மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே. சசிகலா , மாசி அமாவாசை நாளான இன்று காலை தியாகராயநகரில் உள்ள அகஸ்தியர் கோயிலில் மனமுருக வழிபாடு நடத்தியுள்ளார்.
பெங்களூர் சிறையில் இருந்து சென்னை திரும்பிய அவர், கடந்த மாதம் 8 ஆம் தேதியில் இருந்து தியாகராயநகரில் உள்ள இளவரசி ஜெயராமனின் புதல்வி கிருஷ்ணபிரியாவுக்கு சொந்தமான பங்களாவில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். கடந்த மாதத்தின் இறுதி வாரத்தில், இயக்குனர் பாரதிராஜா, நடிகர் சரத்குமார், நாம் தமிழர் சீமான் உள்ளிட்ட ஒன்றிரண்டு முக்கிய அரசியல் பிரமுகர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதன்பிறகு, கடந்த 5 நாள்களுக்கு முன்பாக அரசியலில் இருந்து விலகியிருப்பதாக அறிக்கை வெளியிட்டதையடுத்து, அவரைப் பற்றிய பரபரப்பு செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இன்று காலை அதே பகுதியில் உள்ள அகஸ்தியர் கோவிலுக்குச் சென்ற வி.கே.சசிகலா, மனமுருக பிரார்த்தனையில் ஈடுபட்டார். கோயிலில் உள்ள ஒவ்வொரு சந்நிதிக்கும் சென்று தரிசனம் செய்ததுடன், அங்கு அமர்ந்து சில நிமிடங்கள் தியானத்திலும் ஈடுபட்டார்.
சசிகலா தரிசனம் பற்றி கூறிய கோயில் அர்ச்சகர்கள், இதேபோல கடந்த 5 ஆண்டுக்கு முன்பு , அதாவது 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி, இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்தியதாகவும், இன்றைய தினம் போல அன்றைக்கும் அமாவாசை திதிதான் என்றும் நினைவுக் கூர்ந்தார்.
அன்றைய தேதியில் என்ன சிறப்பு என்று கேட்டபோது, அதற்கு சில நாள்களுக்கு முன்புதான் அப்போதைய அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா, மாநிலங்களவையில் தன்னை போயஸ் கார்டனுக்கு அழைத்து செல்வி ஜெயலலிதா அடித்து உதைத்தாக கண்ணீர் மல்க கூறி, தன் பக்கம் அனுதாபத்தை தேடிக் கொண்டார்.
முதல்முறையாக, போயஸ் கார்டனில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுமா என்ற அதிர்ச்சியுடன் பார்த்த காலம் அது. அப்போது, அந்த பிரச்னையாலும், அதன் பிறகும் ஏற்படும் சச்சரவுகளில் இருந்து விலகுவதற்கும், செல்வி ஜெயலலிதாவின் புகழுக்கு எந்த களங்கமும் ஏற்படக் கூடாது என்பதற்காகவும், அன்றைய தேதியில் இந்த ஆலயத்திற்கு வந்து வி.கே. சசிகலா வழிபாடும், பிரார்த்தனையிலும் ஈடுபட்டதாகவும் நினைவுக் கூர்ந்தார் ஆலய நிர்வாகி.
5 ஆண்டுகளுக்கு முன்பு இதே கோயிலில் சசிகலா வழிபாடு நடத்தியபோது எடுத்தபடம் மேலே உள்ளது.