Fri. Nov 22nd, 2024

பண்டைய உலக நாகரிகங்கள் – 22

சிறப்பு வரலாற்றுக் கட்டுரை.. பிரபல எழுத்தாளர் பாலன் நாச்சிமுத்து….

பழங்குடி நிலையில் இருந்த ஆரியர்களின் தாக்குதல் குறித்து, “ஆரியர் தாக்குதல் நடத்திச் சென்ற பிறகு, அந்த இடங்கள் அளவுக்கு அதிகமாகவே சின்னாபின்னப்படுத்தப்பட்டன. அதன்பின்னர் மனித சமூகமும் வரலாறும் அங்கு மீண்டும் தோன்றக் கூடுமானால் அவை முற்றிலும் மாறுபட்ட நிலையில்தான் முடியும்” எனக்கூறுகிறார் கோசாம்பி(7).

மத்திய ஆசியாவிலிருந்து புறப்பட்ட ஆரியர்கள் உலகின் பல இடங்களில் குடியேறினார்கள். “ஆசியா மைனரில் குடியேறிய கிட்டைட்டியரும், கிரீசில் (மைசீனியன்)கிரேக்கரும், ஈரானில் ஈரானியரும் குடியேறிய காலத்தைக் கணக்கிட்டால் கி.மு. 1500க்கு முன் ஆரியர்கள் இந்தியாவில் குடியேறியிருக்க முடியாது எனவும், இரிக் வேதத்தை இயற்றிய மிகப்பழைய முனிவர்களின் காலம் அதற்குப்பின் 300 வருடம் கழித்துத்தான் எனவும் கூறுகிறார் இராகுல சாங்கிருத்தியாயன்(8).

இரிக்வேத சமற்கிருதத்தை விட கிட்டைட்டி-மிட்டாணி ஒப்பந்த மொழியான இந்தோ ஆரிய மொழி மிகவும் தொன்மை வாய்ந்தது என்றால் வேதப்பாடல்கள் கி.மு. 14ஆம் நூற்றாண்டிற்கு அடுத்து வந்த காலத்திற்குச் சொந்தமாகும் எனக் கூறுகிறார் இரோமிலா தாப்பர்(9). கிட்டைட்டி-மிட்டாணி ஒப்பந்தம் கி.மு. 1380இல் நடந்தது. அதில் இந்தோஆரிய தெய்வங்களான மித்ரா(Mitra), வருணன்(Varuna), இந்திரா( Indra), அசுவிணிதேவர்கள் Nasatya(shvins) ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர்(10).

கிட்டைட்டி-மிட்டாணி ஒப்பந்த மொழி, மிக வளர்ச்சி பெற்ற, அன்றே எழுத்துடைய, ஒரு பண்டைய இந்தோ ஆரிய மொழி. கி.மு. 2000 அல்லது அதற்குமுன் மத்திய ஆசியாவிலிருந்து வந்த பண்டைய ஆரிய இனக்குழு மக்கள், ஆசியா மைனர் பகுதிகளில் குடியேறி வளர்ச்சிபெற்று, நாகரிக அரசுகளை உருவாக்கிய பின் போடப்பட்ட ஒப்பந்தம் அது. ஆனால் அச்சமயத்தில் இனக்குழுக்களாக, நாடோடிகளாக ஆடுமாடுகள் மேய்த்துக்கொண்டு அதே மத்திய ஆசிய ஆரிய இனக்குழுவின் ஏதோ ஒரு கிளைப்பிரிவிலிருந்து கி.மு. 1500க்குப்பின் வடஇந்தியா வந்தவர்களின் இனக்குழு மொழிதான் சமற்கிருதம்.

ஆகவே வரலாற்றுக் கண்ணோட்டத்தில் கிட்டைட்டி – மிட்டாணி ஒப்பந்த மொழி மிகவும் தொன்மையானது. சமஸ்கிருதம் பிந்தையது. ஆகவே இரோமிலா தாப்பர் கூற்றுப்படி கி.மு. 14ஆம் நூற்றாண்டிற்கு பிறகுதான் இரிக் வேதப்பாடல்கள் பாடப்பட்டன. மேற்கண்ட தரவுகள், கி.மு. 15ஆம் நூற்றாண்டிற்குப்பின் வட இந்தியாவில் குடியேறிய ஆரியர்களால் கி.மு. 1200-1000அளவில் இரிக் வேதப்பாடல்கள் பாடப்பட்டன என்பதையும் அதன்பின் கி.மு. 1000 வாக்கில் அவை தொகுக்கப்பட்டன என்பதையும் உறுதிசெய்கின்றன.

