Tue. Dec 3rd, 2024

உதயநிதியின் மனசாட்சியாகவும் அவதாரம் எடுப்பாரா சபரீசன்..

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்தே, வியூகம் அமைத்து வருகிறார்கள். திராவிட மாடல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு, மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாரதிய ஜனதா கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும், அனைத்து விதமான செயல் திட்டங்களையும் வகுத்துக் கொண்டிருக்கிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுககூட்டணிக்கு எதிராக அதிமுக, பாஜக, நாம் தமிழர், பாமக ஆகிய கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில், திரைப்பட நடிகர் விஜயும், திமுகவுக்கு எதிரான சிந்தனையுடனேயே, புதிதாக அரசியல் கட்சியையே தொடங்கி இருக்கிறார்.
2026 சட்டமன்றத் தேர்தலில், திமுகவின் முதல் அமைச்சர் வேட்பாளராக, உதயநிதி ஸ்டாலின் முன்நிறுத்தப்படுவார் என்ற பேச்சு எழுந்ததை அடுத்து, அதே முதல் அமைச்சர் பதவியை குறி வைத்துதான், நடிகர் விஜயும் அரசியல்வாதியாக அரிதாரம் பூசி நிற்கிறார் என்கிறார்கள், அரசியல் திறனாய்வாளர்கள்.
நடிகர் விஜய்க்கு இன்றைய தேதியிலேயே உதயநிதியை பிடிக்கவில்லை.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது வெறுப்பு காட்டுகிறார். திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க துடிக்கிறார் நடிகர் விஜய். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக நடிகர் விஜய், அதிமுகவுடன் கூட, கூட்டணி அமைக்க தயங்க மாட்டார் என்ற பேச்சுகள், அரசியல் தலைவர்களிடமே, சூடான விவாதமாக மாறியிருக்கிறது.


சீமானை விட, எடப்பாடியாருடன் கூட்டணி அமைத்தால் தான், திமுக ஆட்சியை வீழ்த்த முடியும் என்று அரசியல் தலைவராகிவிட்ட நடிகர் விஜயிடம், இப்போது இருந்தே தேர்தல் வெற்றிக் கணக்குப் பாடத்தை போட்டு காட்டி வருகிறார்கள் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளர்கள்.
இப்படிபட்ட பின்னணியில், திமுக ஆட்சியிலும் கட்சியிலும் எல்லா நடவடிக்கைகளிலும், முழுமையான ஈடுபாட்டை காட்டி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன், நேரடி அரசியலுக்கு விரைவாக வர வேண்டும் என்று திமுக முன்னணி தலைவர்களே, உரக்க குரல் கொடுக்க தொடங்கிவிட்டார்கள்.
வி.கே.சசிகலாவைப் போல சபரீசனின் அரசியல் வாழ்க்கை மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையும் கூட, அவமானகரமானதாக மாறி விடக் கூடாது என்று எச்சரிக்கையோடு ஆலோசனைகளை கூறிக் கொண்டிருக்கிறார்கள் சபரீசனின் தீவிர விசுவாசிகள்.
மறைந்த முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதாவிற்கு, தோழியாக 1985 ஆம் ஆண்டிலேயே மன்னார்குடி வி.கே.சசிகலா அறிமுகமாகியிருந்தாலும் கூட, 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், நேரடியாக களத்தில் நிற்காததால், தெரு தெருவாக சுற்றி வந்து ஆதரவு திரட்டுவது போன்ற எண்ணற்ற அவமானங்களை எதிர்கொள்கிறார் வி.கே.சசிகலா.
அரசியலிலும் ஆட்சியிலும் நேரடி பங்கெடுத்தால்தான் பொதுமக்களின் செல்வாக்கை அபரிதமாக பெற முடியும் என்பதை உணர்ந்து கொள்ளாத வி.கே.சசிகலாவுக்கு செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் சரிவும், மிகப்பெரிய அவமானமும், மறைமுக அரசியலில் ஈடுபடும் அனைவருக்கும் பாடமாகும் என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.


