தாரை.வே.இளமதி., சிறப்புச் செய்தியாளர்..
தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர் திருமதி அமுதா ஐஏஎஸ்ஸை மாற்றினால்தான் உள்துறையும், காவல்துறை அதிகாரிகளும் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் என்று நல்லரசுதான் முதன்முதலிலும் நிறைவாகவும் சுட்டிக்காட்டியது.
திருமதி அமுதா ஐஏஎஸ் மீது மட்டுமல்ல, எந்தவொரு ஐஏஎஸ் மீதும் நல்லரசுக்கு எப்போதுமே மதிப்பும் மரியாதை உண்டு. ஊடகம் என்ற அடையாளத்தோடு, அங்கீகாரத்தோடு ஐஏஎஸ் அதிகாரிகளை நல்லரசு ஒரு போதும் அணுகியதே கிடையாது. ஐஏஎஸ் பதவியில் அமர்வதற்கு கூர்மையான அறிவு வேண்டும், தனித்துவமான திறன் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உரிய கண்ணியத்தை நல்லரசு எப்போதுமே போற்றி வருகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளிலேயே தனித்துவமானவர் திருமதி அமுதா ஐஏஎஸ் என்பதை பெருமிதமாகவே வெளிப்படுத்திய நல்லரசு, செல்வாக்கு மிகுந்த பதவிகளில் அமர்த்தப்படும் போது, அதிகாரம் தரும்…….. (எந்த வார்த்தையை பயன்படுத்துவது என்பதில் தயக்கம் இருக்கிறது) எல்லை மீறிவிடுகிறார் திருமதி அமுதா ஐஏஎஸ் என்பதுதான், அவர் பணியாற்றும் துறையில் பணியாற்றக் கூடிய கூடுதல் செயலாளர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர், துறை ஊழியர்கள் என அனைவருமே ஒருமித்த குரலில் முன் வைக்கும் குற்றச்சாட்டாகும்.
2021 மே மாதம் 7 ஆம் தேதி முதன் முதலாக முதல் அமைச்சர் பதவியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கும்போது, மத்திய அரசுப் பணியில், பிரதமரின் அலுவலகத்தில் செயலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார் திருமதி அமுதா ஐஏஎஸ். துணிச்சலான, அதிரடிக்கு அஞ்சாத, பொதுமக்களை நேசிக்க கூடியவரான திருமதி அமுதா ஐஏஎஸ், தமிழ்நாடு அரசில் பணியாற்ற வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் விருப்பத்திற்கு ஏற்ப, தமிழ்நாடு அரசுப் பணிக்கு திரும்பினார் திருமதி அமுதா ஐஏஎஸ்.
கிராமப்புற, நகர்ப்புற மக்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவக் கூடிய ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார் திருமதி அமுதா ஐஏஎஸ். அப்போது அந்த துறையின் அமைச்சராக இருந்தவர், திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களில் முதன்மையானவரான ஐ.பெரியசாமி. துறையின் அன்றாட செயல்பாடுகளில் திருமதி அமுதா ஐஏஎஸ்ஸின் தலையீடு அதிகமாக இருந்ததால், மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி, முதல்வர் முன்னிலையிலேயே அமுதா ஐஏஎஸ்ஸுக்கு எதிராக தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அமைச்சரை சமாதானப்படுத்தும் வகையில், திருமதி அமுதா ஐஏஎஸ்ஸை, உள்துறை செயலாளராக பணியிடம் மாற்றம் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய அனுபவம், புயல், வெள்ளத்தின் போது களத்தில் நின்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை 24 மணிநேரமும் மேற்கொண்டதுடன், நீர் நிலைகளை ஆக்கிரமித்து எழுப்பப்பட்டிருந்த கட்டடங்களை அதிரடியாக அகற்றிய துணிச்சல், தலைவர்களின் மறைவையொட்டி உடல் அடக்கத்தின் போது தாமாக முன்வந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் காட்டும் ஈடுபாடு போன்றவற்றால், தமிழகத்தில் பரவலாக பொதுமக்களின் அன்பை பெற்றிருக்கும் திருமதி அமுதா ஐஏஎஸ், உள்துறையில் சிறப்பாக பணியாற்றுவார் என்ற முதல்வரின் எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் செயல்பட்டதை கண்டு, முதல்வரின் செயலாளர்கள் மட்டுமல்ல காவல்துறையின் உயர்ந்த பதவிகளில் அமர்ந்திருந்த ஐபிஎஸ் அதிகாரிகளே மனம் வெதும்பி போனார்கள்.
