வரலாற்று சிறப்புக் கட்டுரை… பிரபல எழுத்தாளர் பாலன் நாச்சிமுத்து….
உலகம் எங்கும் வளர்ச்சி பெற்ற நாகரிகங்களை இனக்குழு நிலையில் உள்ள அநாகரிகர்கள் தாக்கி வந்துள்ளார்கள். தாக்குதலுக்கு உள்ளாகாத நாகரிகம் என்று எதுவும் இல்லை. வலிமையாக இருக்கும்வரை அவை இத்தாக்குதலைத் தாக்குப்பிடிக்கின்றன. வலிமை இழக்கும்போது அவை தாக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. இது போன்ற தாக்குதலிலிருந்து பாதுகாப்புப் பெறவே கி.மு. 3ஆம், 2ஆம் நூற்றாண்டுகளில் சீனா பல ஆயிரம் கி.மீ தூரமுள்ள பெருஞ்சுவரைக் கட்டியது.செர்மானிய இனக்குழுக்கள் உரோமைத் தாக்கி அழித்தார்கள். ஊணர்கள் முதலான பல இனக்குழுக்கள் இந்தியாவைத் தாக்கினார்கள். பிற்காலத்தில் மங்கோலியர்கள் இனக்குழு நிலையில் பல நாகரிகங்களைத் தாக்கி அழித்தார்கள்.
கி.மு. 1100 வாக்கில் டோரியர்கள் எனப்படும் இனக் குழுக்கள் கிரேக்கத்தின் மீது படையெடுத்து அனைத்தையும் அழித்தார்கள். அழிவுக்கு பிந்தைய கிரேக்கம் குறித்து, “மைசீனியாவின் (கிரேக்கத்தில் முன்பு இருந்த நாகரிகம்) கடந்த காலம் முற்றிலுமாக மறக்கப் பட்டிருந்தது…. கிராமங்கள் ஒன்றுக்கொன்று துண்டிக்கப்பட்டிருந்தன….. மக்கள் படிப்புறிவு இல்லாதவர்களாக இருந்தார்கள். கைவினைத் தேர்ச்சி முதிர்ச்சி பெற்றிருக்கவில்லை எனக் கூறுகிறார் கிரிசு ஆர்மன்(4). அதன் காரணமாக 300 வருடம் கிரேக்கம் இருண்ட காலமாக ஆகியது. தாக்குதலுக்கு உள்ளான ஒவ்வொரு நாகரிகமும் இந்த நிலைக்குத்தான் உள்ளானது.
ஒரு நாகரிக மக்கள் இன்னொரு நாகரிகத்தை தாக்கும்பொழுது இந்த அழிவு ஏற்படுவதில்லை. ஆனால் பழங்குடிகளின் தாக்குதல் அழிவை ஏற்படுத்தியது.பழங்குடி நிலையில் இருந்த ஆரியர்களின் தாக்குதல் குறித்து, “ஆரியர் தாக்குதல் நடத்திச் சென்ற பிறகு, அந்த இடங்கள் அளவுக்கு அதிகமாகவே சின்னாபின்னப்படுத்தப்பட்டன. அதன்பின்னர் மனித சமூகமும் வரலாறும் அங்கு மீண்டும் தோன்றக் கூடுமானால் அவை முற்றிலும் மாறுபட்ட நிலையில்தான் முடியும்” எனக் கூறுகிறார் டி.டி. கோசாம்பி(5). அதனால், இந்தியாவில் கூட ஆரியர் வருகைக்குப்பின் பல நூறு வருடங்கள் இருண்ட காலமாகத்தான் இருந்தது.
1000 வருடங்களுக்கு மேலான நகர அரசுகளைக் கொண்டு மிகச்சிறந்த நாகரிகத்தை உடையதாயிருந்த பழந்தமிழகம், களப்பிரர் என்ற பழங்குடியால் தாக்கப்பட்டு, கோசாம்பி சொல்வதுபோல் முற்றிலும் மாறுபட்ட நிலையில்தான் புதிய தமிழ்ச் சமூகம் உருவாகியது. டோரியர்களின் தாக்குதலுக்குப் பிந்தைய கிரேக்கத்தின் நிலை போலத்தான் தமிழகத்தின் நிலையும் கி.பி. 250 முதல் கி.பி. 350 வரை இருந்தது எனலாம். அதன் பின்னரே வளர்ச்சி ஏற்பட்டது. ஆனால் அது பழந்தமிழ்ச் சமூகத்துக்கு மாறுபட்ட ஒரு புதிய சமூகமாக உருவானது. ஆகவே இனக்குழுக்களின் தாக்குதல்களும் மீண்டும் புதிய மாறுபட்ட நாகரிகங்கள் தோன்றுவதும் மங்கோலியர் காலம்வரை உலகில் இருந்து வந்தன.