2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சபரீசன், திரைமறைவில் மேற்கொண்ட அரசியல் செயல்பாடுகள்தான் திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் 2019 தேர்தலில் அபரிதமான வெற்றியை தேடி தந்தது என்பதை திமுக முன்னணி தலைவர்களே மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்கள்.
தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாத் கிஷோரை பீகார் மாநிலத்தில் இருந்து அழைத்து வந்து தேர்தல் யுக்திகளை வகுப்பதற்கு அடித்தளம் அமைத்தவர் சபரீசன்.
திமுக அரசியல் வரலாற்றில் அதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில், உட்கட்சி அரசியலில் தனிநபரின் தலையீட்டையும் அதுவும் ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவரின் அரசியல் அறிவுரைகளையும் ஒருபோதும் அனுமதிக்காத அறிவார்ந்த தலைவர்கள் நிறைந்த இயக்கமாகதான் திமுக இருந்து வந்தது.
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே, திமுக தலைமை கழகம் முதல் கிளை கழகங்கள் வரை,சபரீசனின் வழிகாட்டுதல்களை கேட்டுதான் இயங்கியது.
திமுக தலைவரான மு.க.ஸ்டாலினின் கட்டளைகளுக்கு பொருட்படுத்தாத, இரண்டாம் கட்ட திமுக தலைவர்கள் கூட, சபரீசனின் உத்தரவுகளை உதாசீனப்படுத்த முடியாமல், தலை வணங்கி ஏற்றுக் கொண்டதை அரசியல் திறனாய்வாளர்கள், இன்றைக்கும் கூட நினைவுக்கூறுகிறார்கள்.


2019 தேர்தல் தந்த அட்டகாசமான வெற்றியால் உற்சாகமான, அப்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகத்தையும் சபரீசனிடமே துணிந்தே ஒப்படைத்தார்.
எம்எல்ஏ வேட்பாளர் பட்டியலை இறுதி செய்தவரே சபரீசன்தான் என்று கிளை கழக நிர்வாகிகள் வரை பேசிய நேரத்திலும், திமுக போட்டியிட்ட தொகுதிகளில் மட்டுமின்றி கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளிலும்
பணத்தை வாரி இரைத்தவர் சபரீசன்தான் என்பதால், திமுக கூட்டணி தலைவர்களிடமும் சபரீசனின் செல்வாக்கு உயரத் தொடங்கியது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது புதல்வரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அடுத்து சபரீசனுக்கும் மரியாதை செலுத்துவதற்கு திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களுமே தயாராகிவிட்டார்கள்.
திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களாக உள்ளவர்கள், அவர்களின் வாரிசுகளையும் அரசியல் பாதைக்கு அழைத்து வந்துவிட்டார்கள் என்பதால், வாரிசு அரசியல் என்றே பேச்சுகே இடம் இல்லாமல் போய்விட்டது.


வாரிசு அரசியலால் திமுக, சரிவை சந்தித்து விடுமோ என்று திராவிட இயக்க சித்தாந்தவாதிகள் அச்சம் கொண்டிருந்த நேரத்தில்தான், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் ஐ பெரியசாமி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, மூத்த தலைவர்கள் டி.ஆர்.பாலு, எ.வ.வேலு, க.பொன்முடி,எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்பட பலரின் வாரிசுகள்
அரசியலிலும் ஆட்சி அதிகாரத்திலும் ஏற்கெனவே கொடி கட்டி பறந்து கொண்டிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
மாவட்டங்களில் மட்டுமே இரண்டாம் கட்ட திமுக தலைவர்களின் வாரிசுகள் அரசியல் செய்து கொண்டிருக்கும் நேரத்தில், எம்பி தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக வேட்பாளர்கள் மட்டுமல்ல, கூட்டணி வேட்பாளர்களும் வெற்றி பெறுவதற்கு கடுமையாக களப் பணியாற்றிய சபரீசனுக்கு திமுகவில் முக்கிய பதவி வழங்க வேண்டும் என்று முழக்கம் அதிகமாக கேட்க தொடங்கியிருக்கிறது.
2021 திமுக அமைச்சரவையில் பதவியேற்க உள்ளவர்களுக்கு ஒதுக்கப்படும் துறைகளை முடிவு செய்தவரே சபரீசன்தான் என்று கூறும் திமுக இரண்டாம் கட்ட தலைவர்கள், 2019 மற்றும் 2021 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் திமுக அபரிதமான வெற்றியை சூடுவதற்கு மூளையாக இருந்தவரும் சபரீசன்தான் என்கிறார்கள் அண்ணா அறிவாலய மூத்த நிர்வாகிகள்.


