கும்மிடிப்பூண்டியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை ஆற்றினார் அப்போது அவர் பேசியதாவது:
நான் உங்களை எல்லாம் தேடி – நாடி வந்திருக்கிறேன். தேர்தலுக்காக மட்டும் வந்து போகிறவன் இந்த ஸ்டாலின் அல்ல; எப்போதும் எந்த நேரத்திலும் உங்களோடு இருப்பவன், உங்களுடைய சுக துக்க நிகழ்ச்சிகளில் உரிமையோடு கலந்து கொள்பவன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
அந்த உரிமையோடு, உணர்வோடு உங்களிடத்தில் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன். வரும் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில், கும்மிடிப்பூண்டி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நம்முடைய கழக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜனுக்கு உதயசூரியன் சின்னத்திலும், பொன்னேரி தொகுதியில் நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் துரை. சந்திரசேகருக்கு கை சின்னத்திலும் ஆதரவு தரவேண்டும், வெற்றியை தேடித் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ள வந்திருக்கிறேன்.
50 ஆண்டுகால அரசியல் பாரம்பரியத்தை – வரலாற்றைப் பெற்றிருப்பவன் தான் இந்த ஸ்டாலின் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். பள்ளி மாணவனாக இருந்த போதே, திருவாரூர் நகர வீதிகளில், “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள் – நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே” என்று போர்க்குரல் பாடியவர் கலைஞர். அவருடைய மகன் ஸ்டாலின். திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு தொண்டனாக 14 வயதில் கோபாலபுரத்தில் என்னை இணைத்துக் கொண்டேன்.
அங்கே இருக்கும் மாணவர்களை ஒன்று திரட்டி ஒரு முடித் திருத்தும் நிலையத்தில் இளைஞரணி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அந்த வட்டத்தில் பகுதி பிரதிநிதியாக, சென்னை மாவட்ட பிரதிநிதியாக, கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராக, செயற்குழு உறுப்பினராக, இளைஞரணி செயலாளராக, துணைப் பொதுச் செயலாளராக, கழகப் பொருளாளராக, தலைவர் கலைஞர் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது இந்த இயக்கத்தின் செயல் தலைவராக, இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவனாக பொறுப்பேற்று பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.
அதேபோல, மக்களுக்கு பணியாற்றுவதில் சட்டமன்ற உறுப்பினராக – சென்னை மாநகரத்தின் மேயராக – உள்ளாட்சித்துறை அமைச்சராக – துணை முதலமைச்சராக – இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து, முதலமைச்சர் வேட்பாளராக உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன்.
5 முறை தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து தமிழக மக்களுக்காக எத்தனையோ அற்புதமான திட்டங்களை தலைவர் கலைஞர் நிறைவேற்றி தந்திருக்கிறார்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகள், மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரை சூட்டி, அவர்களுக்கு ஒரு நலவாரியம் ஏற்படுத்திக் கொடுத்தார், திருநங்கைகளுக்கு நல வாரியம் உருவாக்கி தந்தார், கிராமங்களில் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்பதற்காக ‘அண்ணா மறுமலர்ச்சி திட்டம்’, ‘நமக்கு நாமே’ திட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.
எல்லா மதத்தை சார்ந்தவர்களும், ஜாதி மதங்களை கடந்து, அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமை உணர்வோடு ஒருமித்த கருத்தோடு மக்கள் வாழவேண்டும் என்பதற்காக ‘சமத்துவபுரம்’ திட்டத்தை தந்தை பெரியார் பெயரில் ஏற்படுத்திக் கொடுத்தார்.
குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கினார், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை ஏற்படுத்தி கொடுத்தார், கர்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித இடஒதுக்கீடு, வேலைவாய்ப்புகளில் 30 சதவிகித இடஒதுக்கீடு, பெண்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும் – யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் தன்னம்பிக்கை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக மகளிர் சுய உதவிக் குழு என்ற ஒரு அற்புதமான திட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.