இனங்களும் மொழியும்: ஒரு காலத்தில் வரலாற்றாசிரியர்கள் இனம்(Race) மொழி இரண்டையும் ஒன்று எனக் கருதினர். இன்று இரண்டும் ஒன்றல்ல என்ற கருத்து உருவாகியுள்ளது. மேலும் இனம் என்பது தவிர்க்கப்பட வேண்டும், மறுக்கப்படவேண்டும் என்ற கருத்தும் உருவாகியுள்ளது. 1950இல் இனத்துக்குப் பதில் தேசிய இனம்(Ethinic Groups) என்பதைப் பயன்படுத்த வேண்டும் என UNESCO அறிஞர்கள் அறிவுரை கூறியுள்ளனர்( It would be better when speaking of human races to drop the term ‘race’ altogether and speak of ‘ethnic groups’ – A. Metraux (1950) “United nations Economic and Security Council Statement by Experts on Problems of Race”, American Anthropologist 53(1): 142-145). மொழி, வரலாறு, சமூகம், பண்பாடு, நாடு ஆகியவற்றைப் பொதுவாகக் கொண்டவர்கள் ஒரு தேசிய இனமாகக் கருதப்படுவார்கள் என (“ethnicity: definition of ethnicity”. Oxford Dictionaries. Oxford University Press. Retrieved 28 December 2013.) ஆக்சுபோர்டு அகராதி விளக்கம் தந்துள்ளது.
எனவே இனம் என்பது இன்று உலக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதோடு இனத்துக்குப் பதில் தேசிய இனம் என்பதுதான் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் உருவாகியுள்ளது. சான்றாக வட இந்தியர்களை ஆரியர்கள் எனச் சிலர் கருதுகின்றனர். 3500 வருடங்களுக்கு முன்பு ஆரியர்கள் இந்தியா வந்தபொழுது இங்கு தமிழிய(திராவிட) மொழி பேசும் மக்களும், வேறுசிலவகை மக்களும் இருந்துள்ளனர். அதன்பின் முசுலீம் படையெடுப்பாளர்வரை பல்வேறு வெளி இன மக்கள் இங்கு வந்து அலை அலையாகக் குடியேறினர். இராசபுத்திர அரசர்கள் அனைவரும் வெளியிலிருந்து வந்த படையெடுப்பாளர்கள்தான். ஆகவே வட இந்தியர்களை ஆரியர்கள் எனக் கூறிவிட முடியாது. அவர்கள் பல்வேறு இனங்களின் கலப்பின மக்களாவர்.
அவர்களை இந்தோ ஆரிய மொழி பேசுகிறவர்கள் என்றுதான் கூற முடியும். இந்தோ ஆரிய மொழி பேசுவதால் அவர்கள் ஆரிய இனம் என ஆகிவிட முடியாது. மொழியை அடிப்படையாகக்கொண்டு இனத்தை வரையறுப்பது என்பது முந்தைய காலத்திய தவறு. இன்று உலக அறிஞர்கள் அனைவரும் அதனைத் தவறு என ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே இனமும் மொழியும் ஒன்றல்ல.இனம், மொழி குறித்து வரலாற்று அறிஞர் இரோமிலா தாப்பர் தனது நூலில், இனத்தையும் மொழியையும் சமப்படுத்தியது தவறு என்று மாக்சு முல்லராலேயே பின்னால் உணரப்பட்டது எனவும், இருபதாம் நூற்றாண்டின் நடுவில் இனத்தையும், மொழியையும் ஒன்றுபடுத்தும் கருத்தியலானது செல்லாததாகியது எனவும் ஆரியர்கள் என்பதைவிட இந்தொ ஆரிய மொழி பேசும் மக்கள் என்று குறிப்பிடுவதுதான் மிகவும் சரியானது எனவும் இந்தோ ஐரோப்பியன்(மொழி) என்பதுபோலவே மூலத்திராவிட மொழி என்பதும் ஒரு புனைவு மொழியே எனவும் குறிப்பிட்டுள்ளார்(6).