கி.மு. 1750அளவிலேயே சிதைவடைந்திருந்த சிந்துவெளி நாகரிகத்தை ஆரியர்கள் அடியோடு அழித்து ஒழித்தார்கள். சிலர் அதனை ஆரியர்கள் போர் செய்து அழிக்கவில்லை எனக் கூறியபோதும், 1000 ஆண்டுகால நாகரிகம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. அதன் எச்சங்களோ, மரபுகளோ, இன்னபிற விடயங்களோ, எதுவும் இல்லாது போனது. அதன்பின் மிக நீண்ட காலத்துக்கு இந்தியா இருண்ட காலத்தில் மூழ்கியது.

சிந்துவெளி நாகரிகத்துக்குப்பின் 1000 ஆண்டுகள் கழித்துத்தான் வட இந்தியாவில் நாகரிகம் தோன்றத் தொடங்கியது. இரிக்வேத காலகட்டம் என்பது அநாகரிக காலகட்டம். அதனை நாகரிக காலமாகக் கருத முடியாது. ஆரிய இனக்குழு பாடிய வேதகாலப் பாடல்களைப்போலவும், அதில் உள்ள கருத்துகளைப் போலவும் பல இனக்குழுக்கள் பாடல்களைப் பாடியுள்ளனர். அவை “சுமேரியருடைய திருமுறைகள், பாபிலோனிய புலம்பல் பாடல்கள், சீனர்களது வேள்விப்பாடல்கள், கிரேக்கர்களது இறைவேண்டல் பாடல்கள்”(11).

ஆகவே வேதப்பாடல்களில் தனித்துவமான சிறப்பு ஒன்றும் இல்லை. உலகின் பெரும்பாலான நாகரிகங்களின் தொடக்கத்தில் உருவான நகர அரசுகள் நன்கு வளர்ச்சியடைந்தபோது, அவை வளர்ச்சிக்குத் தடையாக இருந்த பழைய பூசாரி வகுப்புகளை முழுமையாக அழித்தொழித்தன. தமிழகத்திலும் நகர அரசுகள் வளர்ந்தபோது மிக நீண்ட காலத்திற்கு முன்பே பூசாரி வகுப்புகள் ஒழிக்கப்பட்டன. ஆனால் வடஇந்தியாவில் நகர அரசுகள் நன்கு வளருவதற்கு முன்பே பேரரசுகள் உருவானதால் பூசாரி வகுப்புகளை முழுவதுமாக ஒழிப்பது என்பது நடைபெறவில்லை. அதனால் அவை வலிமைபெற்று

கி.மு. 185-30 வரை 2 நூற்றாண்டுகளுக்கு மகத ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டன. அதன்பின் இந்தியாவில் கி.பி. 3ஆம் நூற்றாண்டுவரை வெளிநாட்டுப் படையெடுப்புகளும், உள்நாட்டுப்போர்களும் நடைபெற்று, பெரும் குழப்பம் நிலவி வந்தது. இந்தக் குழப்ப காலத்தையும் அவை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டன.

பார்வை:7.பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி(D.D.Kosambi), NCBH, செப்டம்பர்-2006, தமிழாக்கம்: ஆர். எசு. நாராயணன், பக்: 136, 1378.இரிக் வேதகால ஆரியர்கள், இராகுல சாங்கிருத்தியாயன், தமிழில் ஏ.ஜி. எத்திராசுலு, அலைகள் வெளியீட்டகம், டிசம்பர்-2004, பக்: 8.9. முற்கால இந்தியா(Early India, – From The Origens to AD 1300), இரோமிலா தாப்பர்(Romila Thaper), NCBH, தமிழில்: அ.முதுகுன்றன், சூலை-2016, பக்: 211.10. Mitanni-Aryan, From Wikipedia.11.பிரேம்நாத் பசாசு, இந்திய வரலாற்றில் பகவத்கீதை, தமிழில் கே.சுப்ரமணியன், விடியல் பதிப்பகம், சனவரி-2016, பக்: 84.

பண்டைய இந்திய நாகரிகம் – அ பண்டைய சிந்துவெளி நாகரிகம்(கி.மு.3000-1750):

பண்டைய உலக நாகரிகங்கள் – 21

இந்தியாவின் மிகப்பண்டைய நாகரிகம் என்பது சிந்துவெளி நாகரிகம். அதன் காலம் கி.மு. 3000 – 1750. இன்றைய பாக்கிசுதான் பகுதியில் சிந்து நதியின் கரையில் மொகஞ்சதாரோ நகரமும், மேற்கு பஞ்சாபில் முன்பு ஓடிய சிந்துவின் கிளை நதியான இரவியின் கரையில் அரப்பா நகரமும் இருந்தன. இந்நகர வீடுகள் பல மாடிகளைக் கொண்டனவாகவும், சுட்ட செங்கற்கல்லின் மூலம் உறுதியாகக் கட்டப்பட்டனவாகவும் இருந்தன. வீட்டில் நேர்த்தியான குளியலறைகள், கழிப்பிடங்கள் போன்ற வசதிகள் இருந்தன. அங்கு கிடைத்த மட்பாண்டங்கள் மிகவும் தரமானவையாக இருந்தன. தங்கம், வெள்ளி நகைகள், பிற சான்றுகள் ஆகியன மறைந்துபோன செல்வங்களைப்பற்றிய தடயங்களைக் காட்டின.

