Tue. Apr 30th, 2024

சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன்தொகையை சுமக்க முடியாமல் தமிழ்நாடே திணறிக் கொண்டிருக்கும் நிலையில், ஆட்சியின் நிறைவுக் காலத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மேல் வாரி வழங்க, தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வள்ளல் பரம்பரையைச் சேர்ந்தவரா, என்ன?
இல்லை, தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் தை திருநாளை, பொங்கல் திருவிழாவை உற்சாகமாக கொண்டாட முடியாமல் உழவர் குடும்பங்கள் அய்யோ கண்ணீர் சிந்துகிறார்களே என்ற கவலையிலா, பொங்கல் பரிசுத் தொகையை இனமாக வாரி இரைக்கிறார் முதல்வர் இ.பி.எஸ்..
பாவம் பொதுமக்கள் என்ற பரிதாபமெல்லாம் ஒன்றும் இல்லை. எல்லாமே வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்துவிடலாம் என்ற மனக்கணக்கில்தான், பொங்கல் பரிசுத்தொகையின் சூட்சமே மறைந்திருக்கிறது.
பொங்கல் பரிசு 2500 ரூபாயை அறிவித்த கையோடு தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பிவிட்டார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 2021 சட்டமன்றத் தேர்தல், அவருக்கு சவால் நிறைந்த ஒன்றாக மாறியிருக்கிறது. இந்த தேர்தலில் தனது தலைமையிலான கடந்த 4 ஆண்டு ஆட்சியின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே, கடந்த சில நாட்களாக ஊர்தோறும் சாகசங்களை செய்து கொண்டு இருக்கிறார். தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பில் நடந்து சென்று பிரசாரத்தில் ஈடுபட்டதையெல்லாம், உலகமகா சாதனையாக அ.தி.மு.க. சார்பு சமூக ஊடகம், கொண்டாடிக் கொண்டு இருக்கிறது.
67 வயதில் நடமாடிக் கொண்டிருக்கும் இ.பி.எஸ், அவர் சந்தித்த முதல்தேர்தலான 1989 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தொடங்கி, கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வரை சேலம் மாவட்டத்தை கடந்து வேறு எந்த மாவட்டத்திற்கும் யாருக்காவும் அவர் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றது கிடையாது. இடைத்தேர்தல்களில் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் அவர் களமாடியிருக்கிறார்.
ஆனால், இன்றைக்கு அவர்தான் அ.தி.மு.க. முதலமைச்சர் வேட்பாளர். அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தாலும், அவருக்கு இல்லாத முக்கியத்துவம், ஒளிவெள்ளம் இ.பி.எஸ்.ஸுக்குதான் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த புள்ளியில் இருந்துதான் தொடங்குகிறது அவரது பலமும், பலவீனமும்
2016 டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா மறைந்த பிறகு தர்மயுத்தம் + கூவத்தூர் கேளிக்கைகளை கடந்து, 2017 ஆம் ஆண்டு சின்னம்மா என்று அடையாளப்படுத்தப்பட்ட திருமதி சசிகலா சிறைக்கு சென்றதை அடுத்து, 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி ஆட்சிப் பொறுப்புக்கு தலைமை ஏற்றார் எடப்பாடி பழனிசாமி. அன்றைக்கு அவரது ஆட்சிக்கு ஓ.பி.எஸ். ஒருபக்கம் நெருக்கடி கொடுக்க, கொஞ்ச நாளில் மன்னார்குடி புகழ் டி.டி.வி.தினகரனும் ஆட்டம் காட்ட, தமிழக அரசியலில் பரிதாபத்திற்குரிய நபராக தான் காட்சியளித்தார் எடப்பாடி பழனிசாமி.
ஆனால், அமைச்சராக பதவி வகித்த காலத்தில் போயஸ் கார்டனுக்கும், மன்னார்குடி குடும்பத்திற்கும் செய்த சேவையை, ஓ.பி.எஸ்.தரப்புக்கும், டி.டி.வி.தினகரன் தரப்புக்கும், ஆரம்ப நாட்களில் தனது ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்த மத்திய அரசுக்கும் செய்து, தனது இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டார் இ.பி.எஸ். நான்காண்டுகளில் அவரது தலைமையிலான அரசு செய்த சாதனைகளை எல்லாம் நாளிதழ்களில் பக்கம் பக்கமாக அரசுப் பணத்தில் விளம்பரம் கொடுத்து, தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தி கொள்கிறார்.