ஆகவே இனம், மொழி ஆகிய இரண்டையும் ஒன்றுபடுத்தக்கூடாது என்பதோடு இன அடிப்படையில் யாரையும் அடையாளப்படுத்தவும் கூடாது என்பதே அவரது கருத்து.
பார்வை:4.உலக மக்களின் வரலாறு, கிரிசு ஆர்மன், விடியல் பதிப்பகம், தமிழ் மொழிபெயர்ப்பு – நிழல்வண்ணன், வசந்தகுமார் பக்: 119.5.பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி, NCBH, செப்டம்பர்-2006, தமிழாக்கம்: ஆர். எசு. நாராயணன், பக்: 136, 137.6. முற்கால இந்தியா(Early India, – From The Origens to AD 1300), இரோமிலா தாப்பர், NCBH, தமிழில்: அ.முதுகுன்றன், சூலை-2016, பக்: 47, 50, 51.சான்று நூல்கள்:1.The Cambridge Encyclopedia, of the World’s Ancient Languages, Edited By Roger D. Woodard 8th printing, 2015.2. The World Book Encyclopedia, USA, 1988, vol-10, page: 882, 1192 & VOL-12, pa: 66-692 etc
பண்டைய நாகரிகங்களும் மொழியும் – ஆநகர அரசுகளும் அறிவியல் வளர்ச்சியும்:
பண்டைய உலக நாகரிகங்கள் – 27
உலகம் முழுவதும் நாகரிகத்தின் தொடக்கத்தில் நகர அரசுகள் அல்லது நகர்மைய அரசுகள் உருவாவதை முன்பே குறிப்பிட்டோம். இவை சுதந்திரமானவையாக, சனநாயக உரிமைகளை வழங்கக்கூடியவனாக இருந்தன. அதன் காரணமாக கைத்தொழில், வணிகம், வேளாண்மை முதலியன நன்கு வேகமாக வளர்வதோடு, கல்வி, அறிவியல், தத்துவம், கலை, இலக்கியம் முதலியன நல்ல முறையில் வளர்ச்சியடையும் சூழ்நிலை உருவானது. நிறைய கண்டுபிடிப்புகளும், பொருளாதாரமுன்னேற்றமும், வளர்ச்சியும் ஏற்பட்டது.
மத்திய அமெரிக்கா, ஈராக், எகிப்து, கிரீட், கிரீசு, சிந்துசமவெளி ஆகிய இடங்களில் தொடக்கத்தில் உருவான நகரங்களில் கட்டப்பட்ட மிகப்பெரிய கட்டுமானங்கள் குறித்து புகழ்பெற்ற தொல்லியலாளர் கார்டன் சில்டே, “நகர்ப்புரட்சி” எனப் பெயர் சூட்டியுள்ளார்(1). ஆனால் நகர அரசுகள் பேரரசாகும் பொழுது தத்துவச் சிந்தனைகளும், அறிவியலும், புதிய கண்டுபிடிப்புகளும் நின்றுவிடுகின்றன. சில சமயங்களில் பின்னோக்கி செல்லும் சூழ்நிலைகூட உருவாகி விடுகிறது.கிரேக்க நகர அரசுகள் உரோமப் பேரரசை விட, பாரசீகப் பேரரசை விட பலதுறைகளிலும் புதிய சிந்தனைகளை, புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கியுள்ளன என்பது இன்று அனைவரும் ஏற்றுக்கொண்ட உண்மை.