பத்தாண்டுகளுக்குப் பிறகான திமுக ஆட்சி, திராவிட மாடல் ஆட்சியாக புகழப் படுவதற்கும் இந்தியா முழுவதும் பிரபலமாவதற்கும் அடித்தளமிட்டவர் சபரீசன்தான் என்கிறார்கள் அனுபவமிகுந்த ஐஏஎஸ் அதிகாரிகள்.
பொதுத் தேர்தல்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களிலும் திமுக வெற்றிப் பாதையில் நடைபோடுவதற்கு கடுமையாக உழைத்தவரும் சபரீசன் தான் என்று கூறும் திமுக மூத்த தலைவர்கள், கட்சியிலும் மட்டுமல்ல ஆட்சியிலும் சபரீசனின் ஆலோசனைகளுக்கும் அறிவுரைகளுக்கும் மகத்தான வரவேற்பு கிடைத்து வருவதாக பெருமிதம் காட்டுகிறார்கள்.
ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் ஆகியோரின் இட மாறுதல், நடுத்தர மக்களுக்கு முன்னேற்றத்தை தரும் நலத்திட்டங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் எதிர்காலம், ஒளிமயமாக மாறுவதற்கு முன்னெடுக்கப்படும் சிறப்பு திட்டங்கள் அனைத்திலும் சபரீசனின் பங்களிப்பு அதிகமாகவே இருக்கிறது என்கிறார்கள் திமுக இளைஞரணி நிர்வாகிகள்.
திமுக தலைவர்களின் வாரிசுகளில் பெரும்பான்மையானோர், அமைச்சர் உதயநிதியின் கட்டளைகளுக்கு எப்படி அடிபணிந்து போகிறார்களோ அதுபோலவே சபரீசனையும் வணங்குவதற்கும், தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதற்கும் கொஞ்சம் கூட தயக்கமே காட்டுவதே இல்லை.
திமுக எனும் அரசியல் இயக்கம் வளர்வதற்கும், பொதுத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிகளை குவிப்பதற்கும் மறைமுகமாக உழைத்துக் கொண்டிருப்பவர் சபரீசன்தான் என்று வெளிப்படையாகவே கூறுகிறார்கள் திமுகவின் அடிமட்ட தொண்டர்கள்.
திமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் முதல் திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் வரை சபரீசனினின் உழைப்பையும், அரசியல் வியூகங்களையும், ஆட்சி நிர்வாகத்தை வழிநடத்துவதற்கு கூறும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள்.
மாமனார் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிக்கு பின்னணியில் இருந்து 24 மணிநேரமும் உழைத்துக் கொண்டிருக்கும் சபரீசன் நேரடி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சரியான காலம் கனிந்திருப்பதாக திமுக இளைஞரணி நிர்வாகிகளே உரக்க கூறுவதுதான் வியக்க வைக்கும் விஷயமாகும்.
திமுகவின் அடுத்த தலைவர்,
2026 ல் முதல் அமைச்சர் வேட்பாளர்,
வெகு விரைவில் துணை முதல்வர்
என
திமுகவின் நிகழ் கால, எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக மாறி நிற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும்கூட
சபரீசனின் அரசியல் வியூகங்களும், ஆட்சி நிர்வாகத்தில் உள்ள நுட்பங்களும்
அவசியம் தேவைப்படும் என்கிறார்கள் திமுக இளைஞரணி நிர்வாகிகள்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனசாட்சியாக மாறியிருக்கும் சபரீசன், மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதிக்கு மனசாட்சியாக இருந்து, மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் அறிவுகூர்மைக்கு
இணையானவராக உயர்ந்து நிற்கிறார் சபரீசன் என்று இரண்டாம் கட்ட திமுக தலைவர்களே பாராட்டி வருவதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்
உதயநிதிக்கு நெருக்கமான திரையுலக பிரமுகர்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பாய்ச்சல் திமுகவில் வேகமெடுத்து வரும் இந்த நேரத்தில் சபரீசன் நேரடி அரசியலுக்கு வருவதுதான், திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றியை 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பெற்று தரும் என உறுதியாக நம்புகிறார்கள் திமுக இளைஞரணியின் மூத்த நிர்வாகிகள்.


2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் நேரத்தில் உதயநிதி, சபரீசன் போன்ற இளம் திமுக தலைவர்கள் களத்தில் நின்றால், திமுக எனும் மாபெரும் திராவிட இயக்கத்திற்கும், திராவிட மாடல் ஆட்சிக்கும் முடிவுரை எழுத துடிக்கும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு பேரிடியாக நிச்சயம் அமையும் என, உறுதிபட கூறுகிறார்கள், திராவிட இயக்க கொள்கையில் திளைத்து நிற்கும் சித்தாந்தவாதிகள்.