு அதை சோதனையிட்டார்.

அப்போது அந்த காரில் அதிமுக சின்னம் அச்சடிக்கப்பட்ட டி-ஷர்ட்டுகள், அதிமுக கரை வேட்டி, பாமக சின்னம் அச்சடிக்கப்பட்ட துண்டுகள் உள்ளிட்ட பொருள்கள் இருந்தன. அதன் மதிப்பு 21 ஆயிரம் ரூபாய் என விசாரணையில் தெரியவந்தது. மேல் நடவடிக்கை எடுக்கமாறு தேர்தல் பறக்கும் படையினருக்கு விஜய் பஹதூர் வர்மா உத்தரவிட்டதையடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரி குமரன், காரை பறிமுதல் செய்து அதில் இருந்த பொருட்களுடன் நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து, அதிமுக வேட்பாளர் கே.சி.வீரமணி உள்ளிட்ட அதிமுக.வினருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யுமாறு ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் குமரன் புகார் அளித்தார்.

அதன்பேரில், கடந்த 26-ம் தேதி அதிமுக பொறுப்பாளர் அழகிரி (கே.சி.வீரமணியின் சகோதரர்), ஓட்டுநர், கார் உரிமையாளர், அச்சக உரிமையாளர் என 4 பேர் மீது ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். குமரன் அளித்த புகாரில் அமைச்சர் கே.சி.வீரமணி பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதும், வழக்குப்பதிவின் போது அமைச்சர் பெயரை சேர்க்காத தகவல், தேர்தல் செலவினப் பார்வையாளர் விஜய் பஹதூர் வர்மா கிடைத்தது. அதனைத்தொடர்ந்து, அவர் நேரடியாக விசாரணை நடத்தியபோது, திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல், அமைச்சர் பெயரை வழக்கில் சேர்க்க வேண்டாம் என அறிவுறுத்தியது தெரியவந்தது.

தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு மாறாக, அமைச்சர் கே.சி. வீரமணியை காப்பாற்றும் நோக்கில் செயல்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேலின் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மூலம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பினார், தேர்தல் செலவினப் பார்வையாளர் விஜய் பஹதூர் வர்மா. அவரின் அறிக்கையின் பேரில் மேலிட உத்தரவு வந்ததையடுத்து,

காலதாமதமாக மார்ச் 27-ம் தேதி அமைச்சர் கே.சி.வீரமணியின் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது.
இதன்தொடர்ச்சியாக அமைச்சர் கே.சி.வீரமணிக்கு ஆதரவாகச் செயல்பட்ட திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேலைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்பேரில், திருப்பத்தூர் காவல் டி.எஸ்.பி. தங்கவேல் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அமைச்சருக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறை அதிகாரி மீது இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கை, தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்பதற்கான அத்தாட்சியாக இருப்பதாக, ஜோலார்பேட்டை சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.