உள்துறையில், அமுதா ஐஏஎஸ்ஸுக்கு முன்பாக இருந்த எந்தவொரு ஐஏஎஸ் அதிகாரிகளும் செய்ய துணியாத அதிகார அத்துமீறல்களிலும் அமுதா ஐஏஎஸ் அதிக ஆர்வம் காட்டினார் என்பதுதான் தலைமைச் செயலக அலுவலர்களின் பிரதான குற்றச்சாட்டாகும். ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், சக ஐஏஎஸ் அதிகாரிகளின் அறிவுரைகளை தூசி போல தட்டி எறிந்தவர் அமுதா ஐஏஎஸ் என குமறுகிறார்கள் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் நெருக்கம் காட்டி வரும் சமூக ஆர்வலர்கள்.
தமிழ்நாடு காவல்துறையின் தலைவருக்கும் உள்துறை செயலாளருக்கும் இடையே நடைபெற்ற பனிப்போர், தலைமைச் செயலகத்தை கடந்து மாநிலம் முழுவதும் விவாதப் பொருளாக மாறும் வகையில், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளதுரை பணியிடை நீக்கம், கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள், பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை என திராவிட மாடல் அரசுக்கு மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்திய பல்வேறு நிகழ்வுகள் மூலம் உள்துறையின் செயல்பாடுகள், இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் சந்தி சிரிக்க தொடங்கியது. உள்துறைக்கு புதிய செயலாளராக தீரஜ் குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டிருப்பதை ஆரவாரமாக வரவேற்கும் மனநிலைக்கு சென்றுவிட்டார்கள் உள்துறை அலுவலர்களும் காவல்துறை உயரதிகாரிகளும் என்பதுதான் அதிர்ச்சியை உருவாக்குகிறது.
உள்துறையில் இருந்து வருவாய் துறைக்கு மாற்றப்பட்டுள்ள திருமதி அமுதா ஐஏஎஸ் அவர்களுக்கு சவாலான பணிகள் நிறையவே காத்திருக்கிறது. கிராம நிர்வாக அலுவலர் முதல் வருவாய் அலுவலர், வட்டாட்சியர் என ஒட்டுமொத்த லஞ்சப்பணத்தில் மஞ்சள் குளிக்கும் ஊழல் பெருச்சாளிகள் கைது செய்யப்படாத நாளே இல்லை என்பதை போலதான் அன்றாடம் கைது செய்தி வந்துக் கொண்டிருக்கிறது. பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு அரசு சான்றிதழ்களுக்காக விண்ணபிக்கும் விளிம்பு நிலை மக்களை ரத்தக் கண்ணீர் வடிக்க வைக்கும் வருவாய் துறை அலுவலர்களை தயவு தாட்சண்யமின்றி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் சுமந்திருக்கும் அவப்பெயரை திருமதி அமுதா ஐஏஎஸ் நீக்கி கொள்ள வேண்டும் என்பதுதான் அவர் மீது மதிப்பு வைத்திருக்கும் சமூக ஆர்வலர்களின் ஒரே வேண்டுகோளாக இருக்கிறது.
திருமதி அமுதா ஐஏஎஸைப் போலவே களப்பணியில் சுணக்கம் காட்டாத மற்றொரு ஐஏஎஸ் உயர் அதிகாரியான டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களும் கூட, மூன்றாண்டுகளில் மூன்று துறைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் என்பதுதான் வருத்தத்திற்குரிய விடயமாகும்.
2021 ல் சுகாதாரத்துறைச் செயலாளராக பணியாற்றியவர், 2022 ஜுன் 13 ம் தேதி உணவு, கூட்டுறவு துறைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார். ஓராண்டு நிறைவடைவதற்கு முன்பாகவே 2023 மே 13 ல் சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ். மூன்றாவது முறையாக மீண்டும் உணவு, கூட்டுறவுத்துறை செயலாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ். கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்ந்துவிட்ட நிலையிலும் கூட குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஒரே துறையில் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படாமல் இடம் மாற்றம் செய்யப்படுவது, கூடுதல் தலைமைச் செயலாளர் நிலைக்கு உயர்ந்துவிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை மனம் வருந்த செய்துள்ளது என்கிறார்கள் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மிகமிக நெருக்கமான மூத்த ஊடகவியலாளர்கள்.