சிந்துவின் வீட்டுமனைத்திட்டம் தனிச் சிறப்பிற்குரியது. மிகத் தொன்மையான காலத்தில் மிக நுணுக்கமும், நேர்த்தியும் கொண்ட இது போன்ற குடியிருப்பை வேறெங்கிலும் காணமுடியாது. சிந்து சமவெளி நகர அமைப்பு உண்மையில் பிரமிப்பூட்டுகிறது. நேர்நேராகக் கோடுகளைக் கிழித்தாற்போல வரிசை வரிசையான தெருக்களுடன், மழைநீரை வெளியேற்றும் ஒப்பற்ற வடிகால் அமைப்பும், கழிவுநீரை வெளியேற்றும் சாக்கடைத்தொட்டிகளும் இருந்தன. இந்த நவீன காலம்வரை தோன்றிய எந்த ஒரு இந்திய நகரமும் இந்த அளவுக்கு வசதிகளைப் பெற்றிருக்கவில்லை. அளவிடற்கரியதான பெருந்தானியக் களஞ்சியங்கள் அங்கு இருந்தன. பெருமளவு வணிகம் நிலவியதற்கான சான்றுகள் கிட்டியுள்ளன. இவை இந்திய வரலாற்று ஆசிரியர் டி.டி. கோசாம்பி(D.D.Kosambi) தரும் தகவல்களாகும்(1).

மொகஞ்சதாரோ நகரம் குறித்து இராகுல சாங்கிருத்தியாயன், “நாம் தற்கால இலங்காசையர் போன்ற நகரத்தின் இடிபாடுகளிடையே நின்றிருப்பதைப்போல் தோன்றுகிறது என ஒரு ஆங்கிலேயர் எழுதுவதாகவும்….நகரம் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது. பாதைகள் 9 முதல் 34 அடி அகலத்துடன் அரைமைல் வரை நேராக உள்ளன…..பணக்காரர்களும், வியாபாரிகளும், கைவினைஞர் களும், தொழிலாளர்களும் இருந்து வந்த பகுதிகளை அவற்றின் இடிபாடுகளைக்கொண்டு தெரிந்துகொள்ளலாம். அதைக் காணும்போது, அது ஒரு சனநாயக முதலாளித்துவ நகரமாகத் தோன்றுகிறது” என்கிறார்(2).மேலும், “மொகஞ்சதாரோ, அரப்பா போன்ற எத்தனையோ நகரங்களை அழித்துவிட்டபின்னர், மாடு மேய்ப்போரான ஆரியர் வெற்றிகொண்ட சப்த சிந்து பிரதேசத்தை தமக்குள் பங்கிட்டுக்கொண்டு, அதை மேய்ச்சல் நிலமாக மாற்றிவிட்டனர். பல நகரங்கள் மனித சஞ்சாரமற்றுப் போய்விட்டன.

கிராமப்புறங்களைச் சேர்ந்த பெரும்பாலான மக்களும் ஓடிப்போய்விட்டனர். எஞ்சியிருந்தவர்களை வெற்றிபெற்றவர்கள் அடிமைகளாகவோ, கூலிக்காரர் களாகவோ ஆக்கிக்கொண்டனர் என்கிறார்” அவர்(3). சான்றாக, “பாலிகில்ய சூக்தங்களில்(8-8-3) புருசுத்ர என்ற முனிவர், எனக்கு நூறு கழுதைகளும், நூறு செம்மறியாடுகளும், நூறு அடிமைகளும் தாருங்கள் என்று இந்திரனை வேண்டுகிறார்” எனவும் கன்வ கோத்திரத்தைச் சேர்ந்த கன்வ புத்திரர் என்ற முனிவருக்கு புருகுத்சரின் புத்திரர் திரசதசுயு என்னும் மன்னர் 50 அடிமைப்பெண்களை வழங்கினார் எனவும் கூறியுள்ளார்(4).

