Fri. Nov 22nd, 2024

தலைப்பில் இடம் பெற்றுள்ள மூன்று பிரபலங்களுக்குமே, சேலத்தில் தனித்த பெருமைகள் உண்டு 2012 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதிக்கு முன்பு வரை சேலம் மாவட்டம் என்று சொல்வதையே அவமானதாக கருதி, வீரபாண்டியார் மாவட்டம் என்று அழைப்பதழில் பெருமை கொண்ட திமுக.வினர்தான் அந்த மாவட்டத்தில் பெரும்பான்மையானோராக இருந்தார்.

இதைவிட சிறப்பாக அவரது பெயருக்கு புகழ் மகுடம் சூட்ட வேண்டும் என்று சொன்னால், வீரபாண்டி ஆறுமுகம் இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக ஒரு நிமிடம் கூட நீடிக்க விட்டிருக்க மாவட்டார் என்று சொல்கிற அளவுக்கு வெறிப்பிடித்த வீரபாண்டி ஆறுமுகத்தின் அதிதீவிர விசுவாசிகள் இன்றைக்கும் சேலம் மாவட்டத்தில் உண்டு. மூத்த ஊடகவியலாளர்கள் சிலருக்கும் அப்படிபட்ட எண்ணம் உண்டு..

இப்படி 1958 ல் இருந்து 2012 வரை 60 ஆண்டுகள் சேலத்தின் சிங்கமாக இருந்த திமுக முன்னாள் அமைச்சர் மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் வாரிசுகள் அத்தனை பேருமே, இன்றைக்கும் தங்களின் தந்தைக்கு கிடைத்த அதே அரசியல் செல்வாக்கு தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று வெறித்தனமாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

வீரபாண்டி ஆறுமுகத்திற்கு இரண்டு மூன்று வாரிசுகள். மூத்தவர் ஆ. நெடுஞ்செழியன். இளையவர் ஆ. ராஜா. மூத்தவர், தந்தையை விட 16 அடிக்கு மேல் பாய்ந்தவர். அரசியலில் தந்தைக்கு தப்பாத மகன் என்று பெயரெடுத்த அவரை சேலம் மாவட்ட திமுக கொண்டாடிய காலத்திலேயே அற்ப வயதில் (2011) காலமானார். 20 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இந்த சோகத்தால் நொந்து போன வீரபாண்டி ஆறுமுகம், தனது அரசியல் வாரிசாக அவரது இளைய புதல்வரான ஆ.ராஜாவை களமிறக்கினார். அதில் ஒன்றும் தப்பில்லை.

ஆனால், 50 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்வில் தனக்கு கிடைத்து வந்த எல்லா புகழையும் ஒற்றை மனிதராக ஒருவரே குழிதோண்டி புதைப்பார், அவரால் தனது அரசியல் வாழ்வே அஸ்தமனமாகப் போகிறது என்று ஊகித்திருந்தாரோ, இல்லையோ தெரியாது, தனது தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார் என்பவரையும் அரசியலுக்கு அழைத்து வந்தார். சுரேஷின் ஆட்டம் அதிகரிக்க, அதிகரிக்க, வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆயுள் குறுகிய காலத்திற்குள்ளாகவே முடிவுக்கு வந்துவிட்டது.

தனது எதிரிகளிடம் இருந்து தப்பித்து, உயிர் பிழைத்திருந்த வீரபாண்டி ஆறுமுகம், தம்பி மகனின் சட்டவிரோத லீலைகளால் சமாதியானார். அந்த துயரமே அந்த குடும்பத்தை அவர் மறைந்து எட்டு ஆண்டுகள் கடந்த பிறகும் நீங்காத போது, அவரது குலக் கொழுந்தான அவரது பேரனையும் துடிக்க வைக்கப் போகிறது என்பதுதான், வீரபாண்டியாரின் விசுவாசிகளின் இன்றைய கதறல்.

வீரபாண்டியாரின் பெயரிலேயே உள்ள தொகுதி, வீரபாண்டி. அந்த தொகுதியை குறி வைத்து தி.மு.க.வில் முட்டிக் கொண்டவர்கள் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம். அவரது இளைய மகனும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆ.ராஜா, பெண் வாரிசில் மூத்தவரான மகேஸ்வரி காசி, தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ், வீரபாண்டியாரின் உறவினரும், அவரது வாகன சாரதியுமான சேகரின் மனைவி வெண்ணிலா என செல்வாக்கு மிக்கவர்கள் மோதினார்கள்.

இதேபோல, வீரபாண்டியாரின் இரண்டாவது மனைவி லீலாவதியின் புதல்வர் மருத்துவர் பிரபும் மோதினார். இவர்களோடு வீரபாண்டியாரின் இரண்டாம் தலைமுறை வாரிசாக, அவரின் மூத்த புதல்வரான மறைந்த ஆ.செழியன் என்கிற நெடுஞ்செழியன் பிருந்தா தம்பதியரின் புதல்வி டாக்டர் சூர்யாவை , மணமுடித்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி காசி விஸ்வநாதனின் புதல்வரான மருத்துவர் தருணும் மோதினார்.

வீரபாண்டியாரின் ஒட்டுமொத்த குடும்பத்தில், மருத்துவர் தருணை தேர்ந்தெடுத்து, இப்போது வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளராக அறிவித்துள்ளார், அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.