ஏழை எளிய பெண்களின் திருமண செலவிற்காக உதவித்தொகை இந்தியாவிலேயே முதன் முதலில் தமிழ்நாட்டில் தான் – கலைஞர் ஆட்சிக்காலத்தில் தான் உருவாக்கப்பட்டது, மினி பஸ், உழவர் சந்தை, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு உதவிகள் – சலுகைகள், பிற்படுத்தப்பட்டோர் – பட்டியலினத்தவர் அத்தனை பேருக்கும் இட ஒதுக்கீடு எண்ணிக்கை உயர்த்தப்பட்டது,
பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு, சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஒரு புரட்சிகர திட்டத்தையும் ஏற்படுத்திக்கொடுத்தார். இவ்வாறு பல்வேறு திட்டங்களை நாம் தொடர்ந்து அடுக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் நேரமில்லை. ஒரு தாய் தன்னுடைய பிள்ளையை கவனிப்பது போல தலைவர் கலைஞர் அனைத்துத் தரப்பு மக்களையும் கவனித்து அவர்களுடைய வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
கலைஞருடைய ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டவற்றை நான் பட்டியல் போட்டு சொல்லியிருக்கிறேன். இதேபோல இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் பழனிசாமி தான் செய்தவற்றைப் பட்டியல் போட்டு சொல்வதற்கு தயாராக இருக்கிறாரா?
ஆளுங்கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அதாவது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பியடித்து வெளியிட்டிருக்கிறார்கள்.
செய்ய முடியாத காரியங்களை – வாய்க்கு வந்த படியெல்லாம் – பொத்தாம் பொதுவாக பல உறுதி மொழிகளை சொல்லி இருக்கிறார். அதில் எது நடக்கும் எது நடக்காது என்று மக்களுக்கு தெரியும்.
இப்போது இந்த சட்டமன்றத் தேர்தலுக்காக வாக்குறுதிகளை சொல்லி இருக்கிறீர்களே… நீங்கள் ஏற்கனவே 2011-ஆம் ஆண்டு – 2016-ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்தபோது சொல்லியிருக்கும் உறுதிமொழிகள் என்ன நிலையில் இப்போது இருக்கின்றன என்பதை பழனிசாமி சொல்வதற்குத் தயாராக இருக்கிறாரா?
உதாரணமாக, அனைவருக்கும் செல்போன் இலவசமாக கொடுப்போம் என்று சொன்னார்கள். அதை இப்போதும் சொல்லி இருக்கிறார்கள். இங்கு இருக்கும் யாருக்காவது அ.தி.மு.க. ஆட்சியில் இலவசமாக செல்போன் கொடுத்து இருக்கிறார்களா?
அதேபோல, கேபிள் கட்டணத்தை 70 ரூபாய்க்கு குறைப்போம் என்று ஒரு உறுதிமொழி கொடுத்தார்கள். குறைத்திருக்கிறார்களா?
பொது இடங்களில் வை-ஃபை வசதி செய்து கொடுப்போம் என்று சொன்னார்கள். கொடுத்திருக்கிறார்களா?
10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று சொன்னார்கள். எவ்வளவு லட்சம் வீடுகள் கட்டப்பட்டிருக்கிறது?
திருச்சி, மதுரை, கோவையில் மோனோ ரயில் விடப்போகிறோம் என்று சொன்னார்கள். அது வெறும் பேப்பரில் தான் இருக்கிறது.
விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் போடப்படாது என்று சொன்னார்கள். அது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா?
ஆவின் பால் லிட்டர் 25 ரூபாய்க்கு தருவோம் என்று சொன்னார்கள். இப்போது 60 ரூபாய்.
அதேபோல கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், நீட் தேர்வை நாங்கள் உள்ளே விட மாட்டோம் என்று சொன்னார்கள். இதுவரையில் அது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறதா? இதுவரையில் சகோதரி அனிதா தொடங்கி பல பேர் அந்த நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள்.
இந்த நீட்டுக்காக சட்டமன்றத்தில் நாங்கள் தீர்மானமே போட்டோம். இதுவரையில் அது என்ன நிலையில் இருக்கிறது? என்று மத்திய அரசிடம் – மாநில அரசு கேட்கத் தயாராக இல்லை. அவர்கள் கைகட்டி – வாய் பொத்தி ஓர் அடிமை ஆட்சியைத் தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நம்முடைய தேர்தல் அறிக்கையில், பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோம். நாம் எப்போதும் தேர்தல் அறிக்கை வெளியிடும் போது தலைவர் கலைஞர், “சொன்னதைச் செய்வோம், செய்வதைத் தான் சொல்வோம்” என்று சொல்வார். அவருடைய வழியில் வந்திருக்கும் இந்த ஸ்டாலினும், “சொன்னதைச் செய்வான், செய்வதைத் தான் சொல்வான்“.
