கோவை தெற்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசனை ஆதரித்து, நடிகை நமீதா இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
முன்னதாக பேசிய வானதி சீனிவாசன், மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அமைந்த ராணுவ தளவாட உற்பத்தி மையங்களில் ஒன்றை கோவைக்கு கொண்டு வந்து கோவையை பாதுகாப்பு தளவாட உற்பத்தி கேந்திரமாக மாறுவதன் மூலம் லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கந்து வட்டி பிடியிலிருந்து மக்களை காக்கும் பொருட்டு பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தை பெண்களிடம் உதவி மையம் அமைத்து கடன் பெற்றிடவும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் பாடுபட்டதும், தொடர்ந்து பாடுபடுவதும் மகிழ்ச்சியளிக்கிறது.
வாக்கு என்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக கடமை. அதுவும் முதல் முறை வாக்காளர்களுக்கு தங்களின் வாக்கு மறக்க முடியாததாக இருக்கும். எனவே உழைக்கும் மற்றும் செயலாற்றும் வேட்பாளருக்கு தங்கள் வாக்கை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வானதி சீனிவாசன் பேசினார்.
தொடர்ந்து பேசிய நடிகை நமீதா, தனக்கே உரிய குழந்தை தமிழில், மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டுப்போடுங்கள். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று கூறி, அங்கு திரண்டிருந்த இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும கலகலவென சிரிக்க வைத்தார்.