முதலில் இ.பி.எஸ்.ஸின் சாதனைகள் என்ன ?…
2017 ல் முதல் அமைச்சர் பதவியை வழங்கிய திருமதி சசிகலா மற்றும் மன்னார்குடி குடும்பத்தை முழுமையாக ஓரம் கட்டினார். (அதற்கு காரணம், அவர்கள் மீது மக்களுக்கு இருந்து வெறுப்பின் காரணமாக அல்ல. அந்த குடும்பத்தின் தலையீடு ஆட்சியிலும் கட்சியிலும் இருந்தால், திசைக்கு ஒன்றாக சாஷ்டாங்கமாக காலில் விழ வேண்டும். கிடைக்கும் கமிஷனை முழுமையாக தாரை வார்த்துவிட்டு, புறங்கையைதான் சுவைக்க வேண்டும் என்பதால்தான். )
அதிகார வர்க்கமான ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பதவிகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட அதிகாரிகளை ஆழ்ந்த அனுபவ அறிவு, அரசியல் சாணக்கியத்தனத்தால் கீழ்படிய வைக்க வாய்ப்பு இல்லாததால், அனுசரித்து செல்வோம் என்ற பாணியை கடைபிடிக்க தொடங்கினார். (அதன் விளைவுதான், 2018 ஆம் ஆண்டில் பெருங்கொடூரத்தை தமிழகம் சந்திக்க நேர்ந்தது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள், 100 வது நாளை எட்டியபோது, அப்பாவி மக்கள் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆட்சிப் பொறுப்பில் தலைமையில் இருந்து இ.பி.எஸ்., துளி கூட வெட்கமே இல்லாமல், அந்த துயர நிகழ்வை டி.வி. செய்திகளில்தான் பார்த்தேன் என்று ஊடகவியலாளர்களுக்கு முன்பு திருவாய் மலர்ந்ததை மறந்துவிட முடியுமா?)
தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ்.ஸை தனிமைப்படுத்தி, அவரது ஆதரவாளர்களை எல்லாம் தன் காலடியில் ஆவிழ வைத்து, ஆட்சியிலும், கட்சியிலும் தன் அதிகாரத்தை வலுப்படுத்திக் கொண்டார்.
திமிறிய அமைச்சர்களைத் தவிர்த்து, பதவிக்கும், பணத்திற்கும் ஆசைப்பட்ட அமைச்சர்களை அடிமையாக்கி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலில் விழுந்து வணங்கியதைப் போல தன்னுடைய காலிலும் விழ வைக்கும் வித்தையை குறுகிய காலத்தில் கற்றுக் கொண்டது. தன்னுடைய விசுவாசிகளை பெரும்பான்மையாக இடைத்தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் வேட்பாளராக அறிவித்து, ஜெயலலிதாவை மிஞ்சிய ஆளுமையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.
கல்வி, சுகாதாரம், தொழில், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளை கைவசம் வைத்திருக்கும் அமைச்சர்களை, தனது கூட்டாளியாக மாற்றிக் கொண்டு, தமிழக அரசின் திட்டங்களும், மத்திய அரசின் திட்டங்களும் முழுமையாக மக்களை சென்றடைய ராஜதந்திரத்துடன் செயல்பட்டது என சொல்வதற்கு ஏராளமான நல்ல விஷயங்கள் இருப்பதை மறுப்பதற்கோ, மறைப்பதற்கோ வழியில்லை.
எல்லாவற்றையும் விட, பொதுமக்கள் பார்வையில், கடந்த நான்காண்டுகளில் கட்டப்பஞ்சாயத்து பெருமளவில் இல்லை. போலீஸ் ஸ்டேஷனில் அ.தி.மு.க.வினரின் அத்துமீறல்கள் தலையெடுக்காமல் பார்த்துக் கொண்டது, ரவுடியிசத்தை கட்டுப்படுத்தி வைத்தது, நிலம் அபகரிப்பு, மிரட்டல், உருட்டல் என எந்தவிதமான சட்டவிரோதச் செயல்களிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஈடுபடாமல் அடக்கி வைத்தது போன்றவை பரலவாக மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.
