தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பிஆர் பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது..
கர்நாடக அரசாங்கம் தமிழக நோக்கி வரக்கூடிய உபரி நீரை தடுத்து தமிழகத்தை அழிக்கும் உள்நோக்கத்தோடு மேகதாது அணை கட்டுமான பணியை துவங்க உள்ளோம் அதற்காக 9 ஆயிரம் கோடி ரூபாயை கர்நாடக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் உள்நோக்கம் கொண்டது.
ஏற்கனவே மேகதாது அணை கட்ட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் காவிரி குறித்த அனைத்து அணைகளும் செயல்பட்டு வரும் நிலையில்,கர்நாடக அரசாங்கம் இவ்வாறு செய்வது திட்டமிட்டு தமிழகத்தை அழிக்கும் உள்நோக்கம் கொண்டது.
மேகதாது அணை கட்டப்படுவதால் தமிழகத்தில் சுமார் 30 மாவட்டங்களில் வாழக்கூடிய 5 கோடி மக்களுடைய குடிநீர் ஆதாரம் பறிபோகும்.
25 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாலைவனமாக மாறும். எனவே உடனடியாக இத்திட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசும் காவிரி மேலாண்மை ஆணையமும் முன்வர வேண்டும்.
தமிழக அரசாங்கம் தட்டிக்கேட்க தயங்குகிறது.எனவே இதனை கண்டித்து விரைவில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மேகதாது அணைப் பகுதியை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
திருவாரூர் மாவட்ட செயலாளர் ஜி.சரவணன் ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் இரா.மகேஸ்வரன் கோட்டூர் வடக்கு ஒன்றிய தலைவர் எஸ் வி கே.வீரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.