தேர்தல் அறிக்கையில், பெண்களுடைய முன்னேற்றத்திற்காக பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறோம். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும். மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசப் பயணம். அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 40 சதவிகித இட ஒதுக்கீடு. சிறப்பு தாய் – சேய் நலத்திட்டம் என்ற பெயரால் கருவுற்ற பெண்களுக்கு வீடுதேடி மருத்துவ வசதி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கியிருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
விஷம் போல ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக, பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 5 குறைக்கப்படும். டீசல் லிட்டருக்கு ரூபாய் 4 குறைக்கப்படும். சிலிண்டர் ஒன்றுக்கு ரூபாய் 100 குறைக்கப்படும். பால் விலை லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்படும். விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக, நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 2,500 – கரும்பு டன்னுக்கு ரூபாய் 4,000 வழங்கப்படும்.
வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் உருவாக்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருக்கும் விவசாயக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறோம்.
நீங்கள் மறந்து விடக்கூடாது. இப்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அ.தி.மு.க. இந்த உறுதிமொழியை சொல்லி இருக்கிறார்கள். இந்த அறிவிப்பை பொன்னேரியில் – பொங்கலுக்கு முதல் நாள் – மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பேசிய போது, “ஏற்கனவே கலைஞர் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது 7,000 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தார். அதேபோல, தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியிருக்கும் கடனை தள்ளுபடி செய்வோம்” என்று நான் அறிவித்தேன்.
நான் எப்போதும் என்ன சொல்வேன் என்று பார்த்துக்கொண்டே இருப்பார் பழனிசாமி. எனவே அடுத்த நாள், விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்கிறோம் என்று அவர் அறிவித்தார்.
நான்கு ஆண்டுகளாக நீங்கள் தான் முதலமைச்சராக ஆட்சியில் இருக்கிறீர்கள். நான்கு ஆண்டுகளாக விவசாயப் பெருங்குடி மக்கள் இதை கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அதைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கவில்லை.
அது மட்டுமல்ல சென்னை நீதிமன்றத்திற்கு சென்று வழக்குப் போட்டார்கள். அதை விசாரித்த நீதிமன்றம், “அரசு உடனடியாக அந்தக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று உத்தரவு போட்டது. அப்போது, ‘அதை ரத்து செய்ய முடியாது’ என்று சொல்லி உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று தடை வாங்கிய ஆட்சிதான் பழனிசாமி தலைமையில் இருக்கும் அ.தி.மு.க. ஆட்சி.
எனவே மக்களை ஏமாற்றுவதற்காக இதனைச் சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்ல, 14,000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்வோம் என்று சொன்னார்கள். ஆனால் வெறும் 5,000 கோடிதான் செய்திருக்கிறார்கள். மீதமிருக்கும் அந்தக் கடனை நாம் ஆட்சிக்கு வந்துதான் தள்ளுபடி செய்யப் போகிறோம்.
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு இருக்கும் நகைக் கடனைத் தள்ளுபடி செய்வோம் என்று நான் சொன்னேன். இதைக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்திலும் சொன்னேன். அதை மிட்டாய் கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டதாக முதலமைச்சர் பழனிசாமி அப்போது விமர்சித்தார். இப்போது அறிவித்திருக்கிறீர்களே, நீங்கள் அல்வா கொடுத்து ஏமாற்றப் போகிறீர்களா?
மாணவர்கள் – இளைஞர்கள் நலனை பேணிக் காப்பதற்காக, அவர்களுடைய கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும், வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு மையங்களாக செயல்படும். அரசுத்துறைகள் – கல்வி நிலையங்களில் காலியாக இருக்கும் 3.5 லட்சம் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலை வாய்ப்புகளைத் தமிழர்களுக்கு வழங்க சட்டம் கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதிகளையும் அளித்துள்ளோம்.
கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் கொடுங்கள் என்று சொன்னோம். நிதி இல்லை என்று வெறும் 1,000 ரூபாய் மட்டும் கொடுத்தார்கள். மீதம் 4,000 ரூபாய் நாம் ஆட்சிக்கு வந்த அடுத்த நாள் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிச்சயமாக வழங்கப்படும் என்ற அந்த உறுதியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மேம்படுத்தும் வரையில் சொத்துவரி அதிகரிக்கப்படாது. மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.
மீஞ்சூர் – பொன்னேரியில் புறவழிச் சாலை அமைக்கப்படும். கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். கும்மிடிப்பூண்டியில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும். மெட்ரோ ரயில் சேவை திருவொற்றியூரில் இருந்து மீஞ்சூர் வழியாக கும்மிடிப்பூண்டி வரையிலும் நீட்டிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
கும்மிடிப்பூண்டிக்கு கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும். எல்லாபுரம் ஒன்றியம் ஏனம்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்படும். பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் அருகில் சுற்றுலாத் தலம் அமைக்கப்படும். கும்மிடிப்பூண்டியில் குளிர்பதனக் கிடங்கு உருவாக்கப்படும். பொன்னேரி அரசு மருத்துவமனை நவீன வசதிகள் கொண்ட சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தி வழங்கப்படும் என்ற உறுதி மொழிகளைச் சொல்லி இருக்கிறோம்.