ஆட்சி நிர்வாகத்தின் சாதனையாக, மிகை மின்மாநிலமாக தமிழகத்தை வைத்திருப்பது. மாவட்டந்தோறும் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற திட்டத்தை தொடங்கி, புதிதாக 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டியது, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் மராமத்து பணிகளை மேற்கொண்டு விவசாயிகளின் மனங்களை குளிர வைக்க முயன்றது, குக்கிராமங்களிலும் சாலைகளை விரிவுப்படுத்தியும், ஆண்டுக்கு இருமுறை புதிதாக அமைத்தும், இ.பி.எஸ். அரசு, மக்களுக்காக தான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என்ற பேச வைத்தது என 4 ஆண்டு ஆட்சியில் பாஸ் மார்க்தான் வாங்கியிருக்கிறார் இ.பி.எஸ்..
இ.பி.எஸ்.ஸின் வேதனைகள் என்ன ? அதையும் பார்த்துவிடுவோமே…
பொத்தாம் பொதுவாக இ.பி.எஸ். ஆட்சி பரவாயில்லை, பெரும்பான்மையான மக்களிடம் அதிருப்தியில்லை என்று பொதுஜனங்கள் பேச வைத்திருந்தாலும், எக்ஸ்ரே போன்று ஊடுருவி பார்த்தால்தான், கடந்த 4 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் மட்டுமல்ல, 2011 தொடங்கி 2021 வரையிலான ஒட்டுமொத்த 10 ஆண்டு ஆட்சிக் காலத்திலும், தமிழகத்தின் பெரும்பான்மையான கிராமங்களில் மட்டுமல்ல, சிறுசிறு நகரங்களில் கூட தனிமனித வருமானம் படிப்படியாக குறைந்து, இன்றைக்கு அதலபாதாளத்தில் குப்புற விழுந்து கிடக்கிறது.
ஜெயலலிதா மறைவையடுத்து, உடனடியாக முதல் அமைச்சராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம், தனக்கு ஆதரவாக நின்ற மத்திய அரசுக்கு நன்றிக் கடன் செலுத்தும் விதமாக, 2011 முதல் 2016 வரை உறுதியாக எதிர்த்து வந்த மின்சார ஒழுங்குமுறை சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களுக்கு சத்தமில்லாமல், கையெழுத்திட்டு, தமிழக அரசு, தன்மான அரசல்ல, இனிமேல் அடிமை அரசு தான் என சாசனம் எழுதிக் கொடுக்காமல், தன் நடந்தைகள் மூலம் நிரூபித்துக் கொண்டார். அவர் வழியையே பின்பற்றத் தொடங்கினார், அவருக்குப் பின்னர், தமிழகத்தின் முதலமைச்சரான இ.பி.எஸ்.
நீட் தேர்வு முதல் அண்மையில் அமல்படுத்தப்பட்ட புதிய வேளாண் சட்டங்கள் முதல், மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்து அடிமை அரசுப் போல நடந்துகொள்கிறது இ.பி.எஸ் அரசு என்று கொதிக்கிறார்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள்.
இப்படி தமிழகத்தின் உரிமைகள் ஒருபக்கம் விட்டுக் கொடுத்து வரும் அதே சமயம், கடந்த இரண்டாண்டுகளில் இ.பி.எஸ். தலைமையிலான அரசில் நடந்த முறைகேடுகள், பகல் கொள்ளையை விட கொடூரமானவை. அவைபற்றியெல்லாம் நீதிமன்றங்களே பகிரங்கமாக சுட்டி காட்டியுள்ளன என்பதுதான் வேதனை. 5 லட்சம் ரூபாய் கோடிக்கு மேல் கடன்சுமையை தமிழக அரசு சுமக்கும் வகையில், நிதி நிர்வாகத்தை சீரழித்துவிட்டதாக இ.பி.எஸ்.ஸுக்கு எதிராக நெற்றிக்கண்களை திறக்கிறார்கள், பொருளாதார வல்லுனர்கள்.
தமிழக அரசு வலுவான நிதியாதாரம் கொண்டிருந்தாலும், அரசு கஜானா முழுமையாக துடைத்து வைக்கப்பட்டிருக்கிற இன்றைய நிலையில், மீண்டும் அ.தி.மு.க ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, 234 தொகுதிகளுக்கும் தலா 20 கோடி ரூபாய் என்ற கணக்கில், தேர்தல் செலவுக்கு கிட்டதட்ட 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தயாராக வைத்திருக்கிறது இ.பி.எஸ். டீம். இதில் கூட்டணி கட்சிகளுக்கு அன்பளிப்பாக வழங்கும் தொகை சேர்க்கப்படவில்லை. குறைந்தபட்சம் 500 கோடி ருபாயைக் கூட செலவழிக்கிற தயாராக இருக்கிறதாம் இ.பி.எஸ். அணி என்கிறார்கள், மூதத பத்திரிகையாளர்கள்.