மருத்துவர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், திருமதி அமுதா ஐஏஎஸ் போல, எண்ணற்ற உயர் அதிகாரிகள் 2021 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில் மூன்று முறை மாற்றப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டும் வகையில்தான் மருத்துவர் கோபால் ஐஏஎஸ், குமார் ஜயந்த் ஐஏஎஸ், தீரஜ் குமார் ஐஏஎஸ், வி.ராஜாராமன் ஐஏஎஸ், ஜெ.ஜெயகாந்தன் ஐஏஎஸ், குமரகுருபரன் ஐஏஎஸ் என பட்டியல் நீண்டு.. ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் என்பது மியூசிக்கல் சேர் விளையாட்டுப் போல மாறியிருக்கிறது திராவிட மாடல் ஆட்சியில் என்பதுதான் மூத்த ஊடகவியலாளர்களிடையேயும் சூடான விவாதமாகும்.
2021 மே 7 ஆம் தேதி முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபோது, உள்துறைச் செயலாளராக பணியாற்றியவர் மூத்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர், முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்து தொடர்ந்து பணியாற்றியதால், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிறகு பணீந்திர ரெட்டி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். அவரின் பணியிட மாற்றத்திற்கு கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் காரணமாக அமைந்தது. அதன் பிறகு நியமிக்கப்பட்ட அமுதா ஐஏஎஸ்ஸுக்கும், கள்ளக்குறிச்சி விஷச் சாராய பலி மட்டுமே காரணமாக இல்லாமல், உயர் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடனான மோதல் போக்கும் பிரதான காரணமாக அமைந்துவிட, அவரை மாற்றிவிட்டு உயரதிகாரியான தீரஜ்குமார் ஐஏஎஸ், உள்துறையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
சர்ச்சைக்குள் சிக்காதவர், அரசோடு இணக்கமாக போகிற குணம் படைத்தவர் தீரஜ்குமார் ஐஏஎஸ் என்கிறார்கள் அவரது தலைமையின் கீழ் பணியாற்றிய தலைமைச் செயலக அரசுத்துறை அலுவலர்கள்.
உள்துறைச் செயலாளர் பதவிக்கு தகுதியான தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் இருக்கும் போது, அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்காமல், வடமாநில ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டது காவல்துறையைச் சேர்ந்த உயர் ஐபிஎஸ் அதிகாரிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள்.
கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன், உள்துறை செயலாளராக நியமிக்கப்படுவார் என்று கடந்த ஓராண்டாகவே பேசப்பட்டு வரும் நிலையிலும் அவர் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். அவரைப் போலவே அனைத்து மாவட்டங்களிலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு பொதுச்சேவையில் மிகுந்த ஆர்வம் காட்டி வரும் பண்பாளர்களிடம் அறிமுகமாகியிருப்பவரான மற்றொரு கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் மணிவாசன் ஐஏஎஸ் அவர்களும் கூட உள்துறை செயலாளர் பதவிக்கு தகுதியானவர் என்பதுடன், ஆட்சித் தலைமைக்கும், தலைமைச் செயலாளர், முதல் அமைச்சரின் செயலாளர்கள் உள்ளிட்ட சக உயர் ஐஏஎஸ் அதிகாரிகளுடனும் இணக்கம் காட்டி வருபவர்தான் என்கிறார்கள்.
உயர் ஐஏஎஸ் அதிகாரிகள் இருவருக்குப் பிறகு அனுபவம் மிகுந்த செந்தில்குமார் ஐஏஎஸ், நாகராஜன் ஐஏஎஸ், ஜெகநாதன் ஐஏஎஸ் உள்பட சிலரும் கூட உள்துறை செயலாளர் பதவிக்கு தகுதியானவர்களாக தான் இருக்கிறார்கள். தமிழர் ஒருவரை உள்துறை செயலாளராக நியமனம் செய்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்த போதும் கூட, வடமாநில ஐஏஎஸ் அதிகாரியை தேர்வு செய்தவர்களின் பின்னணி குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறார்கள் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வரும் திராவிட மாடல் அரசுக்கு ஆதரவான உயர் அலுவலர்கள்.
ஒவ்வொரு முறையும் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யும் போது எழும் சர்ச்சைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு நேரடியாக கொண்டு சென்று,எஞ்சியுள்ள 20 மாதங்களிலாவது அரசுக்கும் நிர்வாகத்திலும் இணக்கமாக செயல்படக் கூடிய தமிழர்களான ஐஏஎஸ் உயர் அதிகாரிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்குவதற்கு மூத்த அமைச்சர்கள் முனைப்பு காட்ட வேண்டும் என்கிறார்கள் அரசுத்துறையில் இருந்து ஓய்வுப் பெற்ற பிறகும் கூட திராவிட சித்தாந்தவாதிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்.