கிரேக்க நகர அரசுகள் மட்டுமல்ல, பொனீசிய நகர அரசுகளும் உலகிற்குப் பலவற்றை வழங்கியுள்ளன. சுமேரிய நகர அரசுகள் குறித்து, “கி.மு. 3000க்கு முந்தைய இரண்டாயிரம் ஆண்டுகள் பயன்பாட்டு அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டன. இதற்குப்பிந்தைய 2000 ஆண்டுகள் மனித முன்னேற்றத்திற்கு ஒப்பீட்டளவிலான முக்கியத்துவம் கொண்ட பங்களிப்புகள் மிகச் சிலவற்றையே செய்துள்ளன என்கிறார் கிரிசு ஆர்மன்(2). இதனை நான் முன்பே குறிப்பிட்டுள்ளேன். கி.மு. 3000க்கு முன்பிருந்த 2000 ஆண்டுகால நகர அரசுகள், பிந்தைய 2000 ஆண்டுகாலப் பேரரசுகளைவிடப் பலமடங்கு நிறையக் கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளன என்பதைத்தான் கிரீசு ஆர்மன் குறிப்பிடுகிறார்.
நகர அரசுகள் வளரும்பொழுது புதிய சிந்தனைகளுக்கும் அறிவியலுக்கும் தடையாக உள்ள பூசாரி வகுப்பை அடியோடு அழித்து ஒழித்து விடுகின்றன. கிரேக்க நகர அரசுகள் முதல் அனைத்து நகர அரசுகளும் இதைச் செய்து முடிப்பதைக் காண முடிகிறது. சீனாவில் சௌ வம்ச காலத்தில் கி.மு. 770 முதல் கி.மு. 220 வரை நூற்றுக்கணக்கான சிறு சிறு தன்னாட்சி அரசுகள் இருந்தன. அக்காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து ஜெகுவசு கெர்நெட், “…கணிசமான வணிக வளர்ச்சியுடன், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளையும் கொண்ட வரலாற்றில் அறியப்பட்ட மிகச்செழிப்பான காலங்களில் ஒன்றாகும்….” எனக் கூறியுள்ளார்(3).
இக்காலத்தில்தான் கன்பூசியசு, மென்சியசு, லாவோசு போன்ற சீனத்தத்துவ அறிஞர்கள் பலர் தோன்றினர். இந்தியாவில் கூட கி.மு. 7ஆம் 6ஆம் நூற்றாண்டுகளில் 16 சனபதங்கள் எனப்பட்ட சிறு சிறு நகரஅரசுகள் இருந்த பொழுதுதான் பல புதிய சிந்தனைகள் உருவாகின.புத்தர், மகாவீரர் ஆகியோரும், பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகளும் உருவாகின. மத்திய அமெரிக்காவில் ஏற்பட்ட மாபெரும் கட்டுமானங்கள் முதல் சிந்துவெளியின் வியப்பூட்டும் நகர அமைப்புகள் வரை அனைத்திற்கும் நகர அரசுகளே காரணம்.
பழந்தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு அதன் 1000 வருடகால நகர, நகர்மைய அரசுகளே காரணம் என்பதை நாம் பலமுறை குறிப்பிட்டுள்ளோம். வரலாற்றில் கிரேக்க நகர அரசுகள் பாரசீகப் பேரரசை முறியடித்ததிற்கும், பழந்தமிழக நகர அரசுகள் மௌரியப் பேரரசை முறியடித்ததிற்கும் நகர அரசுகளின் அறிவியலும், புதிய கண்டுபிடிப்புகளும், சமூகமுன்னேற்றமும் மிக முக்கியப் பங்கை வகித்துள்ளன. ஆகவே சுதந்திரமான நகர அரசுகள், பேரரசுகளைவிட மனிதகுல முன்னேற்றத்திற்குப் பெரும்பங்கை வழங்கியுள்ளன என்பது வரலாற்று உண்மை.
பார்வை:1.உலக மக்களின் வரலாறு, கிரிசு ஆர்மன், விடியல் பதிப்பகம், தமிழ் மொழிபெயர்ப்பு – நிழல்வண்ணன், வசந்தகுமார் பக்: 48.2. “ “ “ பக்: 743. “ “ “ பக்:107,108.சான்று நூல்கள்:1..The Cambridge Encyclopedia, of the World’s Ancient Languages, Edited By Roger D. Woodard 8th printing, 2015.2. The World Book Encyclopedia, USA, 1988, vol-10, page: 882, 1192 & VOL-12, pa: 66-692 etc3.Ancient Cities By Charles Grates 2nd Edition