இந்த கோடிகளை கூட்டிப் பார்க்கும் பொதுஜனம் இதெல்லாம் சாத்தியமா? என்று கூட கேட்கலாம். தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் போடும் பட்ஜெட் தொகை, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல். இதில், முதல்வர் தன்வசம் வைத்திருக்கும் துறைக்கு ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இந்த தொகையில் பெரும்பாலும் மேம்பாலங்கள், அணைகள், தூர்வாரும் பணி, நீர்வழித்தடங்கள் அமைத்தல், அரசு கட்டடங்கள் கட்டுதல் போன்ற பணிகள் தான் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் சுமார் 40 சதவிகிதம் கமிஷனாக (லஞ்சமாக) பெறப்படுகிறது என்பது தலைமைச் செயலகத்திலேயே பரவலாகப் பேசப்படுகிறது. 15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டில் 40 சதவிகிதம் கமிஷன் என்றால், எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சமாக கிடைக்கும் என்று கணக்கிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.
இவைதவிர, பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிற ஊரக வளர்ச்சித்துறை இருக்கிறது. சுகாதாரத்துறை இருக்கிறது. மின்சாரத்துறை இருக்கிறது. உயர்க்கல்வி, பள்ளிக்கல்வித்துறை இருக்கிறது. தமிழக அரசின் மொத்த பட்ஜெட்டில் 75 சதவிகிதத்திற்கு மேல் நிதி ஒதுக்கீடு பெறுகிற அத்தனை துறைகளையும் வைத்திருக்கிற அமைச்சர்களும் ஒட்டுமொத்தமாக இ.பி.எஸ். ஆதரவாளர்களே..
இந்த கணக்குகளே தலை சுத்துகிறது என்றால், அரசு பணி நியமனங்களுக்கும், பணி மாறுதல்களுக்கும் பெறப்படும் லஞ்சத் தொகைப் பற்றி, கடைக்கோடி கிராமத்தில் உள்ள சாதாரண மனிதர்கள் கூட குமறுகிற வகையில், ஆட்சியின் அவலங்கள் அதிகமாகதான் இருக்கிறது.
சாதாரண சத்துணவு அமைப்பாளர் பணிக்கு 3 லட்சம் ரூபாய் லஞ்சம், அதே பணிக்கு இடம் மாறுதல் பெற வேண்டும் என்றால், ஒரு லட்சம் ரூபாய் அழ வேண்டும். இதைவிட கொடுமையாக, உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனோ நோய் தொற்றில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றிய முன்களப் பணியாளர்களான அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என ஒவ்வொரு தரப்பினரும் பணிமாறுதல் பெற முறையே 8 முதல் 10 லட்சம் வரையிலும், 2 முதல் 4 லட்சம் வரையிலும், 1 முதல் 2 லட்சம் வரையிலும் லஞ்சமாக அழுதுதான் விரும்பிய இடங்களுக்கு பணிமாறுதல் பெற்றுச் செல்கின்றனர் என்பது தமிழக அரசு மருத்துவப் பணியாளர்கள் சங்கம் முன்வைக்கிற பகிரங்க குற்றச்சாட்டு. இதைவிட கொடுமையாக மருத்துவ கல்வி இயக்குனர் பதவி போன்ற உயர் பதவிகளுக்கு ஒரு கோடிக்கு மூலம் லஞ்சம் கொடுக்க வேண்டும். சுகாதாரத் துறையில், துணை இயக்குனர் பதவியில் இருந்து இணை இயக்குனர் பதவி வரையிலான பணியிடங்களுக்கு பத்து லட்சம் முதல் 20 லட்சம் என லஞ்சத் தொகை நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கிறாராம் குட்கா ஊழல் புகார் அமைச்சர்.
ஒட்டுமொத்தமாக இ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. அரசு கட்டுப்பாடின்றி லஞ்ச வேட்டையில் புகுந்து விளையாடி வருவதாக, மனம் தாங்காமல் பொங்கித் தள்ளுகிறார்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உண்மை விசுவாசிகள்.
