Tue. Apr 30th, 2024

வரலாறு சிறப்பு கட்டுரை பிரபல எழுத்தாளர் பாலன் நாச்சிமுத்து

இந்நாகரிகம் பிற்காலத்தில் உருவான நாகரிகம். கி.பி. 1345இல் தான் இதன் முக்கிய நகரமான டெனொ சிட்டிலன்(Tenochtitlan) உருவானது. இந்த நகரத்தை தலைநகராகக்கொண்ட அசுடெக் அரசு கி.பி. 1430 வரை விரிவடைந்து வந்து மெக்சிகோவின் வடக்கு, மத்தியப் பகுதிகளில் 2,07,200 சதுர கி.மீ பரப்புள்ள ஒரு பேரரசாக வளர்ந்தது. டெக்சுகோகோ(Texcoco) என்ற ஏரியின் மேற்கு கரையில் அமைந்த டெனொ சிட்டிலன் நகரத்தில் 16ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் 1,40,000 பேர் வாழ்ந்தனர். ஐரோப்பியர் வருகைக்கு முந்தைய அமெரிக்காவின் மிகப்பெரும் நகராக இது இருந்தது.

இந்நகரம் மிகவும் செல்வவளம் மிக்கதாகவும் அனைத்து வசதிகளையும் கொண்டதாகவும் இருந்தது. இநகரத்தின் நீர் நிர்வாகம் அனைவரும் பாராட்டும் வகையில் இருந்தது. வானவியலில் இவர்கள் மிகவும் முன்னேறியவர்களாக இருந்தார்கள். ஒரு கோடிக்கும் மேலான மக்கள் இந்த அரசில் வாழ்ந்தார்கள். ஆனால் இப்பேரரசு கி.பி. 1521இல் இசுபானிசு அரசின்கீழ் கொண்டுவரப்பட்டது. இசுபானியர்களால் இவர்களது தலைநகரம் அடியோடு அழிக்கப்பட்டது. நாகுவாட்டி(Nahuatl) என்ற இவர்களது மொழிக்கு எழுத்து இருந்தது. ஆனால் பெரும்பாலான ஆவணங்கள் அழிந்துபோயின.

இன்கா நாகரிகம்(கி.பி.1400-1535):

முதலில் இன்கா மக்கள் குசுகோ(Cusco) என்ற நகர அரசை உருவாக்கி இருந்தார்கள். கி.பி. 1438 முதல் இவ்வரசு விரிவடையத்தொடங்கி 1525இல் ஒரு பேரரசாக ஆகியது. இதன் கீழ் பல்வேறு இன, மொழி, பண்பாடு கொண்ட ஒரு கோடி மக்கள் வாழ்ந்தார்கள். அவர்களை 40,000 இன்கா மக்கள் அடக்கி ஆண்டார்கள். இவர்களது கட்டடக்கலைக்கு மிகச்சிறந்த சான்று மச்சு பிச்சு( Machu Picchu) எனப்படும் சிகரநகரமாகும். மிகச்சிறந்த காலண்டரை இவர்கள் உருவாக்கி இருந்தார்கள். கணிதத்திலும், வானவியலிலும், மருத்துவத்திலும் சிறந்தவர்களாக விளங்கினார்கள். சடங்குகளில் இவர்கள் மனித உயிர்களை பலியிட்டார்கள்.

கி.பி. 1527இல் இன்கா அரசன் இறந்தபோது அவனுக்கு பணிபுரிந்த 4000 பேர் பலியிடப்பட்டார்கள். கி.பி. 1532இல் இவ்வரசில் காலடி வைத்த இசுபானிசு வீரர்கள் இவ்வரசை ஒரு சில வருடங்களில் முழுமையாகத் தங்களின் கீழ் கொண்டுவந்தனர். பல்வேறு இன,மொழி, பண்பாடு உடைய மக்களை இன்கா அரசு அடக்கி ஆண்டதால், நவீன இசுபானிய வீரர்கள் இவ்வரசை மிக எளிதாகக் கைப்பற்றினர். இதன் மொழி குச்சுவா(Quechua). இவர்கள் 3600 கி.மீ தூரமுள்ள வடக்கு தெற்காகப் போகும் இரு சாலைகளை தங்கள் பேரரசில் அமைத்திருந்தார்கள். அதில் ஆங்காங்கு குறுக்குச் சாலைகளை அமைத்து, பேரரசு முழுவதையும் இணைத்திருந்தார்கள்.

