Fri. Nov 22nd, 2024

தமிழகம், கேரளா, மேற்குவங்காளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்குவங்காளத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

மேற்கு வங்காளத்தில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் – இடதுசாரிகள் – இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பாஜக-வை ஆதரித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பல கட்டங்களாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்று வரும் பிரசார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தேர்தல் பரப்புரையாற்றினார்.

அதன் விவரம் இதோ…

மேற்கு வங்க மாநிலத்தில் முதலீடுகளை அதிகப்படுத்தி, வளர்ச்சிக்கு வித்திடவே வந்துள்ளேன். மேற்கு வங்க மக்களின் கனவுகளை நிறைவேற்றவே நாங்கள் பாடுபடுகிறோம்.

மேற்கு வங்கத்தின் கலாச்சாரத்தை பாதுகாத்து, மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரவே நான் வருகை தந்துள்ளேன்.

நாடு 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது மேற்கு வங்கம் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். அடுத்த 5 ஆண்டுகளின் வளர்ச்சி மாநிலத்தின் 25 ஆண்டுகள் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.

நான் எனது நண்பர்களுக்காக உழைப்பதாக எதிர்க்கட்சிகள் கூறிகிறன. நாம் யாருடன் வளர்ந்தோமோ அவர்கள் தான் நமது நண்பர்கள். நான் வறுமையில் வளர்ந்தேன். ஆகையால், இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் வாழ்ந்துவரும் ஏழைகளின் நிலையை நான் அறிவேன்.

ஏழ்மையில் வாடும் மக்களே எனது நண்பர்கள். எனது நண்பர்களான அவர்களுக்காகதான் நான் உழைக்கிறேன். தொடர்ந்து உழைப்பேன்’

மேற்கு வங்க மக்கள் ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் இடதுசாரிகள், திரிணாமுல், காங்கிரஸ் கட்சிகள் நிற்கின்றன. தங்கமயமான மேற்கு வங்கத்தைதான் இந்த மக்கள் விரும்புகின்றனர். மாற்றத்தைக் கொண்டுவருவார் என மேற்கு வங்கம் மம்தா பானர்ஜியை நம்பியது.

ஆனால் மக்கள் வைத்த நம்பிக்கைக்கு எதுவாக மம்தா பானர்ஜி செயல்படவில்லை. மேற்கு வங்க மக்களைக் காட்டிக் கொடுத்து அவமதித்தவர் மம்தா. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் ஆட்சியில் ஜனநாயக அமைப்பு சீர்குலைந்துவிட்டது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் பிரசார நிகழ்ச்சி இது என்பது நினைவுக்கூரத்தக்கது.

.