இப்படி அ.தி.மு.க. கட்சிக்குள்ளேயே குமறல்கள் அதிகமாக கேட்கும் லட்சணத்தில், எந்த தைரியத்தில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை அமைப்போம் என உறுதியாக கூறிக் கொண்டிருக்கிறார்கள்? இப்படி கேள்வி கேட்டால் சத்தமாகவே சிரிக்கிறார்கள் அ.தி.மு.க. அடிமட்ட தொண்டர்கள். கவலையே படாதீர்கள். இ.பி.எஸ்.ஸின் முதல்வர் கனவை தவிடுபொடியாக்கிவிடுவார்…………………….என்று சொல்லிவிட்டு சில விநாடிகள் மௌனம் காக்கும் நேரத்தில் ஸ்டாலின் பெயரைச் சொல்வார்களா? என்று எதிர்பார்த்தால், சத்தமாக சிரித்துக் கொண்டே சொல்கிறார்கள் ஓ.பி.எஸ். என்று.. ஓ. கதை இப்படி போகிறதா? கிருஷ்ணகிரி தொடங்கி நீலகிரி வரையிலான மேற்கு மாவட்டங்களில் மட்டுமே இ.பி.எஸ். பெயர் அடிபடலாம்., தென் மாவட்டங்களில் இ.பி.எஸ்.ஸுக்கு துளிக் கூட செல்வாக்கு இல்லை என்கிறார்கள், அந்த மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் இரண்டு சாதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள்.
நிறைவாக, பா.ஜ.க.வின் அடிமை அரசு என்று சமூக ஊடகங்கள் வறுத்தெடுக்கும் நேரத்தில், தனது இறுதிமூச்சு வரை டெல்லி பா.ஜ.க.வை கடுமையாக எதிர்த்தவர் ஜெயலலிதா. ஆனால், அவரது ஆட்சியை தான் தொடர்கிறோம் என்று கூறும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். கூட்டணி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி சென்னை வந்த பா.ஜ.க மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவுக்கு கொடுத்த ராஜ உபசாரமும், சிகப்பு கம்பள வரவேற்பும், உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களின் ரத்தத்தை கொதிக்க வைத்துவிட்டது. இப்படி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அடிவருடிகளாக மாறிப் போன இ.பி.எஸ்., ஸுக்கு டெல்லி பா.ஜ.க. தரும் மரியாதை என்ன? கோபத்தோடு கேட்கிறார்கள் அ.தி.மு.க. அனுதாபிகள். தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறும் அளவுக்கு சொந்த செல்வாக்கு இல்லாத பா.ஜ.க., தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் தான் சொல்வோம் என்று பிலிம் காட்டி வருகிறார்கள். அந்தக் கூட்டணியில் அ.தி.மு.க. இருக்கிறதா என்று அகில இந்திய தலைமை இன்னும் வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால், பிரசாரத்தின் போது ஒவ்வொரு நாளும் பீடிகை போடுகிறார் இ.பி.எஸ். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அமைத்த கூட்டணி அப்படியே தொடருகிறது என்று.. இதுபற்றி பா.ம.க. பேச மறுக்கிறது. தே.மு.தி.க 41 தொகுதிகளை கேட்டு அடம் பிடிக்கிறது. தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி கட்சிகள் தரும் நெருக்கடிகளை எல்லாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் இ.பி.எஸ். என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.
இப்படி அனைத்துப் பக்கமும் உயர்ந்து நிற்கும் தடைகளை தகர்த்து மீண்டும் அரியணையை கைப்பற்றுவாரா? இ.பி.எஸ்..
மக்கள் கையில் தீர்ப்பு.. காத்திருப்போம்..
எதிர்க்கட்சியான தி.மு.க.வின் நிலை என்ன?
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக முதல் அமைச்சர் கனவில் மிதக்கும் மு.க.ஸ்டாலின், சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக் கொடி நாட்டுவாரா…?முதல்வர் இ.பி.எஸ்.ஸுக்கு எழுதிய ஆயிரம் வார்த்தைகளுக்கு மேலான விமர்சனம் போல, மு.க.ஸ்டாலினுக்கு அவ்வளவு வார்த்தைகள் தேவையிருக்காது என்பதே யதார்த்தம்.
