விளாத்திகுளம், தூத்துக்குடி,கோவில்பட்டி,திருச்செந்தூர்,திருவைகுண்டம், ஓட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
திமுக ஆட்சியில்தான் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தூத்துக்குடி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது, எங்கள் ஆட்சியில் தான்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துயர நிகழ்வை மக்கள் மறக்க முடியுமா.? ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடிய மக்களில 13 பேரை குருவிகளை சுடுவதைப் போல சுட்டுக்கொன்றதை மறக்க முடியுமா? அன்று அரங்கேற்றப்பட்ட அந்த கொடூர நிகழ்வை தொலைக்காட்சியில்தான் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று அலட்சியமாக சொன்ன பழனிசாமியை மன்னிக்க முடியுமா? முதல்வர் பதவியில் பழனிசாமி இனியும் நீடிக்க விடலாமா ?.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதற்கு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை-மகன் என இரண்டு பேர் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர நிகழ்வே போதாதா?
அதிமுக அரசின் சாதனைகளையும், திட்டங்களையும் சொல்லி பழனிசாமியால் வாக்கு சேகரிக்க முடியுமா? 10 ஆண்டுகளாக எதுவும் செய்யாமல், தேர்தல் நேரத்தில் பல இடங்களில் அடிக்கல் நாட்டுகின்றனர். மே 2 ல் தேர்தல் முடிவு வெளியாகி திமுக தலைமையிலான அரசு பதவியேற்றதும் ஜூன் 3ம் தேதி கலைஞர் மு. கருணாநிதி பிறந்தநாளில் கொரோனா நிவாரண உதவியாக .4 ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் வழங்கப்படும்.
50 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு எண்ணற்ற மக்கள் பணிகளை தொடர்ந்து ஆற்றி வருகிறேன். கொளத்தூர் தொகுதிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே நான்தான் வேட்பாளர்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.