நான் உறுதியோடு சொல்கிறேன். எவ்வாறு கலைஞர் அவர்கள் சொன்னதைச் செய்தாரோ அதே போல, அவருடைய மகனும் சொன்னதைத் தான் செய்வான் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நாம் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறப் போகிறோம் என்று சொன்னேன். இப்போது 5 நாட்களாக நான் தமிழகம் முழுவதும் சுற்றி வந்து கொண்டிருக்கும் இந்த பயணத்தில் நான் உணர்ந்ததை வைத்துச் சொல்கிறேன், 200 அல்ல 234 இடங்களிலும் நாம் தான் வெற்றி பெறப் போகிறோம்.
ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுவிடக் கூடாது. அ.தி.மு.க. வெற்றி பெற்றால் அது பா.ஜ.க.வின் வெற்றி தான். இன்றைக்கு அ.தி.மு.க. – பா.ஜ.க.வின் அடிமையாக இருக்கிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நடந்த போது, ஒரே ஒரு எம்.பி. அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றார். அவர் இப்போது பா.ஜ.க. எம்.பி.யாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதுதான் உண்மையான நிலை. அந்த அளவிற்கு அடிமையாக இருக்கிறார்கள். எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. இன்றைக்கு விலைவாசி என்ன நிலையில் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.
உளுத்தம் பருப்பு தி.மு.க. ஆட்சியில் ஒரு கிலோ 60 ரூபாய் – இப்போது 120, துவரம் பருப்பு தி.மு.க. ஆட்சியில் ஒரு கிலோ 38 ரூபாய் – இப்போது 120, கடலை பருப்பு தி.மு.க. ஆட்சியில் ஒரு கிலோ 34 – இப்போது 150, பாமாயில் ஒரு லிட்டர் தி.மு.க. ஆட்சியில் 48 – இப்போது 126, சர்க்கரை ஒரு கிலோ தி.மு.க. ஆட்சியில் 18 – இப்போது 40, சிலிண்டர் ஒன்று தி.மு.க. ஆட்சியில் 400 – இப்போது 900, பால் ஒரு லிட்டர் தி.மு.க. ஆட்சியில் 35 – இப்போது 60. இப்படி விஷம் போல ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியை கட்டுப்படுத்த முடியாத ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
தலைவர் கலைஞர் அவர்களின் இறுதி விருப்பம் பேரறிஞர் அண்ணாவின் அருகே ஓய்வெடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த ஆட்சியாளர்கள் அதைச் செய்ய விடவில்லை. இதே பழனிசாமி வீட்டிற்கு நான் சென்றேன். கலைஞர் சாதாரண தலைவர் அல்ல, 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்திருக்கிறார். இந்திய நாட்டிற்கு பல ஜனாதிபதிகளை அடையாளம் காட்டியிருக்கிறார். பல பிரதமர்களை உருவாக்கி இருக்கிறார்.
அப்படிப்பட்ட தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஆறடி இடம் கொடுக்க மறுத்த நயவஞ்சகர்கள் அவர்கள். அதற்குப் பிறகு நாம் நீதிமன்றம் சென்று வெற்றி பெற்று பேரறிஞர் அண்ணாவிற்கு பக்கத்தில் அவரை அடக்கம் செய்தோம்.
எனவே உங்களையெல்லாம் நான் அன்போடு உரிமையோடு கேட்க விரும்புவது, நம்முடைய தலைவர் கலைஞருக்கு அவர்களுக்கு இடம் கொடுக்காத இந்த பழனிசாமிக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்கலாமா? நன்றாகச் சிந்தியுங்கள்.
அவ்வாறு சிந்திக்கும் சிந்தனையுடன் நம்முடைய கும்மிடிப்பூண்டி வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், பொன்னேரியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் துரை சந்திரசேகர் அவர்களுக்கு கை சின்னத்திலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வாக்களித்து வெற்றியைத் தேடித் தாருங்கள். அந்த வெற்றியைத் தேடித் தந்த பிறகு வெற்றிவிழா கூட்டத்திற்கு உங்களை எல்லாம் சந்திக்க வருகிறேன்
இவ்வாறு மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.