திராவிட இயக்கம் தமிழகத்தில் அழுத்தமாக கால் பதித்து, அரை நூற்றாண்டை கடந்திருக்கும் ஆயுளுக்கு இணையான வயதுடைய மு.க.ஸ்டாலின், இந்தியாவே திரும்பி பார்த்த அரசியல் ஞானியான கலைஞர் மு.கருணாநிதி என்ற அரசியல் பல்கலைக்கழகத்தில் அரை நூற்றாண்டுக்கு மேல் அரசியல் பாடம் கற்ற போதும், இன்னும் அவர் எல்.கே.ஜி. மாணவனுக்கு இணையான அரசியல் ஞானத்தோடுதான் இருக்கிறார் என்பது நமது விமர்சனம் அல்ல. அவரோடு அன்றாடம் பயணிக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களின் பகிரங்க குமறல். தி.மு.க.வின் பலமே, முடி திருத்தகம், ரிக்ஷா தொழிலாளி, விவசாயக் கூலிகள் என அடிமட்ட தொண்டர்களிடம் ஆழமாக ஊன்றியிருக்கும் கட்சி விசுவாசம்தான். அவர்களின் குரல்களே பரவலாக ஒலிக்கிறது.
14 வயதில் அரசியல் களத்திற்கு வந்துவிட்ட மு.க.ஸ்டாலின், 1983ல் தி.மு.க. இளைஞரணி செயலாளராக பொறுப்பு ஏற்று, சுமார் 37 ஆண்டுகள் தமிழகத்தை வலம் வந்தவர். பத்தாண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத போதும், மக்களின் மனங்களில் இருந்து பாடம் படிக்க, சொந்த புத்தி அவருக்கு அரசியல் கற்றுத் தரவில்லை. 350 கோடி ரூபாய் கூலியாக கொடுத்து, வடநாட்டில் இருந்து பிரசாத் கிஷோர் எனும் ஒருவரை நியமித்து, வேட்பாளர் தேர்வையும், தேர்தல் பணிகளையும் மேற்கொண்டு வருவதே, கட்சியின் முன்னணி தலைவர்களிடம் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி, மு.க.ஸ்டாலின் ஆளுமையே கடும் கேள்விக்குள்ளாகியிருக்கும் இந்த நேரத்தில், கலைஞர் மு. கருணாநிதி மறைவுக்குப் பிறகுதான், அவரின் இயலாமை வெட்ட வெளிச்சமாகிக் கொண்டிருப்பது பரிதாபமான ஒன்று. இந்த நேரத்தில், தமிழக தேர்தலையொட்டி மு.க.ஸ்டாலின் பலம் என்ன? பலவீனம் என்ன? என விரிவாக அலச வேண்டிய அவசியமே இல்லை. திருக்குறளைப் போல இரண்டு அடியில் அலசுவது கூட அதிகம் தான்…
மு.க.ஸ்டாலினின் பலம் என்ன?
தி.மு.க.வின் வாக்கு வங்கியாக உள்ள 20 முதல் 25 சதவிகிதம் உள்ள நிரந்தர வாக்காளர்கள்.மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கிகள் ஏறக்குறைய 10 சதவிகிதம், ஆக மொத்தம் 30 சதவிகித வாக்குகள் பெற்றாலே போதும், தி.மு.க.வை அரியணையில் அமர வைக்கும் என்ற அழுத்தமான நம்பிக்கை.
10 ஆண்டு அ.தி.மு.க. அரசுக்கு எதிரான அதிருப்தி அலை + முதல்வர் இ.பி.எஸ். மற்றும் அமைச்சர்களின் அலப்பறைகள்..
தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. எதிராளிக்கு இரண்டு கண் போக வேண்டும் என்ற அபூர்வ குணத்தை கொண்டிருக்கும் ஓ.பி.எஸ்.ஸின் உள்ளடி வேலைகள், தி.மு.க. வெற்றியை சாதகமாக்கும் என அசைக்க முடியாத நம்பிக்கை.
சின்னம்மா சசிகலாவின் சித்து விளையாட்டுகளால் அ.தி.மு.க.வில் கிளம்பும் பூகம்பம், தி.மு.க. வெற்றிக்கு பூமாலைகளாக மாறும் என்ற அபார கற்பனை.
மதவாத, ஆன்மிக அரசியலுக்கு எதிராக நிற்கும் தமிழ் தேசிய உணர்வாளர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு..