ஆரியர்களின் அன்றைய சமூகப் பொருளாதாரச் சூழ்நிலையால் அனைவரையும் அடிமையாக்கி இருக்க முடியாது. ஒரு சிலரே அடிமையாக்கப்பட்டிருப்பர்.13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மங்கோலியர் படையெடுப்புக்கு முன்னால் மத்திய ஆசியப்பகுதியில் பல கிராமங்களும் நகரங்களும் செல்வச்செழிப்புடன் திகழ்ந்தன. மாடு மேய்ப்போரான வெற்றி பெற்ற மங்கோலியருக்கு அவற்றால் பெரிய பயன் இல்லை. அதனால் அவர்கள் வயல்களையெல்லாம் மேய்ச்சல் நிலங்களாக மாற்றிவிட்டனர்…..

“மக்கள் வசித்த பழைய கிராமங்களில் குட்டிச்சுவர்கள்தான் இருந்தன. கிராமங்களுக்கு வெளியே மங்கோலியரின் கூடாரங்கள் இருந்தன. வயல்களில் மங்கோலியரின் கால்நடைகள் மேய்ந்துகொண்டிருந்தன” என அன்று அங்கு பயணம் செய்த பயணிகள் குறிப்பிடுவதாக இராகுல சாங்கிருத்தியாயன் கூறுகிறார். மேலும் அவர், ஊர் சுற்றி ஆரியர்களும் தம் பகைவரிடம்(வடஇந்தியரிடம்) இதைவிட நன்றாக நடந்துகொண்டிருக்க மாட்டார்கள் என்கிறார்(5). அதன் மூலம் பண்டைய சிந்துவெளி மக்களின் கிராமங்களும், நகரங்களும் அழிக்கப்பட்டு, இந்தியா ஒரு இருண்ட காலத்தில் மூழ்கிப்போனது

.“பண்டைய சமற்கிருத வேதம்….. பகைவரைப்பற்றிக் கூறும்பொழுது, போர்க்களத்தில் மிகவும் இரக்கமற்ற முறையில் அடித்து நொறுக்கப்பட்டனரென்றும், அவர்களின் செல்வங்கள் சூறையாடப் பட்டனவென்றும், நகரங்கள் கொளுத்தப் பட்டனவென்றும் அந்நூல் விவரிக்கிறது” எனவும் “பழமைச்சிறப்புடைய ஒரு உயர்நிலை நகரப் பண்பாட்டின்மீது காட்டுமிராண்டித்தனம் கொண்ட வெற்றியால்….. வரலாற்றின் திசை பலத்த தாக்குதலுக்கு இரையாகித் தேக்கமும் சீர்குலைவும் அடைந்ததைக் காண்கிறோம்” எனவும், இந்த ஆயிரங்காலத்துப் பண்பாட்டை மீண்டும் எழாதபடி நிர்மூலமாக்கிய காட்டுமிராண்டிகள் எந்தத் தடயத்தையும் விட்டுச்செல்லவில்லை எனவும் கூறுகிறார் டி.டி. கோசாம்பி.

மேலும் சிந்து நாகரிக முடிவுக்கும் அதன்பின் தோன்றும் புதியதொன்றின் தொடக்கத்திற்கும் இடையே 600 ஆண்டுகால இடைவெளி இருந்தது எனவும், “இந்தியாவின் முக்கியமான பண்பாட்டு வளர்ச்சியின் ஆரம்பமும், கி.மு. இரண்டாவது, மூன்றாவது ஆயிரமாண்டுகளுக்குரிய இந்திய வரலாற்றைப் படைக்கக்கூடிய சாத்தியக் கூறுகளும் கடுமையான சேதத்திற்குள்ளாயின” எனவும் கூறுகிறார் டி.டி.கோசாம்பி(6). கி.மு. 1750இல் முடிவுற்ற சிந்துவெளி நாகரிகத்துக்குப்பின் 600 ஆண்டுகள் கழித்துத்தான் புதிய நாகரிகம் தோன்றுவதாகவும், இந்திய வரலாற்றைப் படைக்கக் கூடிய வாய்ப்பு கடுமையான சேதத்திற்குள்ளானதாகவும் அவர் கருதுகிறார்.

ஆனால் உண்மையில் 1000 ஆண்டுகாலம் கழித்துத்தான் புதிய நாகரிகம் தோன்றுகிறது.

பார்வை:1.பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி, NCBH, செப்டம்பர்-2006, தமிழாக்கம்: ஆர். எசு. நாராயணன், பக்: 98, 99.2. இரிக் வேதகால ஆரியர்கள், இராகுல சாங்கிருத்தியாயன், தமிழில் ஏ.ஜி. எத்திராசுலு, அலைகள் வெளியீட்டகம், டிசம்பர்-2004, பக்: 16,17.3. “ “ “ பக்: 21.4.. “ “ “ பக்: 37,38.5. .. “ “ “ பக்: 11.6.பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி(D.D.Kosambi), NCBH, செப்டம்பர்-2006, தமிழாக்கம்: ஆர். எசு. நாராயணன், பக்: 100-102.