சான்றுகள்:

  1. The World Book Encyclopedia, USA, 1988, vol-10, page: 136-180.
  2. Ancient History of Encyclopedia – Maya civilisation Written By Joshua J. Mark Dt. 6.7.2012; Inca civilisation Written By Mark Cart Wright Dt.15.9.2014; Aztec civilisation Written By Mark Cart Wright Dt. 26.2.2014.
    3.Pre – Columbian civilizations – Featured topics, Aztec people, Maya people, Inca people -Britannica.com

பண்டைய உலக நாகரிகங்கள் – 19

இசுரேலிய -அமெரிக்க நாகரிகங்கள்

மாயா நாகரிகம்:

காலம் கி.மு.750-கி.பி.1530. வட அமெரிக்காவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் இடையே தென்கிழக்கு மெக்சிகோவில் இந்த நாகரிகம் உருவானது. செவ்வியல் காலகட்டத்தில் இதன் தலைநகராக டிகால்(Tikal) இருந்தது. கி.மு. 1000க்கு முன்பே மக்கள் இங்கு குடியேறி வாழ்ந்து வந்தனர். கி.மு. 750-500 வாக்கில் இங்கு நிறைய சிறு சிறு நகர அரசுகள் உருவாகியிருந்தன. கி.மு. 3ஆம் நூற்றாண்டு வாக்கில் அவர்கள் தங்கள் மொழிக்கான எழுத்தை உருவாக்கியிருந்தார்கள்.

கி.மு. 2ஆம் நூற்றாண்டு வாக்கில் எல்மிராடர்( El Mirador) என்ற நகரம் 16 சதுர கி.மீ பரப்பளவுக்கு இருந்துள்ளது. கி.மு. 350 வாக்கில் டிகால் (Tikal) என்ற நகரம் இதைவிட சிறியதாக இருந்துள்ளது. காமினல்சூயு (Kaminaljuyu), டகாலிக் அபாசு(Takalik Abaj), சோகோலா (Chocolá) கோமெச்சன் (Komchen) போன்ற பல நகரங்கள் அன்று இருந்துள்ளன. ஆனால் அவை அனைத்தும் கி.பி. முதல் நூற்றாண்டில் அழிந்து போயின. அதற்கான காரணம் தெரியவில்லை. கி.மு. 750 முதல் கி.பி. 250 வரையான காலகட்டம் செவ்வியல் காலத்திற்கு முந்தைய காலகட்டம் எனப்படும்.

செவ்வியல் காலகட்டம்:

கி.பி. 250 முதல் கி.பி. 900 வரையான காலகட்டம் செவ்வியல் காலகட்டம் எனப்படுகிறது. கி.பி. 100க்குப்பின் கி.பி. 250க்குள் மீண்டும் நிறைய நகரங்கள் உருவாகின. இந்தக்காலகட்டத்தை, கிரேக்க நகர அரசுகள் அல்லது மறுமலர்ச்சிக்கால இத்தாலி நகரங்களோடு ஒப்பிடலாம். இந்த மாயா நகரங்களின் மக்கள்தொகை 5000 முதல் 50,000 வரை இருந்தன. இவை தங்களுக்குள் போரிட்டுக்கொண்டும், கூட்டணிகளை உருவாக்கிக் கொண்டும் இருந்தன.

