Sat. Nov 23rd, 2024

திமுக ஆட்சி அமைந்து மக்களுக்கு செய்யப்படும் நன்மைகளை வார்க்க முதல்வர் பழனிசாமி பல்லாண்டு உயிர் வாழ வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுக பரப்புரையின் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் லட்சியத்தை நிறைவேற்ற எனது உயிரைக் கொடுத்தாவது பாடுபடுவேன் என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார். அதற்கு பதலளிக்கும் விதமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அந்தியூர், பவானி, கோபி, பவானிசாகர் ஆகிய தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை ஆற்றும் போது பதிலளித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்டு, பயத்தில் ‘உயிரை விடுவேன்’ என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் முதல்வர் பழனிசாமி. அவர் பல்லாண்டு வாழ வேண்டும்; ஆட்சி கிடைத்தால் மக்களுக்கு என்னவெல்லாம் நன்மைகளைச் செய்ய முடியும் என்பதை, திமுக ஆட்சி செயலில் காட்டுவதை அவர் பார்க்க வேண்டும். திமுக.வை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்கள். திமுக.வை யாரையும் அழிக்க முடியாது. திமு.வை அழிப்பதற்கு இதுவரை யாரும் பிறக்க வில்லை. இனிமேல் யாருமே பிறக்கவும் முடியாது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை ஏற்கெனவே அறிவித்திருக்கிறோம். கருத்துக் கணிப்புகள் எல்லாம் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. திமுக.தான் ஆட்சிக்கு வரப்போகிறது என தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். கருத்துக் கணிப்புதான் சொல்லிவிட்டதே என்று அமைதியாக இருந்துவிடக் கூடாது. ஒவ்வொரு ஓட்டும் பதிவாகும் வரை விழிப்புணர்வுடன் திமுக கூட்டணியினர்பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.