இப்படி அடுக்கடுக்கான காரணங்களை முன்வைக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் மற்றும் தி.மு.க. கூட்டணி வெற்றிக்காக தங்கள் அடையாளங்களை மறைத்துக் கொண்டு மறைமுகமாக வேலைபார்க்கும் பிரபல ஊடகவியலாளர்கள்.
மு.க.ஸ்டான் பலவீனம் என்ன ?
பலம் போல எண்ணற்ற அம்சங்களை அடுக்கத் தேவையில்லை. பலவீனத்தின் மொத்த உருவமாக காட்சியளிக்கும் ஸ்டாலின் என்ற தி.மு.க.வினரே வேதனை தெரிவிப்பதை விட வேறு எந்த காரணங்கள் முக்கியமானதாக இருந்துவிடப்போகிறது.
துண்டுச் சீட்டு தலைவர் என்பதும், பேசி பேசி திராவிட இயக்கத்தை வளர்த்த கட்சியின் தலைவருக்கு ஒரு சில நிமிடங்கள் கூட தொடர்ச்சியாக பேச முடியவில்லையே என்பதையும் பெரும் குறையாக சுட்டிக் காட்டுகிறார்கள்.
கொரோனோ தொற்று கண்டறியப்பட்ட முதல் நாளில் இருந்து கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பொதுமக்களை, தி.மு.க. கட்சியினரை நேரிடையாக சந்திக்காமல், கணினி வழியாக சந்தித்த, கோழைத்தனமும், மு.க.ஸ்டாலினுக்கு எதிரான பிரசாரத்தை, கிராமங்களைக் கூட சென்றடைந்திருக்கிறது.
முதல்வர் பதவிக்கு ராசியில்லாதவர் மு.க.ஸ்டாலின் என்று பேசும் அளவிறக்கு தி.மு.க.வினரையே உருமாற வைத்திருப்பதும், ஆளுமைகுணம் கொண்ட தலைவர் இல்லை. கலைஞர் கருணாநிதியைப் போல ஆளும்கட்சிக்கு எதிரான போராளி இல்லை என்பதும், உட்கட்சியில் பரவலாக பேசப்படும் பொருளாகிவிட்டது.
இதையெல்லாம் தாண்டி, தி.மு.க. ஆட்சிக்கால வன்முறைகளை, பத்தாண்டுகளுக்குப் பிறகும் மக்கள் மறக்க தயாராக இல்லை. இப்படி பொதுமக்கள் மத்தியில் தி.மு.க. மீதான கசப்புணர்வு இன்றைக்கும் தலைதூக்கிக் கொண்டுதான் இருக்கிறது.
பொதுவெளியில், தி.மு.க.வுக்கு எதிராக, ஸ்டாலின் மீது வெறுப்புணர்வோடு பேசப்பட்டு வரும் அதே அளவுக்கு., உட்கட்சியிலும் ஸ்டாலினின் தலைமைப் பண்பு கடுமையாக கேள்விக்குள்ளாகியுள்ளது.
ஸ்டாலினுக்கு சுய புத்தியும் இல்லை. சொல் புத்தியும் இல்லை என்கிறார்கள் மாவட்டச் செயலாளர்களை உள்ளடக்கிய இரண்டாம் கட்ட தலைவர்கள். ஸ்டாலின் மனைவி சாந்தா, மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகியோர் அடங்கிய மும்மூர்த்திகள்தான், ஸ்டாலின் குரலாக ஒலிக்கிறார்கள். மூவர் அணி எடுக்கும் முடிவின்படி தான் தி.மு.க.வையே வழிநடத்துகிறார் என்று எரிமலை போல பொங்குகிறார்கள் தி.மு.க மீதான அக்கறையுள்ள திராவிட சிந்தனையாளர்கள். தப்பித்தவறி தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் ஒருவேளை அமர்?ந்தாலும், பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி ஆகியோரின் சிந்தனைகளுக்கு ஏற்ப ஆட்சி நடக்குமோ? அல்லது அவர்களின் ஆட்சியோடு ஒப்பிட்டுச் சொல்லும் அளவிற்கோ நடக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சிலர்.
பொதுமக்களிடம், தி.மு.க.வினரிடம் உள்ள அவநம்பிக்கையை முதலில் வென்று, பிறகு ஆட்சிக் கட்டிலில் அமருவாரா ஸ்டாலின்.
அவரின் தலையெழுத்து பொதுமக்கள் கையில் இல்லை. தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் கையில்தான் உள்ளது என்பதுதான் விசித்திரம்.. காத்திருப்போம்…