தருணினின் (எம்.பி.பி.எஸ்., எம்.எஸ். (ஆர்த்தோ) எம்.பி.ஏ., )பெயருக்குப் பின்னால் உள்ள பட்டங்களே, அவரின் திறமையை பறை சாற்றும். இப்படிபட்டவர்தான்,வேட்பாளராக பெயர் அறிக்கப்பட்ட பிறகு படுகிற பாட்டை கண்டு, அவரது மருத்துவ நண்பர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

வீரபாண்டியாரின் நேரடி வாரிசுகளான தங்களுக்கு தொகுதியை ஒதுக்காமல, தருணுக்கு சீட் ஒதுக்கிவிட்டாரே தளபதி என்ற கோபம், ஆ.ராஜா, மகேஸ்வரி, ஆ.பிரபு ஆகியோருக்கு இருந்தாலும், அரைகுறை மனதாக மருத்துவர் தருணை வரவேற்று, வாழ்த்தி வெளிப்படையாக தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டதாக கூறுகிறார்கள், சேலம் திமுக நிர்வாகிகள்.

ஆனால், ஏற்கெனவே வீரபாண்டியாரின் அரசியல் வாழ்ககையையே அஸ்தமனமாக்கிய பாரப்பட்டி சுரேஷ், வீரபாண்டியாரின் குலக் கொழுந்தான மருத்துவர் தருண், தேர்தலில் வெற்றிப் பெற்று எம்.எல்.ஏ., ஆகி விடக்கூடாது என்ற சதித்திட்டத்தோடு களத்தில் குதித்துள்ளதாக பொங்குகிறார்கள் வீரபாண்டியார் குடும்பத்திற்கு நெருக்கமான உறவினர்கள்.

அரசியலுக்கும், தேர்தலுக்கும் புதியவரான மருத்துவர் தருண், தனது தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய புறப்பட்டார். அவரோடு கூட்டணி கட்சி நிர்வாகிகளும் வர தயாரானார்கள்.ஆனால், பாரப்பட்டி சுரேஷின் அதிரடியை பார்த்து, அவர்கள் எல்லாம் பம்மிவிட்டார்கள். தொகுதி பொறுப்பாளர் என்ற முறையில், திமுக எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன், வேட்பு மனு தாக்கலுக்கு சென்றிருந்தார்.

தலைமை அறிவித்துள்ள பொறுப்பாளர் என்ற முறையில் அவரைதான் வேட்புமனு தாக்கலின் போது உடனிருக்க அனுமதிக்க இருக்க வேண்டும். ஆனால், பார்த்திபனை பார்த்த மாத்திரத்திலேயே ஒருமையில் அவரை பேசி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் கூடியிருந்த நிலையில், இவன் எல்லாம் ஒரு ஆளா? என்று ஏக வசனத்தில் பாரப்பட்டி சுரேஷ் பேச, அவமானத்தால் கூனி குறுகிப் போன திமுக எம்.பி. பார்த்திபன் ஓரமாக பம்மி நின்று கொண்டார். மேலும், சிறுபிள்ளைத்தனமாக தருணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கோபித்துக் கொண்டு தனியே நடந்து போவது என ஆயிரமாயிரம் தொண்டர்கள் கூடியிருந்த இடத்தில் சுரேஷ் நடந்துகொண்டது, திமுக நிர்வாகிகளையே முகம் சுழிக்க வைத்துவிட்டது.

மருத்துவர் தருண் ஒற்றை ஆளாக தொகுதி முழுவதும் சுற்றி வந்தால் கூட, அவரின் மருத்துவச் சேவையை நினைவுக்கூர்ந்தும், அவரது குடும்ப பாரம்பரியத்தைப் பார்த்தும், அவரது அமைதியான குணத்தை பார்த்தும் உதயசூரியனுக்கு ஓட்டுப் போட்டுவிடுவார்கள் வீரபாண்டி தொகுதி மக்கள். ஆனால், பாரப்பட்டி சுரேஷை கூடவே கூட்டிச் சென்றால், உதயசூரியனுக்கு விழுகிற ஓட்டுகள் கூட, மருத்துவர் தருணுக்கு விழாது.

பாவம், ஆசை, ஆசையாக மக்கள் சேவை செய்ய, தேர்தல் களத்திற்கு வந்துள்ள மருத்துவர் தருணை, வீரபாண்டியாரின் குடும்பமும், அவரது உறவுகளுமே சேர்த்து, பாழும் கிணற்றில் தள்ளிவிடுவார்கள் போல…இது திமுக.வுக்கு செய்யும் துரோகம் இல்லை. இவர்களுக்கு எல்லாம் அரசியல் அடையாளம் கொடுத்த வீரபாண்டி ஆறுமுகத்திற்கு செய்யும் துரோகம். அவரின் ஆவி கூட இவர்களை எல்லாம் மன்னிக்காது என்று சாபம் கொடுக்காதகுறையாக புலம்புகிறார்கள் வீரபாண்டி தொகுதி திமுக கூட்டணி கட்சி பிரபலங்கள்..

மருத்துவர் தருணை நினைத்தால் பாவமாகதான் இருக்கிறது….