இவற்றுக்குள் நடந்த போட்டியில் டிகால் (Tikal) நகரமும் அதற்கு எதிரான சாலக்முல்(Calakmul) நகரமும் உருவாகி அவை ஒன்றுக்கொன்று எதிரான கூட்டணிகளை உருவாக்கிக் கொண்டும் போரிட்டும் வாழ்ந்து வந்தன. ஆனால் கி.பி. 900 வாக்கில் இவை அழிந்து போயின. இதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் இந்த நகர அரசுகள்தான் மாயா நாகரிகத்தின் வளர்ச்சிக்கும் பிரமாண்டமான பிரமிடுகளுக்கும், கலைநயமிக்க கட்டடங்களுக்கும் இன்ன பல கண்டு பிடிப்புகளுக்கும் காரணம் எனலாம்.

பிந்தைய காலகட்டம்: கி.பி. 950 முதல் மீண்டும் நகரங்கள் உருவாகி கி.பி. 1530 வரை அவை இருந்தன. சுமார் 2000 வருடங்களாக தொடர்ந்து இருந்த காமினல்சூயு (Kaminaljuyu) என்ற நகரம் இக்காலத்தில் கைவிடப்பட்டது. 12ஆம் நூற்றாண்டுவரை இக்காலத்தில் மாயபன்(Mayapan) என்ற நகரம் உருவாகும் வரை வலிமைவாய்ந்த நகரம் எதுவும் இருக்கவில்லை. ஆனால் இந்நகரமும் கி.பி. 1448இல் அழிந்து போனது.

இசுபானிசு(SPANISH) மக்கள் 1511ஆம் ஆண்டு இங்கு வருவதற்கு முன்பே பல நகரங்கள் பல்வேறு காரணங்களால் இல்லாது போயின. டெனொ சிட்டிலன்(Tenochtitlan) என்ற அசுடெக் அரசின் தலைநகர் கி.பி. 1521 இல் இசுபானிசு அரசால் கைப்பற்றப்பட்டது. அதன்பின் தென் அமேரிக்கப் பகுதிகள் இசுபானிசு அரசின் கீழ் வந்தன. ஒப்பீட்டு அளவில் நவீன ஆயுதங்களையும், வரைமுறையற்ற போர்முறைகளையும் கொண்ட இசுபானிய வீரர்கள் மிகப்பெரிய அமெரிக்க அரசுகளை வீழ்த்தினர்.

கணிதம், வானவியல் ஆகியவற்றில் மாயா மக்கள் மிகச்சிறந்தவர்களாக இருந்தார்கள். கி.மு. 3113இல் இவர்களுடைய காலண்டர் தொடங்குகிறது. அதில் வருடத்துக்கு 18 மாதங்களும் ஒவ்வொரு மாதத்துக்கும் 20 நாட்களும் உள்ளன. இந்த 360 நாட்கள் போக மீதியுள்ள 5 நாட்கள் துரதிருஷ்மான நாட்களாகக் கருதப்பட்டு மொத்தம் வருடத்திற்கு 365 நாட்கள் கணக்கிடப்பட்டுள்ளன.

அவர்களால் திங்கள்(Moon) புதன்(Venus) ஆகிய கோள்களின் இருப்பிடங்களும், ஞாயிற்றுக் கிரகணமும்(Solar Eclipses) ஓரளவு மிகத் துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளது. மாயாமக்களின் வாரிசுகள் பலர் பழங்குடிகளாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளனர். அதில் சோழன்(Cholan people) மக்கள் என்ற பெயரில் அவர்களின் ஒரு கிளைக் குழு மக்கள் இன்றும் வடக்கு சியாபாசு(Chiapas) பகுதியில் வசித்து வருகின்றனர்.

சான்றுகள்:

  1. The World Book Encyclopedia, USA, 1988, vol-10, page: 136-180.
  2. Ancient History of Encyclopedia – Maya civilisation Written By Joshua J. Mark Dt. 6.7.2012; Inca civilisation Written By Mark Cart Wright Dt.15.9.2014; Aztec civilisation Written By Mark Cart Wright Dt. 26.2.2014.
    3.Pre – Columbian civilizations – Featured topics, Aztec people, Maya people, Inca people -Britannica.com